யோகா - பத்மாசனம்
யோகாசனம் செய்வதால் உடல் ஆரோக்கியம் பெருவதுமட்டும் இல்லாமல் ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு, மனஅமைதி பெறுகிறோம். உங்களின் உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்குங்கள். முதலில் சற்று தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ஓர் அங்கமாக மாறிவிடும். 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சியுடன் கலந்த தியான முறை தான் யோகக் கலை ஆகும். ஆசனங்களில் பல வகை ஆசனங்கள் உள்ளன. இப்போது பத்மாசனம் பற்றி பார்ப்போம். “பத்மம்” என்றால் தாமரை என்று பொருள். “ஆசனம்” என்றால் இருக்கை என்று அர்த்தம் அதாவது ஒருநிலையில் அசையாமல் இருப்பது.
பத்மாசனம் செய்யும் முறை :
♣ தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும்.
♣ வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து இடது காலின் தொடை மீது - குதிகால் தொப்புளை தொடுமளவிற்கு வைக்கவும்.
♣ இதேபோல, இடது காலையும் மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து வலது காலின் தொடையின் மீது - குதிகால் தொப்புளை தொடுமளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.
♣ இரண்டு முழங்கால்களும் தரையில் படுமாறும், கால் பாதங்கள் மேற்புறமாக இருக்கும் வண்ணம் அமர வேண்டும். அப்பொழுது முதுகுத் தண்டு நேராக இருத்தல் வேண்டும்.
♣ இவ்வாறு அமர்வது சிரம்மாக இருந்தால், சிறிது நேரத்திற்குப் பின்பு, கால்களை மாற்றி மீண்டும் அதே நிலையில் அமரலாம்.
பத்மாசனம் செய்யும் போது வைக்கும் முத்திரை :
♣ பத்மாசனத்தில் அமர்ந்து கையின் கட்டைவிரலின் முதல் அங்குலாஸ்தியை ஆள்காட்டி விரலின் நுனி தொடுமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.
♣ இந்த முத்திரைக்கு சின்முத்திரை என்று சொல்லுவார்கள்.
♣ இவ்வாறு இரண்டு கைகளையும் சின்முத்திரையிட்டு முழங்கால் முட்டிகளின்மேல் கைகளை நீட்டிப் பொருத்திக் கொள்ள வேண்டும்.
பத்மாசனம் செய்வதின் நன்மைகள் :
♣ மூளையை அமைதிப்படுத்தும்.
♣ நன்றாக பசி எடுக்கும்.
♣ உடல் முழுவதும் தளர்ந்த நிலைக்கு வரும்.
♣ முழங்கால்களையும், முட்டிகளையும் நன்கு விரிக்கும்.
♣ அடி வயிறு, முதுகுத் தண்டு, சிறுநீரகப்பை ஆகியவற்றிற்கு புத்துணர்வு கொடுக்கும்.
♣ மனித நரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சியைப் பெறுகிறது.
♣ மன அமைதியின்மையும், மனச்சஞ்சலங்களும் மறைகின்றன.
♣ முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், கால் எலும்புகள் ஆகியன வலிமை பெறுகின்றன.
No comments:
Post a Comment