19-04-2016 இன்றைய வரலாற்றுச் சுவடுகள்.!
முகேஷ் அம்பானி
இந்திய தொழில் அதிபரான முகேஷ் அம்பானி 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பையில் பிறந்தார். இவர் இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். இவர் இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் எனப் போற்றப்படும் திருபாய் அம்பானியின் மகன் ஆவார். ரிலையன்ஸ் என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷ் அம்பானியின் பங்களிப்பு முக்கியமானது.
2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ், இவரது பெயரைப் பட்டியலில் வெளியிட்டது. மேலும் இவர், ஆசியாவின் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகின் 19 வது பணக்கார மனிதராகவும் கணிக்கப்பட்டு, அப்பட்டியலில் இடம்பெற்றார். அதுமட்டுமல்லாமல், இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்குகிறார் முகேஷ் அம்பானி.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் : ஆரியபட்டா
ஆரியபட்டா இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆகும். இந்தியாவில் வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் பெயரில் இந்த முதல் செயற்கை கோள் அனுப்பப்பட்டது. ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. இதன் எடை 360கிகி ஆகும். இது 26 பக்க கோண வடிவுடையதாக இருந்தது. சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டியன்யார் ஏவுதளத்தில் இருந்து 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ஏவப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 619 கிமீ உயரத்தில் பறந்து வந்தது இந்த ஆரியபட்டா. எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது.
சார்லஸ் டார்வின்
பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி பிறந்தார். இவர் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை ஆகும். இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும் 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் "குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன்" என்று கூறினார். இவருடைய இந்தக் கருத்துக்கள் இன்றும் அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை ஆகும். சார்லஸ் டார்வின் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி காலமானார்.
1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி உலகிலேயே முதன்முதலாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் நியூயார்க் நகரில் செயல்படத் துவங்கியது.
1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி உருது மற்றும் வங்காள மொழி ஆகியவை பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டது.
சமண சமய மக்களின் முக்கிய திருவிழாவான மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 19 ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment