ஆக்ரா கோட்டை
ஆக்ரா கோட்டை இந்தியாவில் ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்துக் கோட்டை ஆகும். இது இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு கோட்டையாக கருதப்படுகிறது.
வரலாறு :
இக்கோட்டையில் பல அரசர்கள் வாழ்ந்து இருந்தாலும் அக்பரின் பேரனான பேரரசன் ~hஜகான் காலத்திலேயே இக்கோட்டை இன்று காணப்படும் நிலையை எய்தியது. இவர் பழைய இடிந்த கட்டிடங்களை அனைத்தும் புதிய கட்டிடங்களாக வடிவமைத்தார்.
கோட்டையின் அமைப்பு :
இக்கோட்டை அரைவட்ட தள வடிவம் கொண்டது. இந்த அரை வட்டத்தின் நாண் ஆற்றுக்கு இணையாக இருக்குமாறு கட்டிடம் அமைந்துள்ளது. இக்கோட்டை மதில் 70 அடி உயரம் கொண்டது. வட்டவடிவமான பெரிய காவலரண்கள் சீரான இடைவெளிகளில் அமைந்துள்ளன. நான்கு பக்கங்களிலும் நான்கு நுழைவாயில்கள் உள்ளன.
மேற்குப் பக்கத்தில், நகரத்தை நோக்கியுள்ள டில்லி வாயிலே மிகப் பெரிய வாயில் ஆகும். இது 1568 ஆம் ஆண்டில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இது வெள்ளைச் சலவைக்கல்லால் கட்டப்பட்டு உட்பதிப்பு வேலைகள் செய்யப்பட்டன. இது அக்கால முகலாயர்களின் அதிகாரம், செல்வவளம் ஆகியவற்றைக் காட்டுவதாகும்.
இந்தியாவின் கட்டிடக்கலை வரலாற்றைப் பொறுத்தவரை இக்கோட்டை மிகவும் முக்கியமானது. வங்காளம், குஜராத் போன்ற பகுதிகளுக்குரிய கட்டிடக்கலைப் பாணிகளில் கட்டப்பட்ட 500 கட்டிடங்கள் கோட்டைக்குள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவற்றுள் சில அக்பரால் தனக்கெனக் கட்டப்பட்ட வெள்ளைச் சலவைக்கல் அரண்மனைகளைக் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. மேலும் பல 1803 ஆம் ஆண்டுக்கும், 1862க்கும் இடையில், பாசறைகளை அமைப்பதற்காகப் பிரித்தானியரால் இடிக்கப்பட்டன. தற்போது முப்பது வரையான முகலாயர் கட்டிடங்களே எஞ்சியுள்ளன. இவற்றுள், டில்லி வாயில், அக்பர் வாயில், வங்காள மகால் எனப்படும் இரு அரண்மனை என்பவை அக்பர் காலக் கட்டிடங்களுக்குச் சான்றாக நிற்கின்றன.
வங்காள மகால் எனப்படும் அரண்மனையும் சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டதே. இது இப்போது அக்பர் மகால், செகாங்கீர் மகால் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வரலாற்று அடிப்படையில் ஆர்வமூட்டக்கூடிய இந்து, இசுலாமிய கட்டிடக்கலைப் பாணிகளின் கலப்புக்கள் இங்கே காணப்படுகின்றன. இசுலாம் மதத்தின் அடிப்படையில் உயிரினங்களின் வடிவங்களை அழகூட்டல்களில் சேர்ப்பது தகாததாகக் கருதப்படும். ஆனால் இங்கே யானைகள், பறவைகள் போன்ற உயிரினங்களை உள்ளடக்கிய அழகூட்டல்கள் காணப்படுகின்றன.
கோட்டையின் சிறப்புகள் :
பெரும் முகலாயப் பேரரசர்களான பாபர், உமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் போன்றவர்கள் இக்கோட்டையில் வாழ்ந்துள்ளார்கள்.
இங்குதான் மிகப்பெரிய நிதிக் கருவூலமும், நாணயத் தயாரிப்பிடமும் உள்ளது.
இது உலகப் புகழ் பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு வட கிழக்கில் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வெளிநாட்டுத் தூதர்கள், பயணிகள், உயர் அலுவலர்கள் போன்று இந்திய வரலாற்றை உருவாக்கிய பலரும் இந்தக் கோட்டையில் காலடி பதித்துள்ளனர்.
இது போன்று இந்தியாவில் உள்ள பல கோட்டைகளையும், வரலாற்று சிறப்புமிக்க தளங்களையும் பாதுகாப்போம்!!
No comments:
Post a Comment