சித்ரா பௌர்ணமி விரத மகிமைகள்
சித்ரா பௌர்ணமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பௌர்ணமியானது எமதர்மனின் கணக்காளரான சித்ரகுப்தருக்கு மிகவும் புனிதமானது. எமதர்மனின் உதவியாளரான சித்திரகுப்தன் நம் பாவக்கணக்குகளை வைத்து நம்முடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கேற்ப பலன்களை வழங்குகிறார். சித்ரா பௌர்ணமி அன்று சித்ர குப்தனை நினைத்து விரதத்தை கடைபிடித்தால் நல்ல பலன் கிடைப்பது உறுதி.
விரத முறைகள் :
✤ பொதுவாக மனிதனின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, தெய்வ வழிபாடுகளும், விரதங்களும் தான். அந்த விரதங்களில் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப்பலனை வழங்கும் என்பது நம்பிக்கை. சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு விரதம் இருந்தால் பாவ வினைகள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
✤ சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் விநாயகர் படத்தை வைக்க வேண்டும். அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். 'சித்ரகுப்தா" என்று, அவரது நாமத்தை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
✤ உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும். மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலை வாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை நைவேத்தியம் செய்யலாம்.
✤ படையலுடன் எல்லாக்காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதனம் செய்ய வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி, ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.
சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம்
லேகணீ பத்ர தாரிணம்
சித்ர ரத்னாம் பரதாரம்
மத்யஸ்தம் சர்வ தேஹினாம்
என்ற மந்திரத்தை வழிபாட்டின் போது கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும்.
சித்ரா பௌர்ணமி விரத பலன்கள் :
சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று, நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பௌர்ணமி பூஜையின் பலன்கள் ஆகும்.
சித்திரைப் பௌர்ணமியன்று கிரிவலம் வருதல், கோவில்களிலும் புனிதத்தலங்களிலும் தம் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்தல் போன்றவை சிறப்பானவையாகும்.
சித்ரா பௌர்ணமி நிலாசோறு :
சித்ரா பௌர்ணமி நாளன்று, இரவு பொழுதை ஆற்றங்கரையில் குடும்பத்துடன் கழித்து மகிழும் பழக்கம் தமிழர்களிடையே இருந்து வருகிறது. அன்று உறவினர்கள் எல்லாம் ஒன்று கூடி விதவிதமான உணவு சமைத்து ஆற்றங்கரை, தோப்புகள், கடலோர மணல் பகுதிக்கு செல்வார்கள். அங்கு அமர்ந்து தாங்கள் சமைத்து எடுத்து வந்த உணவுகளை நிலாவொளியில் அமர்ந்து நிலாச்சோறு உண்டு மகிழ்வார்கள்.
No comments:
Post a Comment