மகாவீரர் ஜெயந்தி
இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களில் சமண மதமும் குறிப்பிடத்தக்கது. சமண மதத்துறவியாக வாழ்ந்தவர் மகாவீரர் ஆவார். பிற உயிர்களுக்கு தீங்கறியாத நிலையே மகாவீரரின் வாழ்க்கை லட்சியங்களில் மிகவும் முக்கியமானதாகும். மகாவீரரைப் பின்பற்றி அவரது வழியில் நடப்போர் ஜைனர்கள் அல்லது சமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சமணர்கள் மட்டுமல்லாது மகாவீரரின் போதனைகளை பின்பற்றுவோர் அனைவருமே மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். 19.04.2016 இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மகாவீரரின் வாழ்க்கை வரலாறு :
வைசாலிக்கு அருகிலுள்ள குண்ட கிராமம் என்னுமிடத்தில் கி.மு. 599 இல் ஒரு அரசக் குடும்பத்தில் பிறந்தார் மகாவீரர். பெற்றோர் அவருக்கு வர்த்தமானர் என்று பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தனர். அவருடைய தந்தை சித்தார்த்தர், தாயார் திரிசலை ஆவார். அரசக் குடும்பத்தில் பிறந்ததால், மிகவும் செல்வாக்காக வளர்க்கப்பட்டார். மகாவீரருடைய பிறந்த நாளை அவரது தந்தை மிகச் சிறப்புடன் கொண்டாடி மக்களுக்கு பல உதவிகளையும், நன்மைகளையும் செய்து வந்தார். இருப்பினும் அச்சிறுவயதிலே ஆன்மீகநாட்டம் கொண்டவராகவும், தியானத்திலும், தன்னறிவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். மகாவீரருக்கு எல்லா கலைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் யசோதரை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண் குழந்தை பிறந்தது. மகாவீரர் தனது 36வது வயதில் உலக வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொள்ளத் துவங்கினார்.
மகாவீரரின் ஆன்மீக பயணம் :
மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் 12 ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட மகாவீரர் அவர்கள், 'சாலா' என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர் 'மகாவீரர்' என அழைக்கப்பட்டார். மகாவீரர் என்றால், 'பெரும்வீரர்' என்று பொருள் ஆகும். தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார். வெறும் கால்களில், துணிகள் ஏதும் இன்றி, அவர் போதித்த போதனைகளைக் கேட்க அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டது மட்டுமல்லாமல், சமண சமயம் இந்தியாவெங்கும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இதனால், சமண மத குருமார்கள் வரிசையில் மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகப் போற்றப்படுகிறார். இவரே சமண சமயத்தில் தோன்றிவித்த கடைசி தீர்த்தங்கரும் ஆவார்.
மகாவீரரின் போதனைகள் :
மகாவீரரின் போதனைகள், அன்பையும், மனிதநேயத்தையும், அகிம்சையையும் போதிக்கும் உன்னத கோட்பாடுகளாக விளங்கியது.
மகாவீரர், 'ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும், அது, தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக 'கர்மா' என்னும் வினைப் பயன்களை அடைய நேரிடும்' என போதித்தார்.
இதிலிருந்து விடுபட, மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் 'நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்' போன்றவற்றை கடைப்பிடித்தால், 'சித்த நிலையை அடையலாம்' எனவும் போதித்தார்.
உண்மையை சொல்லப்போனால் மகாவீரர் அகிம்சையை தன்னுடைய கொள்கையாக போதித்த மாபெரும் சீர்த்திருத்தவாதியாக போற்றப்படுகிறார்.
அகிம்சை வழியையும், அன்பு வழியையும் மக்களுக்கு உணர்த்தி, சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் கி.மு.527இல் பீகாரிலுள்ள 'பாவா' என்னும் இடத்தில் தன்னுடைய 72வது வயதில் இறந்தார்.
No comments:
Post a Comment