வீட்டுக்கடனை செலுத்தி முடிக்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள்
வீட்டுக்கடனை செலுத்தி முடிக்கும்போது பின்பற்ற வேண்டிய சில முக்கிய நடைமுறைகள் குறித்து ஆய்வாளர்கள் சில குறிப்புகளை தந்திருக்கின்றனர். அவற்றை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
1. வீட்டுக்கடனுக்காக விண்ணப்பித்த சமயத்தில், அந்த விண்ணப்பத்தில் “சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்“ என ஒரு பட்டியல் இருந்திருக்கும். கடனை முடிக்கும்போது அந்த பட்டியலை அவசியம் பார்த்து அனைத்து அசல் ஆவணங்களும் மீண்டும் கைக்கு வந்து விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. “அனைத்தும் சரியாக இருக்கிறது” என ஒப்புகை படிவத்தில் கையொப்பம் இடுமுன், சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக இருக்கின்றனவா, நல்ல நிலையில் உள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரி ஒருவர் முன்னிலையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. வீட்டுக்கடன் கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து ஆட்சேபணையில்லா சான்றிதழ் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் எந்த சொத்தின் மீது கடன் வழங்கப்பட்டதோ அதன் முகவரி, கடன் வாங்கியவரின் பெயர் மற்றும் அந்த கணக்கின் எண் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
4. “சிபில்” என்றழைக்கப்படும் கடன் தகவல் நிறுவனத்திடம், “வீட்டுக்கடன் செலுத்தி முடிக்கப்பட்டு விட்டது” என தெரிவித்து விடுமாறு, கடன் கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தை கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறை நிறைவடைய, கடன் செலுத்தி முடிக்கப்பட்ட நாளில் இருந்து 30 தினங்கள் வரை ஆகும்.
5. கடனை செலுத்தி முடிக்கும்போது, குறிப்பிட்ட சொத்தின் மீது வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு பிணை உரிமை நீங்கி விட்டதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி ஏதேனும் பற்றுரிமை எஞ்சியிருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட சொத்தை விற்கும்போது பிரச்சினைகள் உருவாகும்.
No comments:
Post a Comment