23-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்
உலக புத்தக தினம்
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில் ஏப்ரல் 23 ஆம் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட தினம்
புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதலாவது கோட்டையாகும். பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான சென்னையில் கட்டத் தொடங்கப்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக்கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும். கோட்டை புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
மாக்ஸ் பிளாங்க்
கதிரியக்க அலைவீச்சு இயக்கவியலின் தந்தை என்று போற்றப்படும் மாக்ஸ் பிளாங்க் 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஜெர்மனியில் பிறந்தார். முதலில் வெப்ப இயக்கவியலில் ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். இதன் இரண்டாவது விதியில் கவனம் செலுத்தினார். இந்த ஆராய்ச்சி இவரை கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. கரும்பொருள் கதிர்வீச்சினை துல்லியமாக விளக்கும் ஒரு எளிய, சுருக்கமான இயற்கணித சூத்திரத்தை கண்டறிந்தார். மேலும், ஒளி அலைகளின் ஆற்றல் குறித்து புதிய கோட்பாட்டை உருவாக்கினார். அந்த அலகுக்கு 'குவான்டா" என்று பெயரிட்டார். குவான்டம் கோட்பாடு குறித்த இவரது கண்டுபிடிப்புகளுக்காக 1918இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தனது ஆய்வுகள் அடிப்படையில் பல கட்டுரைகளை வெளியிட்டார். ஏராளமான புத்தகங்களும் எழுதியுள்ளார். 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் வளர்ச்சியில் மிக முக்கிய சாதனையை நிகழ்த்திய மாக்ஸ் பிளாங்க் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி தனது 89வது வயதில் காலமானார்.
1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இந்திய அரசியல் கட்சியான இந்திய தேசிய லீக் உருவானது.
தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி அவர்கள் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தார்.
1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment