சித்ரா பௌர்ணமி சிறப்புக் கோவில் : மங்கலதேவி கண்ணகி கோவில்
மங்கலதேவி கண்ணகி கோவில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோவில் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்
கோவில் வரலாறு :
கோவலன், சிலம்பு திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் மரண தண்டனை அளித்துக் கொல்லப்படுகிறான். இச்செய்தி அறிந்த கண்ணகி அரண்மனைக்குச் சென்று தன்னிடமுள்ள மற்றொரு கால் சிலம்பை உடைத்துக் காண்பித்துத் தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்து அறநெறி தவறிய பாண்டிய மன்னனையும், துணை நின்ற தீயோரையும், அவர்கள் வாழ்ந்த மதுரை மாநகரையும் தன் கற்பின் சக்தியால் எரிந்து போகச் சாபமிடுகிறாள்.
அவள் சாபத்தால் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்து சாம்பலானது. மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.
இங்கு வசித்து வந்த குன்றத்துக் குறவர்களிடம் தனது வாழ்க்கை பற்றியும், தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன், கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.
இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும், கேட்டதையும் கூறினார்கள். இதை கேட்ட மன்னன் சேரன் செங்குட்டுவன், இமயத்திற்கு சென்று கல் எடுத்து, அதை கங்கையில் நீராட்டி, கண்ணகிக்கு சிலை வடித்து, அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
கோவில் திருவிழா :
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோவிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் சித்திரை முழுநிலவு திருவிழாவின் போது மட்டும் பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. தற்போது, திருவிழாவின் போது சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
மணிகண்ட ஷர்மா
9962225358
No comments:
Post a Comment