ஒயில் கும்மி
♠ ஒயில் கும்மி என்பது, ஒயிலாட்டத்துடன் கையில் கும்மியடித்துக் கொண்டே ஆடும் ஒருவகை ஆட்டமாகும்.
♠ குறைந்த அளவிலான அசைவுகளைக் கொண்ட ஒருவகைக் கும்மி ஆட்டமாகும். இது ஒயிலாட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய கலை ஆகும். நாட்டுக் கொட்டு ஆட்டம் என்றும், இக்கலை அழைக்கப்படுகிறது. இவ்வாட்டத்திற்கென, தனியானப் பயிற்சிகள் எதுவும் இல்லை.
♠ இக்கலையில் பானைத்தாளம், தோற்பானைத்தாளம், சிங்கி ஆகிய இசைக்கருவிகளுள், ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர். வேளாண் தொழிலில் செழிப்பு வேண்டியும், வெப்ப நோய் குறைய வேண்டியும், மழையை எதிர்நோக்கியும், ஒயில் கும்மி நிகழ்த்தப்படுகிறது .
♠ வண்ண துணிகளை கையில் வைத்துக்கொண்டு பாடலுக்கு ஏற்ப உடலை வளைத்து ஆடும் ஓயிலாட்டத்தில் இருந்து சற்று மாறுபட்டது ஒயில் கும்மி.
♠ ஒயிலாட்டம் ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது. ஒயில் கும்மியில் பெண்களும், ஆண்களோடு இணைந்து ஆடுவார்கள். முதன்மை பாடகர் பாடும் ராகத்திற்கு ஏற்ப இடுப்பை வளைத்து, கைகளை அசைத்து கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
♠ ஒயில் கும்மியில் 10 பேர் வட்டமாக நிறபர். அல்லது இருவரிசையில் பத்து முதல் பன்னிரண்டு பேராக நிற்பதும் உண்டு. வேட்டியைப் பஞ்சகச்சம் வைத்துக் கட்டி, வண்ணச்சட்டை, தலையில் குஞ்சம் வைத்த தலைப்பாகை, கழுத்தில் பட்டை ஆகியவற்றைக் கட்டியிருப்பர்.
♠ வாத்தியார் எனப்படும் குரு இவர்களின் எதிர் நிற்பார். இவரே பாட்டையும் ஆட்டத்தையும் துவக்கி வைப்பார். குழுவினர் ஆளோடு ஆள் உரசாமல் ஒரு முழம் இடைவெளியில் நின்று பாடிக்கொண்டே ஆடுவர். இந்த ஒயில் கும்மியில் வரும் பாடல்கள் பொதுவாக சங்கராபரணம் இராகத்தில் அமையும்.
♠ மகிழ்ச்சி, சோகம், சோர்வு, துக்கம், கோபம், பிரிவு என அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் இசையுடன் வெளிப்படும்.
♠ ஆடுபவர்களும் அதற்கேற்ப முக பாவனைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கும்மியாட்டத்துடன் ஒன்றவைப்பார்கள். முன்பு பெண்கள் விழாக்களில் கும்மி ஆட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
♠ குறிப்பாக பங்குனி உத்திரம் விழாவின் போது தேரின் முன்பு ஒயில் கும்மி ஆடுவது வழக்கம்.
No comments:
Post a Comment