20-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்
ஹிட்லர்
ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய ஹிட்லர் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி பிறந்தார். இவர் 1933 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934 ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருந்தார்.
முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது.
அப்படைகள் இவரை நெருங்குவதற்கு முன் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவெடுகள் கூறுகின்றது. அவரோடு அவர் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
கார்ல் பிரவுன்
கம்பியற்ற தகவல்தொடர்பு முறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் 1850 ஆம் ஆண்டு ஜுன் 6 ஆம் தேதி பிறந்தார். இவர் சிறுவயதில் கல்வியில் ஆர்வம் மிகுந்தவராகவும், அறிவியலில் மிகச் சிறந்த அறிவு படைத்தவராகவும் திகழ்ந்தார். இவர் சிறுவயதிலேயே அறிவியல் கட்டுரைகள் எழுதி அவை அனைத்தும் பல இதழ்களில் வெளியிடப்பட்டன. இருபது ஆண்டுகள் பல்கலைக்கழக ஆசிரியப் பணியிலும், இயற்பியல் தொடர்பான ஆய்வுகளிலுமே கவனம் செலுத்தினார். பலவிதமான மின்னாய்வுக் கருவிகளை உருவாக்கினார். 1897இல் எதிர்மின் கதிர் அலையியற்றி ஒன்றையும், மின்னோட்டமானி ஒன்றையும் உருவாக்கினார். 1902 இல் சாய்தள அலைபரப்பி சாதனம் மூலம் அனுப்பிய அலைகளைத் திரும்பப் பெறுவதில் வெற்றி கண்டார். இவர் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி இறந்தார்.
1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆந்திர முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி பிறந்தார்.
1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி, அப்போலோ-16 விண்கலம் சந்திரனில் இறங்கியது.
No comments:
Post a Comment