தமிழ்ப் புத்தாண்டு - துன்முகி
தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களால் கொண்டாடப்படும் புத்தாண்டு விழாவாகும். இந்தியாவில் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனி~;கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் :
♣ தமிழ் வருட பிறப்பு தமிழக மக்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது. நவ கோள்களைக் கொண்டே உலக இயக்கம் நடைபெறுகிறது. நவ கோள்களில் தலைமை கோளாக சூரியன் உள்ளார். இந்த சூரியன் சித்திரை மாதத்தில் தான் ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகி, பங்குனி வரை 12 ராசிகளிலும் சஞ்சரித்து, மறுபடியும் சித்திரையில் மேஷ ராசியில் உதயமாகும். இதுவே சித்திரை வருடப்பிறப்பு ஆகும்.
♣ இந்த தினத்தில் இறைவனை மனம், மெய் ஆகியவற்றால் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு முன் வரும் துன்பங்கள், வினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பது நம்பிக்கை. மேலும் நாம் முன்னெடுக்கும் எந்த நல்ல காரியமும் தங்கு தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். மேலும் லட்சுமி கடாட்சமும், பிறவி துன்ப நீக்கமும், தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும் என்று இதனை கண்டறிந்த ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.
♣ சித்திரை முதல் நாளில், பலவகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் முதலானவை கொண்டு செய்யப்படும் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். பின்னர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை மனதார தொழுதல் வேண்டும். அத்துடன் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது ஒவ்வொருவரையும் வாழ்வாங்கு வாழச் செய்யும். மங்கலப் பொருட்கள் அணிந்து, இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, சூரிய நமஸ்காரம் செய்து பிரகாசம் நிறைந்த வாழ்வு வேண்டியும் வழிபாடு செய்யலாம்.
♣ சித்திரை வருடபிறப்பை கேரள மக்கள் விஷுக்கனி காணல் என்று கொண்டாடுவர். வருடப்பிறப்பிற்கு முதல்நாள் பூஜை அறையை தூய்மைசெய்து வீட்டில் உள்ள பொன், வெள்ளி, நகைகள், பணம், நிலைக்கண்ணாடிகள், வெற்றிலைபாக்கு, மலர்கள், பழங்கள் முதலிய மங்கள பொருட்களை ஒருதட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து இருப்பார்கள். சித்திரை வருட பிறப்பன்று வயதான பெண் குளித்து பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு, வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்புவார்.
♣ அவர்கள் கண்கள் மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு சென்று கண்களை திறந்து சுவாமி படத்தை வணங்கி தட்டில் வைத்திருக்கும் பொருட்களை பார்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பார்கள். இவ்வாறு செய்தால் இனிவரும் நாட்களில் முத்தான வாழ்வு அமையும். மகிழ்ச்சி நிரம்பும். மங்கள பொருட்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.
துன்பம் நீக்கி இன்பம் கொடுக்கும் துன்முகி வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
No comments:
Post a Comment