பண்டைக்காலத் தமிழகத்தின் மருத்துவம்
பண்டைக்காலத் தமிழர்கள், மருந்தையும் மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் சிறந்து காணப்பட்டார்கள் என்பதற்கு, சிந்துவெளி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் சான்றாக அமைகின்றன.
அறுவை மருத்துவக் கருவி:
புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செம்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர்.
அறுவை மருத்துவம்:
போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து, மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது.
மருந்துப் பொருள்கள்:
சங்க கால நூல்களில் கந்தகத்தினால் செய்யப்படுகின்ற மருந்து பால்வினை நோய்க்கும் உணவினால் ஏற்படக்கூடிய நஞ்சு நோய்க்கும் மருந்தாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவப் பூக்கள்:
சங்க இலக்கியமான பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டை இயற்றிய கபிலர் 98 வகையான பூக்களைக் குறிப்பிடுகிறார். அவை அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரம், செடி கொடிகளாகும்.
குரல் வளம் தரும் மருந்து:
திப்பிலி, தேன், மிளகு, சுக்கு, இம்பூரல், பசுவின்பால், தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்து உண்டுவர குரலின் வளம் அதிகப்படும் என்கின்றனர்.
அழகுக்கு மருந்து:
நாட்டிய நாயகி கலைச் செல்வி மாதவி, தன் காதல் தலைவன் கோவலனுடன் உலாவி வர-தன்னை ஒப்பனை செய்து கொள்ள நீராடுகிறாள். மாதவி நீராடிய நன்னீரில், பத்துவகைப் பட்ட துவர், ஐந்து வகைப்பட்ட விரை, முப்பத்திரண்டு வகை ஓமாலிகை ஆகிய நாற்பத்தேழு மருந்துப் பொருள்களும் ஊறிக் காய்ந்தது என்கிறது சிலம்பு.
குழந்தை மருத்துவம்:
குழந்தைகள் நோயையோ, நோயின் குறியையோ கூறும் நிலையில் இருப்பதில்லை. குறிப்பறிந்தும் சோதித்தறிந்துமே மருத்துவம் பார்க்க வேண்டியிருக்கும்.
பிரமிச்சாறு, கண்ட சருக்கரை தேன், நறுநெய் ஆகியவற்றுடன் காடியைக் கூட்டி, பொன்னினால் தேய்த்துக் குழந்தைகள் உண்ணுகின்ற அளவிற்குப் பக்குவப்படுத்திய மருந்தாக்கி தினமும் வாய்வழி ஊட்டினர் என்றதனால் குழந்தை மருத்துவத்தினை மகளிரும் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது.
விலங்கு, தாவர மருத்துவம்:
பண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும் உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்தனர்.
பண்டைய தமிழர்கள் மருத்துவம் பார்த்ததோடு, நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது பிரமிக்க வைக்கிறது.
மேற்கண்ட தொகுப்பில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள்
முன்னோர்
No comments:
Post a Comment