மஹா பெரியவா அற்புதங்கள்
“ஒன்னோட ஒருமாச சம்பளத்த எனக்கு குடுப்பியா?
ஒருநாள் விடியக்காலம் ஞான பானுவை தன்னுள் கொண்ட காஞ்சி மடம் மெல்ல விழித்துக்கொண்டிருந்தது. ரம்யமான அதி தெய்வீகமான சூழல். பெரியவாளுடைய விஸ்வரூப தர்சனம் முடிந்து அவரவர் அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர். தன்னுடைய அணுக்கத் தொண்டர்களிடம் அந்த நேரம் பெரியவா விஸ்ராந்தியாக பேசிக்கொள்ளுவது உண்டு. அன்றும் அப்படியே பொழுது விடிந்தது……
“ஏண்டா……நம்மூர்ல எத்தனையோ ஆயிரக்கணக்கான கோவில் இருக்கு. ஆனா, அந்தக் கோவில்ல இருக்கற அர்ச்சகா எல்லாரும் மூணு வேளை நிம்மதியா சாப்டறாளோ? ….மதுரைவீரனுக்கு ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற கிராமத்துப் பூஜாரில்லாம் சந்தோஷமா இருக்காளோ? பெருமாளுக்கு பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார் குடும்பமெல்லாம் வயத்துக்கு மூணுவேளை சாப்ட்டுண்டு இருக்காளோ?…..இதையெல்லாம் யாராவுது அப்பப்போ விஜாரிக்கறேளோ?..”
பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகையுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். எனவே எல்லாரும் “நிச்சயமாக தங்களுக்கு இதெல்லாம் தோன்றியதே இல்லை” என்ற உண்மையை ஒத்துக்கொள்வது போல், பேசாமல் முழித்தார்கள்.
“……ஏன் கேக்கறேன்னா….ஏதோ மூணு நாலு கோவில்ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோசிங்கோ!..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராமலிங்க பட் என்ற குஜராத்தி ப்ராம்மணர் வந்து நமஸ்கரித்தார். பெரியவாளிடம் மிக மிக ஆழ்ந்த பக்தி கொண்டவர், ஆசாரம் அனுஷ்டானம் கடைப்பிடிப்பவர்கள் லிஸ்டில் இவருடைய பெயர் இருக்கும். சென்னை IIT யில் ப்ரொபஸராக இருப்பவர். நமஸ்காரம் பண்ணியபின் மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கலாம் என்று திரும்பி நடந்தவரை, வலக்கையின் நடுவிரலையும்,கட்டைவிரலையும் சேர்த்து போடும் “டொக்” கென்ற பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு சத்தம் திரும்பிப் பார்க்கவைத்தது. ஆள் காட்டி விரலால் “இங்கே வா” என்று சைகை பண்ணினார். விடியக்காலை தர்சனத்திலேயே ஒருமாதிரி ஆனந்த மயக்கத்தில் இருந்த ராமலிங்க பட், பெரியவா தன்னை அழைத்ததும் திக்குமுக்காடிப் போனார். பவ்யமாக அருகில் வந்து நின்றார்.
“ஒன்னோட ஒருமாச சம்பளத்த எனக்கு குடுப்பியா?…..” குழந்தை மாதிரி கேட்டதும், நெக்குருகிப் போனார் பட். மோக்ஷத்தையே அனாயாஸமாக பிக்ஷையாகப் போடும் தெய்வம், ஒரு மாச சம்பளத்தை கேட்கிறதே! என்று அதிர்ந்து பேச நா எழாமல் நின்றார்.
“என்ன….. யோசிக்கறே போலருக்கு?……ஏதோ, இன்னிக்கு காலங்கார்த்தால ஒன்னை பாத்தேன்னோல்லியோ…..கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். குடுப்பியா?…..” மறுபடியும் குழந்தை ஸ்வாமி கேட்டது. வேரறுந்த மரம் மாதிரி பாதத்தில் விழுந்தார் பட்.
“பெரியவா ஆக்ஞை! எங்கிட்டேர்ந்து என்ன வேணுன்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு இதைத் தவிர வேறென்ன ஸந்தோஷம் நிலைக்கப் போறது?…” உடனேயே நாலாயிரம் ரூபாயை பெரியவாளின் திருவடியில் சமர்ப்பித்தார். அவரிடமிருந்த வந்த பணத்தை கொண்டுதான் “கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்” துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்சகர்கள்,பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி செய்துகொண்டு வருகிறது.
டிரஸ்ட் துவங்கியதும் வேதமூர்த்தி என்பவர் ” ஹிந்து” பேப்பரில் விரிவான செய்தியாக எழுதியிருந்தார். பெரியவா அதைப் படித்துப்பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது அங்கே வந்த ராகவன் என்ற ஆடிட்டரிடம் “இந்த ஹிந்து பேப்பர்ல வந்திருக்கே….இதை எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தருவியா?…” குழந்தை ஸ்வாமி கேட்டார். ராகவனுக்கோ சந்தோஷம் தலைகால் புரியவில்லை.உடனே ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வந்து குடுத்தார்.
“ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் எடுத்துண்டு வந்தியோ?….”
“இல்லே பெரியவா…..ஆத்துல இருக்கும்”
“மெட்ராஸ்ல IIT ல ராமலிங்க பட்…ன்னு ஒர்த்தன் இருப்பான்…அவன்ட்ட அந்த பில்லைக் குடுத்துட்டு காசு வாங்கிக்கோ! ஜெராக்ஸ் போட்டுக் குடுத்ததே நீ பண்ணின பெரிய கைங்கர்யம்…” சிரித்துக்கொண்டே ஆசிர்வதித்தார்
ஜெய ஜெய சங்கரா !! ஹர ஹர சங்கரா !!
No comments:
Post a Comment