மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயில்
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைந்துள்ளது. இது ஒரு வைணவ திருக்கோயில் ஆகும். இங்குள்ள ராஜகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. இந்தக் கோவில் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கோயில் அமைப்பு :
இத்திருக்கோவிலில் உறையும் ராஜகோபால சுவாமியின் திருஉருவத்தின் உயரம் 12 அடி ஆகும். ஆலயம் நுழைவு வாயிலில் மழை நீர் சேகரிக்கப்பட ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வளாகத்தில் 16 கோபுரங்கள், 7 தூண்கள், 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் உள்ளன. உற்சவர் சிலை சோழர் காலத்தினைச் சேர்ந்த ஓரு வெண்கலச் சிலை ஆகும். இங்குள்ள குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இது ஹரித்திராந்தி என அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் இறைவன் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி மற்றும் இறைவி செங்கமலத்தாயார் ஆவார்.
வரலாறு :
திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் இருந்தனர். இவ்விருவரும் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை கிளம்பினர். வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக கூறினார். அதைக்கேட்ட முனிவர்கள் மயக்கமாயினர். நாரதர் அவர்களை எழுப்பினார். அவ்விருவரும் கண்ணனைக் காண நாரதரின் ஆலோசனைப்படி தவமிருந்தனர். பகவான் 'கிருஷ்ணராக" அவர்களுக்கு காட்சி தந்தார். அவரிடம் தங்களுக்கு கிரு~;ண லீலையைக் காட்டும்படி வேண்டினர். அவர் தனது 32 லீலைகளைக் காட்டியருளினார். அவர்களது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார்.
சிறப்புகள் :
ராஜகோபாலர் இக்கோயிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய 'குழந்தை" அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.
தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். மதுரை கள்ளழகர் கோயில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது.
பங்குனிப் பெருவிழா :
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவடையும். இந்த வருடம் 2016 பங்குனித் திருவிழா 6.03.2016 முதல் 12.04.2016 வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment