ரேசன் கார்டு முகவரியை மாற்றுவது எப்படி ?
வீடு மாறினாலோ, வேலை காரணமாக ஊர் மாறினாலோ நமது ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டியது அவசியம். அவற்றுள் குடும்ப அட்டை முகவரியை மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி இன்று காண்போம்.
தேவையான ஆவணங்கள் :
முகவரி மாறியவுடன் முதலில் மாற்ற வேண்டியது கேஸ் இணைப்பைத்தான். அதற்கு தற்போது குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தந்தை அளித்து கைப்பட ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் போதும். வீட்டு ஒப்பந்தம், கேஸ் இணைப்பின் ரசீது இவற்றின் நகல்களை இணைத்து குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
எங்கே விண்ணப்பிக்கலாம்? :
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்? :
முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் எனில் மூன்று நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அதே மாவட்டத்தில் வேறு ஊரில் கடை மாற்றம் செய்ய வேண்டுமெனில் ஏழு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுகா முகவரி மாற்றம் என்றால் ஏழு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.
தாமதமானால் என்ன செய்ய வேண்டும்? :
காலதாமதம் செய்தால் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையரிடமும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்யலாம் அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும். அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment