பவானி சங்கமேசுவரர் திருக்கோவில்
பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக அமைந்துள்ளது.
கோவில் சிறப்புகள் :
➢ வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில், சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
➢ தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் பவானியும் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோ~ங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
➢ இக்கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார்.
➢ இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திருவுருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
➢ இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
திருவிழாக்கள் :
மார்கழி, தை மாதங்களில் பன்னிரு திருமுறை விழாவும், மார்கழி பஜனையும் நடைபெறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், ஆடிப் பதினெட்டுப்பெருக்குத் திமருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வடநாட்டின் திருக்காசியைப் புண்ணியத் தலமாக வழிபடுவதற்கு இணையாகத் தென்நாட்டில் பவானி கூடுதுறையை 'இளைய காசி" என்று அழைத்து வழிபடுகிறார்கள்.
அமைவிடம் :
ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அருகில் ஈரோடு ரயில் நிலையம் உள்ளது. சேலம் மற்றும் ஈரோட்டிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.
No comments:
Post a Comment