கோரக்கர் சித்தர்
பதினெண் சித்தர்களில் 16வது இடத்தில் உள்ளவர் கோரக்கர் சித்தர் ஆவார். கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்தவர். சட்டைமுனி, கொங்கணர் ஆகியோர் இவருக்கு நெருக்கமானவர்கள். இவர் மனித வாழ்வில் ஏற்படும் முதுமைக்கும் உடலின் தளர்ச்சிக்கும் எது காரணம் என ஆராய்ந்து உடம்பினை என்றும் இளமையாய் அழகாய் இருக்க உதவும் காய கல்பத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார்.
சித்தர் வரலாறு :
ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார்.
மச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவருக்கு பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறு இன்றி வருந்துவதை கூறினாள்.
மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து 'இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய்" என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள். அவளோ 'உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே" என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள். சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று 'அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக", என்று கூறினார்.
பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண்.
மச்சேந்திரர் சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய் என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று 'கோரக்கா" என்று கூப்பிட்டார்.
அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால் கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார்.
கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிலையும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள்.
யாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.
அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார்.
கோரக்கர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவர் பொய்யூர் என்னும் இடத்தில் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. இவர் 880 வருடங்கள் 32 நாட்கள் வாழ்ந்ததாக செல்லப்படுகிறது.
No comments:
Post a Comment