15-5-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்
உலக குடும்ப தினம்
1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் மே 15 ஆம் தேதி உலக குடும்ப தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளும், இளைஞர்களும் கல்வியிலும், வாழ்க்கையிலும் சிறப்பான நிலையினை அடைய, பெற்றோரும், சமூகமும் உறுதுணையாக இருப்பது அவசியம். குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். ஒவ்வொருவரும் குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்தோடும் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதையே சர்வதேச குடும்ப தினம் வலியுறுத்துகிறது.
அனைவரின் கருத்தையும் அகத்தில் கொள்ளும் தலைவனும்..!
அன்பே உருவான புன்னகையை செம்மஞ்சலாய் முகத்தில் பூசிய தலைவியும்..!
அடங்கிய குடும்பமும் இனிய குடும்பம்..!
பியரி கியூரி
✍ பிரெஞ்சு இயற்பியலாளர் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவருமான பியரி கியூரி 1859 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி பிறந்தார். வெப்ப நிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் காந்தத்தன்மையை இழந்துவிடுகின்றன என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலை கியூரி பாயின்ட் எனப்படுகிறது. இவரது மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர். கதிரியக்கம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது இவர்களே ஆவார்.
✍ கதிரியக்கத்தைக் கண்டறிந்தமைக்காக 1903 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கெரல், மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு ஷகியூரி அலகு| என்று குறிப்பிடப்பட்டது. கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளுள் ஒருவர் என்று இவர் புகழ்பெற்றார். மனிதகுல மேம்பாட்டுக்கான பல உன்னதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பியரி கியூரி 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி தனது 47வது வயதில் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
1718 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.
1993 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் முதல் தளபதியான பீல்டு மார்ஷல் கரியப்பா காலமானார்.
1618 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை கெப்லர் மீண்டும் நிறுவினார்.
No comments:
Post a Comment