12-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
உலக செவிலியர் தினம்
பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மருத்துவத்துறையில் இன்றியமையாத ஊழியர்கள் 'செவிலியர்கள்" என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் விஷயம். 1965 ஆம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. 1974 ஆம் ஆண்டு உலக செவிலியர் அமைப்பானது, நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
சிறந்த தத்துவ ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி 1895 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்தார். மொழிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு தத்துவம், ஆன்மிகம் குறித்துப் பேசவும், எழுதவும் தொடங்கினார். வாழ்வியல், தியானம், தேடல், மனித உறவுகள், சமூக மாற்றம், மனம், சிந்தனை, விடுதலை ஆகியவை குறித்து உலகம் முழுவதும் ஏராளமான கூட்டங்களில் பேசியுள்ளார். இவரது உரைகள், உரையாடல்களில் பெரும்பாலானவை புத்தகங்களாக வந்துள்ளன.
1929 இல் 'அனைத்துலக ஆசான்" பட்டத்தையும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் துறந்தார். கடவுள், கோயில், புனித நூல்கள், சாதி, மொழிப்பற்று உள்ளிட்ட அனைத்துமே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை என்றார்.
மத மாற்றம், கொள்கை மாற்றம் என்பதெல்லாம் மனித குலத்துக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்றும் கூறினார். மனிதகுல மேம்பாட்டுக்காக தனது பேச்சாலும், எழுத்தாலும் முக்கியப் பங்காற்றிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தனது 91 வயதில் மறைந்தார்.
நவீன செவிலியல் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1820 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்தார்.
வயலின் வாத்தியக் கலைஞரான மாயவரம் வி.ஆர்.கோவிந்தராஜ பிள்ளை 1912 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்தார்.
1965 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி அன்று ர~;யாவின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.
1973 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி எட்டயபுரத்திலுள்ள பாரதியார் வீடு வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment