விடுதலை போராட்ட வீரர் : பூலித்தேவன்
பூலித்தேவன் பிறப்பு :
நமது சுந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமியான திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோயிலுக்கு வடமேற்கில் ஆவுடையார்புரம் எனும் பெயருடைய நெற்கட்டும் செவ்வல் எனும் பாளையத்தில் 1715 ஆம் ஆண்டு அப்பாளையத்தின் அதிபதியாகிய சித்திரபுத்திர தேவருக்கும், மனைவி சிவஞான நாச்சியாருக்கும் வீர மகன் பூலித்தேவன் பிறந்தார். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.
பூலித்தேவனின் வீரம் :
நெல்லை மண்ணில் பிறந்த பூலித்தேவன் சிறு வயதிலேயே போர்ப் பயிற்சிகள் அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ச்சியடைந்தார். பூலித்தேவன் ஒரு முறை காட்டிலிருந்து தப்பி வந்து கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த புலியொன்றைத் தன் கத்தியால் குத்திக் கொன்றாராம். அந்தப் பகுதி மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாதலின், இந்தச் செய்தியைக் கேள்விப் பட்ட நாயக்க அரசர் வீரனை அழைத்து வடக்கத்தான் பூலித்தேவன் என்று பட்டமளித்தாராம். அன்று முதல் பூலித்தேவன் என்றும், புலித்தேவன் என்றும் புகழாரம் சூட்டி மக்கள் மகிழ்ந்தார்கள்.
பட்டம் சூட்டுதல் :
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
பூலித்தேவனின் வீரம் மற்றும் பெருமைகள் :
முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன். இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்த மறவர். பூலித்தேவன் இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த பாளையக்காரர் போர்களின் முன்னோடி. தனது 35வது வயதிலிருந்து 52ம் வயது வரை ஆற்காட்டு நவாபு படைகளையும், கும்பினியர்கள் படையையும் எதிர்த்துப் போராடினார்.
பூலித்தேவன் நவீன ஆயுதங்கள் ஏதுமில்லாமல் மரபு ரீதியான ஆயுதங்களை மட்டுமே வைத்து வீரமுடன் போரிட்டவர். பூலித்தேவன் தனது திறமையால் வெள்ளையர்களிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், போர் வியூகத்திற்கும், கொடூரமான போர் முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிபுவால் கூட பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்லமுடியவில்லை. சுமார் 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன், 1760 - 61ஆம் ஆண்டுகளில் தோல்வியுற்றுத் தலைமறைவாகிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை.
கோயில் திருப்பணிகள் :
சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், தேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும், பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்ட கோயில் பணிகளைச் செய்துள்ளார்.
நினைவு :
பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவனின் நினைவு மாளிகை, திருமணமண்டபம் ஆகியவைகளை தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment