ஓம் குருவே துணை! ஓம் குருவே எல்லாம்!
பிறதோச வரலாறும், வழிபாடும்.
பிறதோச விளக்கம்:
இன்று "பிரதோசம்" என இடையின "ர" பயன்படுத்தி வருகிறோம். அது தவறு. வல்லின "ற" பயன்படுத்தி "பிறதோசம்" என குறிப்பிட வேண்டும்.
பிறதோசப் பூசை என்பது மனிதப் பிறவியில் ஏற்பட்டு விட்ட, ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்ற, ஏற்படப் போகின்ற தோசங்களையெல்லாம் (தோசம் = பாதிப்பு) அகற்றுவதற்குரிய பூசை (பூ+செய்) என்பது பொருளாகும்.
அதாவது மனித வாழ்க்கையில்,
விதியாலும், ஊழ்வினையாலும் பிறந்துவிட்ட தோசங்களையும், உலகியல் செயலால் பிறந்து கொண்டிருக்கின்ற தோசங்களையும்,
வருங்காலத்தில் ஊழ்வினையாலும், விதியாலும், மதியாலும் பிறக்கப்போகின்ற தோசங்களையும் வென்றிடுவதற்காக செய்யப்பட வேண்டிய பூசையே "பிறதோசம்" எனப்படும்.
அதாவது பிறந்து விட்ட தோசங்களையும், பிறந்துகொண்டிருக்கும் தோசங்களையும், பிறக்கப் போகின்ற தோசங்களையும் வெல்லுவதற்குச் செய்யக்கூடிய சிவபூசையே "பிறதோசம்" எனப்படும்.
சோதனைக்குள்ளான பிறதோச வழிபாடு:
இன்றைக்கு கோலாகலமாகவும், பேரார்வத்துடனும் பெருந்திரளான மக்கள் பிறதோச பூசை செய்கிறார்கள். ஆனால் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் "பிறதோச வழிபாடு" என்ற சொல்லை சொன்னால் ஏறத்தாழ எவருக்கும் புரிந்திருக்காது. நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிவன் கோயில் உள்ள ஊர்களில் பெரும்பாலானவர்களுக்கு பிறதோசம் என்ற சொல்லே தெரியாத, புரியாத ஒரு சொல்லாகத்தான் இருந்திருக்கிறது. இந்த இருபத்தைந்து - முப்பது ஆண்டுகளாக மட்டும் இந்தப் பிறதோசம் என்ற சொல்லும், இச்சொல்லுக்குரிய திருவிழாவும் மிகச்சிறந்த புகழையும், முதன்மையும் பெற்றுவிட்டது ஏன்? எதற்காக? எவ்வாறு? என்ற கேள்வியை எழுப்பிச் சிந்திக்க வேண்டும்.
அப்பொழுது தான் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பதினெண் சித்தர்களின் பீடமும், மடமும் இவ்வமைப்புகளின் சித்தரடியான்களும், சித்தரடியார்களும், சித்தரடியாள்களும் மேற்கொண்ட உழைப்பால் தான், தொடர் முயற்சிகளால் தான் இன்றைக்கு இப்பிறதோச வழிபாடு என்ற இச்சொல்லும் சொல்லுக்குரிய விழாவும் முதன்மை பெற்றன; மேன்மை பெற்றன; சிறப்பு பெற்றன என்ற உண்மை விளங்கிடும்.
அதாவது,
கீரன் உகம் எனப்படும் கிரேதா யுகத்திற்குரிய 17,28,080 ஆண்டுகளிலும்,
தீரன் உகம் எனப்படும் திரேதா யுகத்திற்குரிய 12,90,000 ஆண்டுகளிலும்,
தூரன் உகம் எனப்படும் துவாபர யுகத்திற்குரிய 8,64,000 ஆண்டுகளிலும்,
கலியன் உகம் எனப்படும் கலி யுகம் பிறந்து சுமார் மூவாயிரம் (3000) ஆண்டுகாலம் வரையும் மிகமிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த பிறதோச விழா எப்படியோ தங்களுடைய செல்வாக்கை இழந்து விட்டது. இந்தப் பிறதோச விழாவை மீண்டும் மறுமலர்ச்சி அடையச்செய்தால் தான் இந்து மதம் மறுமலர்ச்சியும், வளர்ச்சியும் அமைந்திடும்.
இதைப்புரிந்து, கடந்த 2000 ஆண்டுகள் இடைவெளியில் அவ்வப்போது இப்பிறதோச விழா சிறப்பு பெற்று இலைமறை காயாக மறைய நேரிட்டதையெல்லாம் முறையாகவும், நிறையாகவும் உணர்ந்திட்ட இந்து மதத் தலைமை ஆச்சாரியக் குருபீடமான பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் மடாதிபதியும், பீடாதிபதியுமான ஞானாச்சாரியார் தாம் பீடம் ஏறிய நாளிலிருந்து எடுத்துக்கொண்ட தொடர் முயற்சியால் தான் மீண்டும் பிறதோச வழிபாடு சீவாலயங்களிலும், சிவபத்தர்களிடையேயும் செல்வாக்கு பெற்றன. இதுவே இன்றைய நிலை! இனிமேல் என்றைக்குமே பிறதோச வழிபாடு மறுக்கப்பட்டு விடக்கூடாது! மறக்கப்பட்டுவிடக்கூடாது!!
பிறதோச வரலாறும், வழிபாடும்:
...மனிதர்கள் சார்பாக ஆலகால நஞ்சை எடுத்து வந்த ஆலகால சுந்தரர் சிவபெருமானிடம் "தேவர்கள் மட்டும் அமிர்தம் பருகினார்கள். மனிதர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே!" என்று வேண்டினார். அதற்கு சிவ பெருமான், "தேவர்கள் அண்ட பேரண்டங்களனைத்திற்கும் நன்மை தரும் பணிகளைச் செய்கிறார்கள். மானிடர்கள் மண்ணுலக வாழ்க்கையில் மட்டுமே நாட்டமுடையவர்களாக இருக்கிறார்கள். எனினும், இவர்களில் தேவர்களைப் போன்று பிறருக்கு என வாழ்பவர்கள் இந்த அமிர்தம் போன்ற பயனை பெறுவதற்காகவே மாதம் இருமுறை அமாவாசைக்கு முன்னும், பௌர்ணமிக்கு முன்னும் ஒரு நாள் முன்னதாக உள்ள நாளில் திருநடனம் புரியப்போவதாக அறிவித்தார். எனவே, பிறதோசம் அமாவாசைக்கு ஒரு நாளைக்கு முன்பும், பௌர்ணமிக்கு ஒரு நாளைக்கு முன்பும் கொண்டாடப்படுகிறது. மேலும், "இந்த நாளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிறதோச நடனம் நடைபெறும். இந்த இரண்டு பிறதோசங்களிலும் சீவாலயத்திற்கு சென்று தொடர் வழிபாட்டில் கலந்து கொள்பவர்கள் தேவர்களாகி விடுவார்கள். எனவே அமிர்தம் மானுடர்களுக்கு தரப்படவில்லையென்று வருந்த வேண்டாம்" என்று சுந்தரருக்கு பதில் அளித்தார்.
பிறதோச பூசை:
பிறதோச பூசை ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும், இல்லத்தையும் அருள் நிறைந்ததாக மாற்றுகிறது. நந்தியம் பெருமானின் அருளாசியால் மனிதனுக்கு பிறந்த தோசம், பிறக்கப் போகின்ற தோசம் நீங்குகிறது. இதனால் தான் இது பிறதோச வழிபாடாயிற்று.
காரிக்கிழமை வழிபாடு:
ஒவ்வொரு வாரமும் சனிபகவானுக்குரிய காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலையில் 4 மணி முதல் 6.30 மணி வரை சிவாலயத்தில் உள்ள நந்தியை அருகம்புல் மாலை அல்லது அகத்திக் கீரை மாலை போட்டு வழிபாடு செய்பவர்களுக்கு பிறதோசத்தில் பாதுகாப்பு கிடைப்பது போல் கிடைக்கும். ஆனால் , பிறதோச வழிபாட்டில் ஒன்பது கோள்களையும், அம்மனையும், ஐயனையும் பூசை செய்வதில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், காரிக்கிழமை வழிபாட்டில் ஒன்பது கோள்களையும், அம்மனையும், ஐயனையும் வழிபாடு செய்வது அவசியமாகும்.
அன்றாடப் பிறதோசம்:
சூரியன் மறைவதற்கு மூன்று நாளிகைக்கு முன்னர் இருந்து விண்மீன்கள் தோன்றுகின்ற காலம் வரை இருக்கின்ற நேரம் அன்றாடப் பிறதோச நேரம். இந்த நேரத்தில் சிவன் கோயிலுக்கு சென்று அங்குள்ள நந்தியை வழிபட்டு சிவலிங்கத்தோடு அம்மனையும் கும்பிட்டு கோயிலை மூன்று முறை இடமிருந்து வலமாக சுற்றி வழிபட வேண்டும். மூன்றாவது முறையில் சண்டிகேசுவரரிடம் கையைத் தட்டி மூன்று அல்லது ஐந்து முறை தலையை தாழ்த்தி நமது உடையில் இருந்து ஒரு நூலை எடுத்துப் போட வேண்டும்.
வளர்பிறை சதுர்த்தி பிறதோசம்:
வளர்பிறையில் சதுர்த்தி திதியில் வரும் பிறதோசம் வளர்பிறை சதுர்த்தி பிறதோசம் ஆகும்.
தேய்பிறை பிறதோசம்:
மாதப்பிறதோசம் எனப்படும் இது தேய்பிறையில் வரக்கூடியது. இது தேய்பிறை பிறதோசம் ஆகும்.
மகாப்பிறதோசம்:
தேய்பிறையில் வரக்கூடிய பிறதோசம் சனிக்கிழமை வந்தால் அது மகாப்பிறதோசம் எனப்படும்.
பிறளயப்பிறதோசம்:
பிறளய காலத்தில் அனைத்துப் பொருட்களும், உயிரினங்களும், பயிரினங்களும் சிவனுக்குள் அடங்கும். அத்தகைய பிறளய காலத்தில் வரக்கூடிய பிறதோசங்கள் பிறளயப்பிறதோசங்கள் எனப்படும்.
ஐந்து பிறதோசங்களையும் வழிபாடு செய்கிறவர்கள் எல்லா காலங்களிலும் நல்வாழ்வு வாழ்வர். இவர்களுக்கு தேவலோக இன்பம் கிடைக்கும். இவ்வுலகின் எல்லா வகையான வெற்றிகளும், அவரவர் விரும்பும் செல்வங்களும் கிடைக்கப்பெற்று நல்வாழ்வு வாழ்வார்.
இந்த பிறதோச நாட்களில் பிறை அணிந்த சிவபெருமானையும், பார்வதியையும், மகன் முருகனையும் ஒன்று சேர்த்து வழிபாடு செய்கிறவர்கள் தேவலோகத்தில் தேவேந்திரனுக்கு சமமான வாழ்க்கை பெறுவார்கள்.
மேலும்,
ஆதி சிவனார் தமது
"இருக்கு" வேதத்திலும்,
அவரது மகன் திருமுருகப் பெருமான், "அசுர" வேதத்திலும்,
"அதர்வான" வேதத்திலும்,
"யாம" வேதத்திலும்
தோசங்கள் பன்னிரண்டு பற்றி தெளிவுபட கூறியுள்ளனர்.
அதாவது இந்த பன்னிரண்டு வகையான தோசங்களும் (பாதிப்புகளும்), பன்னிரண்டு வகையான ராசிகளின், தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் உரியனவாக ஆக்குகின்றன. எனவேதான்,
"காற்று,
கருப்பு,
பேய்,
பிசாசு,
பில்லி,
சூன்யம்,
ஏவல்,
மருந்து,
வைப்பு,
களிப்பு,
கண்ணேறு,
செய்வினை"
முதலிய பன்னிரண்டையும் வெல்லுவதற்காகத்தான் பிறதோச காலத்தில் வழிபடுபவர்களுக்கு இப்பன்னிரண்டு பாதிப்பும் சிறுகச்சிறுக அகன்று விடும் என்பதை வலியுறுத்தினார் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி (இராசராச சோழனின் குருதேவர்) சித்தர் கருவூறார்.
மேலும், இவர் இப்பன்னிரண்டு பாதிப்புக்களையும் அகற்றும் ஆற்றல் நந்தி தேவருக்கு உண்டு என்பதை விளக்கும் வண்ணம் "தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி தேவருக்கு பன்னிரண்டு பற்களை வடித்து", இப்பன்னிரண்டு பற்களும் பன்னிரண்டு பாதிப்புகளுக்குச் சமமாக காட்டி நந்தி தேவரின் சிற்பம் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். இதை நீங்கள் இன்றும் தஞ்சை பெரிய கோயிலில் காணலாம்.
பிறதோச காலத்தில் நந்தி தேவர் வழிபாடு:
ஊழிக்காலத்தில் ஏழு கடல்களும் ஒன்றாகி பிரபஞ்சமே ஒன்றினுள் ஒன்று அடங்கி இறுதியில் அனைத்தும் சிவனுள் அடக்கமாகிறது. பிறம்மாதி தேவர்கள், முனிவர்கள் கூட சிவசத்தியினுள் அடங்கி ஒடுங்கிவிடுகின்றனர். ஆனால் தேவர்கள் மட்டும் எம்பெருமான் திருக்கருணையால் சிவனுள் ஒடுங்காமல் சிவனின் வாகனமாக விளங்குகின்றனர்.
எனவேதான் பிறதோச காலத்தில் சிவ வாகனமாகிய நந்தி தேவருக்கும், சிவ பெருமானுக்கும் ஈரேழு பதினான்கு உலகமும் வியக்கும் வண்ணம் அற்புதமாக முழுக்காட்டலும், படையல்களும் ஒரே மாதிரியாகச் செய்யப்பட்டு சிவனும், நந்தியும் ஒன்றென உணர்த்தப்பட்டனர். உணர்த்தப்படுகின்றனர்.
"சிவனே இந்து மதத்தின் முழுமுதற் பரம்பொருள்".
"பிறதோச வழிபாடே, சிவ வழிபாட்டை எல்லோரயும் பின்பற்றச் செய்கிறது".
எனவே, பிறதோச காயந்திரி "மந்தர", "மந்திர", "மந்திறங்களை " தனிப்பட்டவர்களும், குடும்பங்களும், கோயில்களிலும் நன்கு ஓதி எல்லோரும் பயன்பெற வேண்டும் என பதினெண் சித்தர் மடம் குருவாணை வழங்குகிறது.
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!
நந்தி தேவர் காயந்திரி மந்திரம்
நந்தியே! நந்தி தேவரே! அதிகார நந்தியே!
நந்தியம் பெருமானே! நந்தி ஈசுவரரே!
மோனப்பொருளே! ஞானபீடமே!
தேவரன்றி பிறரும் உய்ய
பிறதோசத் திருநடனம் நிகழச் செய்த
மேலோனே! அன்பின் வடிவமே! வாழ்க!
*********************************************************
துறவியாகி தவவாழ்வில் ஈடுபடுவது என்பது சாமான்யமான விஷயம் அல்ல. அதற்குரிய பூஜை, உணவு முறை, தியானம் என துறவுக்குரிய நியமங்களை யாராலும் எளிதில் பின்பற்ற முடியாது. அதுவும் சிறு வயதில் துறவியாவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. காஞ்சி மகாபெரியவர் சந்நியாசம் மேற்கொள்ளும் போது அவருக்கு வயது 13 மட்டுமே. அப்போது நடந்த நிகழ்ச்சிகள் நம் அனைவரின் உள்ளத்தையும் உருக்கக் கூடியவை என்றால் மிகையில்லை.
மகாபெரியவரின் தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். தாயார் மகாலட்சுமி. இந்த பெற்றோர் சுவாமிகளுக்கு இட்ட பெயர் சுவாமிநாதன். பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளையை துறவறத்திற்கு அனுப்ப பெற்றோர் மனம் இடம் தரவில்லை. காஞ்சி மடத்தின் அதிகாரிகள், உலக நலனுக்காகவும், காஞ்சி மடத்தின் பக்தர்களுக்காகவும் சுவாமிநாதனை விட்டுக் கொடுக்கும்படியும், அவர்களது மற்ற மூன்று குழந்தைகள் மீது அன்பு காட்டும்படியும் வேண்டினர்.
சுவாமிநாதனின் பெற்றோரோ மன
உளைச்சலுடன் செய்வதறியாமல் தவித்தனர். அப்போது சுவாமி பெற்றோரிடம், "நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? எனக்கு குருநாதரின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. நீங்கள் முழுமனதுடன் துறவு பூணுவதற்கு அனுமதி கொடுங்கள்,'' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்.
மகனின் பக்குவம் மிக்க சொற்கள் பெற்றோரின் உள்ளத்தை உருக்கியது. தங்களின் மனதைத் தேற்றிக் கொண்டு சந்நியாச வாழ்வு நடத்த அனுமதியளித்தனர். அதுவரையில் சுவாமிநாதனாக விளங்கியவர், தண்டம், முண்டம், கமண்டலம், காஷாயம் நான்கையும் ஏற்றுக் கொண்டு சந்நியாசியாக மாறினார்.
இதன் பின் அந்த புண்ணிய ஆத்மாக்கள் தம் பிள்ளையைச் சந்திக்கவே இல்லை. மனதில் எழும் ஆசாபாசங்களை போக்கவே துறவு
மேற்கொள்வதால் தாய், தந்தை போன்ற நெருங்கிய உறவினர்கள் சந்நியாசிகளை நேரில் காணும் வழக்கம் இல்லை. தங்களின் மகன் மக்களின் துன்பம் போக்கி உலகத்தை நல்வழிப்படுத்த அவதரித்த மகான் என்பதை உணர்ந்து மகிழ்ச்சி கொண்டார்களா அல்லது உலகம் எல்லாம் போற்றும் காஞ்சிப் பெரியவரை தங்களால் காண முடியவில்லையே என்று எண்ணி வருந்தினார்களா என்பதை யார்
அறிவார்......!
இருந்தாலும் பிற்காலத்தில் அந்த பெற்றோரை சந்தித்து காஞ்சிப் பெரியவரை பற்றி ஏதாவது கேட்டால், அவர்கள் மவுனம் ஒன்றையே பதிலாக அளித்தனர். உத்தமரை உலகிற்கு அளித்த மகா உத்தமர்கள் அல்லவா அந்த பெற்றோர்.
*****************************************************************
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
வயசு நிர்ணயத்துக்குக் காரணம்
ஸரஸ்வதி உள்ளே புகுந்தபின் காயத்ரீ புகுவது இருக்கட்டும்; இது எங்கேயோ அபூர்வமாக நடக்கிற சமாசாரம். காமன் உள்ளே புகுவதற்கு முன் காயத்ரீ உள்ளே புகுந்துவிட வேண்டுமென்பதுதான் முக்கியம். அதனால்தான் எட்டு வயசு என்று வைத்தார்கள். காமத்தின் ஆவேசம் ஏற்பட்டுவிட்டால் அது மந்திர சக்தி பெற முடியாமல் இழுத்துக் கொண்டு போகும். ஏற்கெனவே பெற்ற சக்தியைக்கூட ஜீர்ணிக்கிற சக்தி அதற்கு உண்டு. அதனால்தான் பதினாறு வயசுக்கு மேல், சாண் ஏறினால் முழம் சறுக்குகிற நிலை ஏற்படுவதற்கு ரொம்பவும் முந்தியே, காயத்ரீயை நன்றாக ஜபித்து அதில் ஸித்தி அடைந்து விடும்படியாக வயசு நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
இதொன்றையும் நாம் ஸீரியஸாக எடுத்துக் கொள்வதேயில்லை. தண்டத்துக்குச் செய்கிறோம். அடியோடு விட்டு விடுவதற்குத் துணிச்சல் இல்லாததாலேயே காலம் தப்பி, முறை கெட்டு, ஏதோ செய்தோம் என்கிற பொய்த் திருப்திக்காகப் பண்ணுகிறோம். இதைவிட தைரியமாக நாஸ்திகமாக இருந்துவிட்டால்கூடத் தேவலை; அவனுக்கு ஒரு 'கன்விக்ஷ'னாவது [கொள்கையுறுதியாவது] இருக்கிறதல்லவா என்றுகூடத் தோன்றுகிறது.
பாலப் பிராயத்திலேயே காயத்ரீயை ஜபிக்க ஆரம்பித்து விட்டால் பசுமரத்தாணியாக அது பதியும். காயத்ரீயானது முக்கியமாக mental power (மனோசக்தி) , தேஜஸ், ஆரோக்யம் எல்லாவற்றையும் அபரிமிதமாகத் தரவல்லது. இந்த ஜபத்தாலேயே குழந்தைகளுக்கு நல்ல concentration [சித்த ஒருமைப்பாடு] , புத்தி தீக்ஷண்யம், சரீர புஷ்டி எல்லாமும் உண்டாகும். பிற்பாடு காமம் தெரிந்தாலும் அது ஒரேடியடியாக இழுத்துக் கொண்டு போய், புத்தி குறைவிலும் சரீர அசுத்தியிலும் விடாதபடி பெரிய கட்டுப்பாடாக இருக்கும். பிரம்மசர்ய ஆச்ரமத்தில் இவன் வீர்யத்தை விரயம் பண்ணாமல், நல்ல பிரம்ம தேஜஸோடு, அறிவாளியாகவும், குணசாலியாகவும், அடக்கம் முதலான நன்னடத்தைகளோடும், தெய்வ பக்தியோடும், ஆத்ம ஸம்பந்தமான விஷயங்களில் பிடிமானத்தோடும் இருப்பதற்கு பால்யத்திலேயே காயத்ரீ அநுஸந்தானம் பண்ணுவது பெரிய ஸஹாயம் செய்யும். தங்கள் குழந்தைகளுக்கு இத்தனை நன்மைகளையும் ஒரு காரணமுமில்லாமல் இக்காலத்துப் பெற்றோர்கள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
***********************************************************************
(அவசியம் படித்துவிட்டு பகிரவும்)
பகவத் கீதையின் "எட்டு அறிவுரைகள்"
1)
ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் - தன்னலம் கருதா மக்கள் சேவையே மிகவுயர்ந்த யாகம் என சனாதன தர்மம் முன்மொழிகின்றது. இந்த உலகில் ஒருவரை ஒருவர் சாராமல் வாழ இயலாது, தேவைபடுபவருக்கு உடனே உதவுவதே மிகவுயர்ந்த பண்பாகும். இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு நல்லிணக்கத்தோடு வாழ்வதால் மனிதர்களெல்லாம் உய்வுபெறுவர். (3:10)
2)
எல்லா செயல்களிலும் மிதமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் - மிக அதிக நேரம் உறங்குவதோ அல்லது மிக குறைவான நேரம் உறங்குவதோ நலமற்ற செயலாகும். அதேபோல மிக அதிகமாக உண்பதும், உண்ணாமலே இருப்பதும் நலமற்ற செயலாகும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி, செயல் அனைத்திலும் மிதமான போக்கு உடையவர்கள் தியானத்தில் ஈடுபட்டால் அவர்களின் எல்லா துன்பங்களும் மறையும். (6:16)
3)
எல்லா உயிர்களும் சமம் என்பதை உணர வேண்டும் - ஈஸ்வரனின் படைப்பில் எல்லா உயிர்களும் சமம் தான். உயிரினங்களின் ஆன்மா இறைவனின் சொரூபமானது. எனவே அடிப்படையில் எல்லா உயிர்களும் தெய்வீகமானவை. (9:29)
4)
எல்லாருக்கும் இறைவனே தந்தை, இயற்கையே அன்னை, உலகமே ஒரு குடும்பம் - எல்லா உயிர்களும் ஈசனின் சக்தியில் இருந்து வந்தவை. உயிர்களின் உடல் இயற்கையால் அளிக்கப்பட்டது. எனவே இந்த உலகமே ஒரு குடும்பம், நமக்கெல்லாம் ஈஸ்வரனே தந்தை இயற்கையே தாய். (14:4)
5)
உன்னுடைய செயல்கள் தான் உனக்கு சொந்தமானது - இந்த உலகில் நமக்கு சொந்தமானது என்று உண்மையில் எதுவுமே இல்லை. நம்முடைய வாழ்நாளில் நாம் செய்யும் (நல்ல மற்றும் தீய) செயல்கள் தான் நம்முடைய உண்மையான சொத்து. அவை கர்மங்களாகி, பல
பிறவிகளிலும் நம்முடன் வருகின்றது. (2:47)
6)
மனதை கட்டுப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் - மனம் எப்போதும் சஞ்சலமாய் அங்குமிங்கும் உழலும் இயல்புடையது. அதை கட்டுப்படுத்தி உறுதியோடு செயல்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையின் இலக்கை அடைய முடியும். மனதை கட்டுப்படுத்த தெரிந்தவனுக்கு மனம் தான் சிறந்த நண்பன், மனதை கட்டுப்படுத்த தெரியாதவனுக்கு மனம் தான் கொடிய பகைவன். (6:6)
7)
ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் - ஆன்மிக அறிவு ஒருவனுக்கு தெளிவான சிந்தனையையும் நிலையான மெய்ப்பொருளையும் உணர்வதற்கான வழியைக் காட்டுகின்றது. தர்மத்தைப் பற்றி முழுமையான அறிவுடைய ஒருவன் சரியெது பிழையெது என பகுத்தறியும் பண்பாடுமிக்கவன் ஆகின்றான். ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதால் ஒருவனின் கர்மவினைகள் தீயிலிட்ட விறகுகளைப் போல சாம்பலாகிவிடுகின்றன. (4:37)
8)
ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவரை எடை போடக் கூடாது - தோற்றத்தை வைத்து ஒருவரை அத்தகையர், இத்தகையர் என கருத்து கணிப்பது மனிதர்களின் இயல்பான குணம். ஆனால் இது இயற்கையின் மாயையால் ஏற்படும் 'பொய்யான' கணிப்பு. எனவே ஒருவரின் உண்மையான இயல்பை அறிவதற்கு அவருடன் பழகி, அவரின் குணங்களையும் செயல்களையும் நன்கு ஆராய்வதே சிறப்பாகும். (13:31)
No comments:
Post a Comment