சித்தர்களும் மற்ற தெய்வீக அருட்கலைஞர்களும்:
அ)
சித்தர்கள் மக்கள் வியக்கக்கூடிய சித்து விளையாட்டுக்களைச் செய்துகாட்டமாட்டார்க்கள். அப்படி செய்து காட்டுபவர்கள் சிறு தெய்வ வழிபாடு உடைய சித்தியாளர்கள் என்று கருதப்படுவார்கள்.
மற்றவர்கள் மாய விளையாட்டுக்கள் காட்டியே வாழ்வு நடத்துவார்கள்.
ஆ)
சித்தர்கள் தன்னிடம் வருபவர்கள் அவராகவே அவரவருடைய பழம்பிறப்புகளை அறிவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருவார்கள்.
மற்றவர்கள் தன்னிடம் வருபவர்களுக்குப் பழம் பிறப்புக்களை உணரும்படிச் செய்ய முடியாதவர்கள் ஆவார்கள்.
இ)
சித்தர்களாலேயே ஆயகலைகள் அருபத்துநான்கையும், தொண்ணூற்றாறு நிலைகளையும், முப்பத்தாறு நிலைகளையும், நூற்று எட்டு திருப்பதி சக்கரங்களையும், இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி சக்கரங்களையும், ஆயிரத்தெட்டு சிவாலயச் சக்கரங்களையும் செயலாக்கிட முடியும்.
மற்றவர்களுக்கு மேற்குறித்தவை என்னவென்றே தெரியாது.
ஈ)
சித்தர்கள் எந்த ஒரு கோயிலையோ அல்லது ஆலயத்தையோ பார்த்தாலும் அதனுடையக் காலத்தொன்மையையும், உயிர் நிலையையும், அருட்தன்மையையும் மிகமிகத் தெளிவாக விளக்கிடுவார்கள்.
மற்றவர்களால் இது முடியாது.
உ)
சித்தர்களே தெய்வீகத்துறை பற்றிய எல்லா வகையான வினாக்களுக்கும் விடை கூறக் கூடியவர்களாவார்கள்.
மற்றவர்களால் இது முடியாது.
ஊ)
சித்தர்கள் கோயில், ஆலயம், மடம், பீடம்... முதலிய இன்னோரன்ன பிற வழிபாட்டு நிலையங்களில் மறைந்து, நிறைந்து உள்ள சத்திகளை வெளியே வரவழைத்து தகுதியுடைய பலருக்கும் காட்டும் ஆற்றலுடையவர்கள்.
மற்றவர்களால் இது முடியாது.
எ)
சித்தர்கள் தான் தன்னிடம் வருகிறவர்களுக்கு அருள் ஊற்று ஏற்படும்படி செய்யக் கூடியவர்கள். அதாவது, தன்னுடைய மாணாக்கர்கள், பத்தர்கள் தாங்களே பூசை செய்து கடவுள், ஆண்டவர்,தெய்வம், தேவதை... முதலியவற்றை நேரிலே கண்டு தேவையான சத்திகளையும், சித்திகளையும் பெற்றிடுவதற்குரிய வழி வகைகளைச் சித்தர்களே வழங்கி விடுவார்கள்.
மற்றவர்கள் தன்னிடம் வருபவர்கள் நேரிடையாக தெய்வம், கடவுள், தேவதை... முதலியவர்களைக் காண்பதற்கோ, தெய்வீகச் சத்திகளையும், சித்திகளையும் பெறுவதற்கோ வழி சொல்ல மாட்டார்கள்.
ஏ)
சித்தர்கள் உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களிலும் ஒளியும் (Light), ஒலியும் (Sound) உண்டாக்கிக் காட்டுவார்கள். அதாவது தங்களுடைய உடம்பிலும் எழுப்புவார்கள், மற்றவர்களுடைய உடம்பிலிருந்தும் எழும்பும்படிச் செய்வார்கள்.
சித்தர் அல்லாதவர்களால் இது முடியாது.
ஐ)
சித்தர்கள் தங்களை சிவனின் வடிவமாக கருதுவதால் எப்பொழுதும் சத்தி பூசையே செய்வார்கள். சித்தர்கள் அனைவருமே இல்லற வாழ்க்கையில் நம்பிக்கை உடையவர்கள். பெண்ணைத் தெய்வமாக மதிப்பவர்கள். பெண்ணின்பத்தை துணையாகக் கொண்டே பேரின்பத்தை அடைய முடியும் என்று நம்புகிறவர்கள்.
மற்ற சிறுதெய்வ வழிபாட்டாளர்கள் பெண்ணை வெறுக்கவும், மறுக்கவும், இழிக்கவும், பழிக்கவும், ஒதுக்கவும் முற்படுவார்கள்.
ஒ)
சித்தர்கள் எல்லா தெய்வங்களையும், ஆண்டவர்களையும், கடவுள்களையும், தேவர்களையும், தங்களுடைய பற்றுக்கும், பாசத்திற்கும், அன்புக்கும், தோழமைக்கும் உரிய உறவினர்களாகவே கருதுவார்கள். பெரும்பாலும் உண்மையிலேயே இதே உறவுமுறை தான் உண்டு. எனவே சித்தர்கள் யாருக்குமே அஞ்சாத தன்மையுடையவர்கள்.
மற்றவர்கள் எல்லையற்ற எல்லாவித அச்சங்களையும் உடையவர்களாகவே இருப்பார்கள்.
ஓ)
சித்தர்கள் எந்தப் பொருளுக்கும் கடவுட் தன்மையைத் தரக் கூடியவர்கள்.
மற்றவர்களால் இது முடியாது.
பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி,
குருமகா சன்னிதானம்,
ஞாலகுரு, எல்லாம் வல்ல சித்தர்
அரசயோகி கருவூறார் − அவர்களின் எழுத்துக்களில் இருந்து.
ௐ நமசிவாய!
ௐ திருச்சிற்றம்பலம் ௐ!
No comments:
Post a Comment