கொல்லிமலையின் சிறப்புகள்
பகுதி 1
சுத்தமான காற்று, கற்கண்டு போன்ற தண்ணீர், கண்கொள்ளா பசுமை, மூலிகை சுவாசம் போன்ற இயற்கை செல்வங்களை நிறைந்த மலைதான் கொல்லிமலை. இங்கு மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் கிடைக்கின்றன. நாமக்கல் மாவட்டதில் கிழக்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் 280 சதுர கி.மீட்டர் பரப்பளவில், விரிந்து, பரந்து, அடர்ந்த மூலிகை காடுகளுடன் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் உயரம் கொண்டது. காரவள்ளி என்ற இடத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சிக்கு செல்ல வேண்டும்.
ஆகாய கங்கை அருவி :
அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த நீர்வீழ்ச்சி அறப்பலீஸ்வரர் கோவிலின் அருகாமையில் அமைந்திருக்கிறது. ஆகாயத்தில் இருந்து விழுவதுபோல தோற்றமளிக்கும் இந்த நீர்வீழ்ச்சியை அதன் உச்சியில் இருந்து காணுவது மனதைப் பறிக்கும் இயற்கைக் காட்சியாக இருக்கும்.
மாசி பெரியண்ணன் கோவில் :
மாசி பெரியண்ணன் கோவில் மாசிக்குன்றில் அமைந்துள்ளது. சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடி உயரமுள்ள வேங்கை என்னும் மிருகவாகனத்தின் மீது பெரியண்ணன் அமர்ந்திருக்கிறார். கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். காசியிலிருந்து பார்வதி தேவியும், பெருமாளும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், பெருமாள் பெரியண்ணனாகவும் மனித உருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.
கொல்லிப்பாவை :
கொல்லிமலையில் வீற்றிருக்கும் காவல் தெய்வம்தான் இந்த கொல்லிப்பாவை. இது குடைவரை கோயிலாகவும், கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் பெருநிலையான தெய்வமாக பாவை கருதப்படுகிறது. கொல்லிமலையின் பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து வடக்கே சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் கொல்லிப் பாவை கோவில் உள்ளது. கொல்லிப்பாவை கொல்லிமலையில் வாழும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக சித்தர்களால் உருவாக்கப்பட்டது என்று நம்பிக்கை உள்ளது.
குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும் இன்னமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தேவையில்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது. மனிதர்களைக் கொல்லும் பாவையின் திருவுருவங்கள் அங்கு பல இடங்களில் இருந்ததாலும், மனிதர்களையும் பிற உயிரினங்களையும் இழுத்துக் கொள்ளும் மரங்கள் அந்தப் பகுதியில் இருந்ததால் இந்த மலைக்கு 'கொல்லிமலை" என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கொல்லிமலையைக் காப்பாற்றுவதற்காக நான்கு திசைகளிலும் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர். தென் திசையைக் கொல்லிபாவையும், வடதிசையை மாசி பெரியண்ணன் சாமியும், மேற்கு திசையை எட்டுக்கை அம்மனும், கிழக்குத் திசைக்கு சின்ன அண்ணன் சாமியும் காவலுக்காகப் பிரதிஷ்டை செய்துவைத்துள்ளனர்.
No comments:
Post a Comment