கொங்கணர் சித்தர்
எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் என்ற நூலும், போகர் ஏழாயிரமும் என்ற நூலும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும், மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.
வரலாறு :
கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார்.
அப்பொழுது கௌதமர் அவர் முன் வந்து 'கொங்கணரே, தவத்தைச் செய்து அதன்மூலம் தான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்" என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனவே யாகமும் நிறுத்தப்பட்டது.
தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. ஒருநாள் கொங்கணர் திருமழிசையாழ்வாரை சந்தித்தார். அவரின் சந்திப்பிற்கு பின் கடுந்தவத்தில் ஈடுபட்டார். அதன் பலனாக, இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் சக்தி கிடைத்தது. இந்த சக்தியை தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் பிச்சை எடுத்த உணவை மட்டுமே உண்டார்.
ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது.
தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டில் பிச்சை எடுக்க வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி கடுங்கோபத்தோடு பார்த்தார். ஆனால் வாசுகி அம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார்.
உடனே வாசுகி அம்மையார் நகைத்து 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!" என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது.
கொங்கணர் போகரைச் சந்திப்பதற்கு முன் பல சித்தர்களைச் சந்தித்து சித்துக்கள் பல பயின்றார். தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், 'திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் வல்லவர். நீ அவரிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்" என்று வழியனுப்பினார்.
பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்தார்.
அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். இவர் 800 வருடம் 16 நாட்கள் உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment