ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்
முட்டாள்கள் தினம்
முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் உள்ள மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளன்று மக்கள் ஒருவரை ஒருவர் வேடிக்கையான பொய்கள் கூறி ஏமாற்றி விளையாடுவர். பெரும்பாலும் நம்பும் தன்மையுள்ள இந்த பொய்களால் ஏமார்ந்தவர்களை ஏப்ரல் ஃபூல் என்று அழைப்பர். உலகம் முழுவதும் இந்நாள் கொண்டாடப்பட்டாலும், பிரான்சில் தான் இந்நாள் தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.
இது ஒரு புத்தாண்டு தினம் என்ற வரலாறும் உண்டு. 16 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 ஆம் தேதியே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562 ஆம் ஆண்டில் அப்போதைய போப்பாண்டவரான 13 வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டு கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரிகோரியன் ஆண்டு கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய மக்கள் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முட்டாள் தினம் தோன்றியது என்று நம்பப்படுகிறது. அதேபோல் 1466 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையா முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட தினம்
இந்தியாவின் கரூவூலமாக செயல்படும் ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி கொல்கத்தாவில் தனியார் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் 1949 ஆம் ஆண்டு இவ்வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்டு இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பணப் பரிவர்தனைகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனமாக மாற்றப்பட்டது.
முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய ரிசர்வ் வங்கி, 1937 ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் நாணயங்கள் மற்றும் பணத்தை அச்சிடுவது, பழைய நாணயங்கள் மற்றும் பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று அழிப்பது போன்றவை ரிசர்வ் வங்கியின் பணிகளாகும்.
இது தவிர நாட்டில் அந்நிய செலாவணியின் மதிப்பை நிர்ணயித்தல், வங்கிகளை மேற்பார்வையிடல் உள்ளிட்ட பல செயல்பாடுகளையும் இது செய்து வருகிறது. ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றை கண்காணித்தும் வருகிறது.
இந்தியாவில் முதன் முறையாக 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜெர்மனியை ஒன்றிணைத்தவரும், இரும்புத் தலைவர் என்று போற்றப்பட்டவருமான ஆட்டோ வான் பிஸ்மார்க் 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்தார்.
2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வங்காரி மாதாய் அவர்கள் 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்தார்.
ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனமானது 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
No comments:
Post a Comment