தமிழர்களின் கல்வி
அக்காலக் கல்வி முறை :
அக்காலக் கல்வி முறை இக்காலம் போன்று இல்லை. மாணவர்கள், ஆசிரியர் இல்லத்தில் தங்கிக் கல்வி கற்றனர். படித்தல், எழுதுதல், கணிதம் ஆகிய மூன்றுமே முதன்மையானவை. ஆசிரியர்க்குத் தேவையான உதவிகள் செய்தும், பொருள் ஈந்தும் பயின்றனர்.
ஆசிரியர் :
ஆசு + இரியர் ஸ்ரீ ஆசிரியர் அதாவது மாணவர்களின் மனத்திலுள்ள அறியாமையாகிய குற்றத்தைப் போக்குபவர் எனப் பொருளாகும்.
தகுதிகள் :
அறிவு, திறன், நல்லொழுக்கம், பெருந்தன்மை, சால்பு உடையோரே ஆசிரியராயிருந்தனர். கணக்காயர், ஆசான் என்றும் அழைக்கப்பெற்றனர். கலையில் தெளிவு, கட்டுரைவன்மை, நிலம், மலை, நிறைகோல், மலர்நிகர் மாட்சி, உலகியல் அறிவு, உயர்பண்பு முதலான இயல்புகள் உடையவர்களை ஆசிரியர் பணிக்குத் தக்கவராகத் தேர்வு செய்தனர்.
மாணாக்கர் :
மாண் + ஆக்கர் ஸ்ரீ மாணாக்கர். ஆசிரியரிடம் பயிலும் போதே சிறந்த பண்புகளைத் தம்மிடம் உண்டாக்கிக் கொள்பவர் எனப் பொருளாகும்.
தகுதிகள் :
மாணாவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது மது அருந்துபவர், சோம்பேறி, மானமுள்ளவர், காமம் உடையவர், கள்வர், நோயுற்றவர், தீயவர், வஞ்சகர் ஆகிய இயல்புகள் உடையவர்களை ஆசிரியர் அன்று ஏற்கமாட்டார்.
கற்பித்தல் :
மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது காலம், இடம் முதலியவற்றை அறிந்து நன்கமர்ந்து பாடத்தின் பொருளைப் பற்றி ஆய்ந்து, விருப்பத்துடன் முகம் மலர்ந்து, பாடம் கேட்கும் மாணவர்களுக்கேற்ப மனத்தில் பதியும்படி மாறுபாடில்லா மனநிலையோடு கற்பித்தனர்.
மாணாக்கர் பாடங்கேட்டல் :
பாடம் கேட்கும் மாணவர்கள் நேரம் தவறாது சரியான நேரத்தில் ஆசிரியரிடம் சென்று ஆசிரியர்க்குப் பணிவிடை செய்வதில் வெறுப்படையாது, அவரது குணமறிந்து பழகி, குறிப்பறிந்து நடந்து கொண்டனர்.
ஆசிரியர் அமரச் சொன்னபடி அமர்ந்து, கேள்வி கேட்டால் விடை சொல்லி, அடக்கமாக இருந்து, ஆசிரியர் சொல்வதைச் செவி வாயிலாகக் கேட்டு, நெஞ்சகத்திருத்தி, ஆசிரியர் சொன்ன நற்கருத்துகளை மறவாமல் மனத்தில் பதிய வைத்துக் கொண்டு, ஆசிரியர் போ என்று சொன்னபின் போதல் முறையாக இருந்தது.
கற்றவர்க்குப் பட்டம் :
இன்று உள்ளது போல் படித்ததற்குச் சான்று, பட்டம் வழங்கும் முறை அன்றில்லை. ஆனால் எந்த ஆசிரியரிடம் பாடம் கேட்டீர் என்று கேட்பதுண்டு. அவற்றைக் கொண்டு அவரது அறிவுத்திறன் கணிக்கப்பெறும். முதற்காலப் பாடங்கேட்கும் முறை, செவி வழிக் கேட்டு, மனத்திலிருத்திக் கொள்வதாகவே இருந்தது.
ஆண்களும், பெண்களும் அன்று சமவாய்ப்புகளுடன் கல்வி கற்றனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் நிரம்பவுள்ளது.
அவ்வையார், காக்கை பாடினியார், பொன்முடியார், வெண்ணிக் குயத்தியார், பெருங்கோப்பெண்டு, குறமகள் இளவெயினி, மாறோக்கத்து நப்பசலையார் முதலான பெண்பாற் புலவர்கள் இருந்தமை தக்க சான்றாகும். பண்டைய மக்கள் கல்வியைக் கண்ணெனப் போற்றினர் என்பதற்கு,
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்கிற திருக்குடற்பாவும் சான்று தருகிறது.
இன்றைய ஆசிரியர், மாணாக்கர் :
இக்காலத்தே ஆசிரியர், மாணாக்கர் நிலை முற்றிலும் மாறுபட்டதாகும். ஆசிரியர் மாணாக்கர் என்கிற அன்புப் பிணைப்பு இன்றி புரட்சியும், உறழ்ச்சியும் உடையராகின்றனர். ஆசிரியர்க்கு அடங்கி, அவர் வழிபற்றிப் பயிலும் நிலைமாறி, ஆசிரியரை மாணவர்கள் அதிகாரம் செய்யும் நிலையே உருவாகி வருவது வருந்துதற்குரியது. அறிவு நிரம்பப் பெற்ற பின்னரே உரிமை கோரல் முறையாகும்.
No comments:
Post a Comment