பஞ்சாப் சிங்கம் !
லாலா லஜபதி ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், இன்றைய மோகா மாவட்டத்தில் அமைந்திருக்கும் துதி கே என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி ஆகியோர் ஆவர். தந்தையார் வறுமை நிலையிலிருந்ததால், தன் மகன் லஜபதிக்குக் கல்லூரியில் படிக்க மாதம் எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை தான் செலவிட முடிந்தது.
பல்கலைக் கழகத்தின் உதவியோடு, பல வேளை உணவின்றிப் படிப்பைத் தொடர்ந்தார். அந்த நிலையிலும் நாட்டிற்கும், மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவர் உள்ளத்தில் கொழுந்து விட்டெரிந்தது. சட்டம் பயின்று ஏழை எளியமக்களின் இன்னலைத் தீர்க்க வழக்கறிஞரானார்.
இளமையிலேய ஆரிய சமாஜசஸப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுவாமி தயானந்த சரசுவதியின் நினைவைப் போற்றும் வகையில் லஜபதிராய் இரண்டு மணிநேரம் இரங்கல் உரை ஆற்றினார். அவ்வுரையே அவரைத் தலைச்சிறந்த சொற்பொழிவாளராக மக்களுக்கு அறிமுகம் செய்தது.
மாணவர்களுக்குக் கல்வியை ஊதியமின்றிக் கற்பிக்க வேண்டுமென்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். அரசின் ஒத்துழைப்புக் கிடைக்காததால், இவரது கல்விக் கூடங்களில் பணியாற்றியவர்கள் பாதி ஊதியம் பெற்றே பணி புரிந்தனர். லார்டு கர்சன் பிரபு அமைத்த கல்விக்குழு இவரது கல்வித் தொண்டினைச் சிறப்பித்துப் பாராட்டியுள்ளது.
1907-ல் பஞ்சாப் அரசு தண்ணீர் வரியை உயர்த்தியது அதனை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அரசின் போக்கைக் கண்டித்து, கையல்பூரில் மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அரசுக்கு எதிராக மக்களை தூண்டியதாகக் குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்து மியான்மார் நாட்டிலுள்ள மாண்டலே சிறையில் அடைத்தது. இந்தக் கொடுமையை கண்டு மனம் கொதித்த பைந்தமிழ்க் கவிஞர் பாரதி,
எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையிலிட்டாலும்
தத்துபுனற் பாஞ்சாலந்தனில் வைத்தால் வாடுகிலேன்
-என்று பாடியுள்ளார். இந்தியாவிலிருந்து மியான்மாருக்குக் கடத்திய செய்தியை, சிறையிலிருந்த போது, என் நாடு கடத்தல் வரலாறு என்ற நூலினை எழுதினார்.
அக்டோபர் 30 ம் தேதியன்று சைமன் கமி~னைக் கண்டித்து நடந்த லாகூரில் ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். அந்தச் சமயம் சாண்டர்ஸ் என்ற காவல் துறை உயர் அதிகாரியால் லஜபதிராய் தடியால் அடித்திட குருதி பெருக்கெடுத் தோடியது. அந்தத் தடியடியால் ஏற்பட்ட புண் ஆறாத நிலையில் உடல் நலிவுற்றார். என் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கல்லறை மீது அறையப்படும் ஆணியாகும் எனக் கூறினார். நோய் வாய்ப்பட்ட நிலையில் இருந்த அவர் 1928-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17-ஆம் நாளில் காலமானார். லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை, லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர்.
நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்று கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றி வந்ததில்லை. லஜபதிராயின் தியாகமும் பகத் சிங்கின் வீரமும் சுதந்திர காற்றில் பரவிக்கிடக்கிறது.
No comments:
Post a Comment