திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் (பகுதி 1)
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற கொங்கு நாட்டுச் சிவத்தலமாகும். அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல்மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்ற இத்தலம் சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் கொடிமாடசெங்குன்றுர் என்றும், ரிஷிகள், தேவர்களின் இருப்பிடமாக இருந்ததால் திரு என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்று அழைக்கபட்டது. மேலும், ஆதிசே~ பாம்பானது மேருமலையை பிடித்த போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தில் மலை செந்நிறம் ஆனதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவர். இந்த திருக்கொடிமாடச்செங்குன்றூர் காலப்போக்கில் மறுவி திருச்செங்கோடு என்று அழைக்கபடுகிறது.
கோவில் வரலாறு :
முன்னொரு காலத்தில் பிருங்கி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிவ பக்தர். அவர் எப்பொழுது கைலாயம் வந்தாலும் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். பார்வதி தேவியை வழிபடமாட்டார். சிவனும் பார்வதியும் ஒன்றாக இருந்தாலும் அவர் வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து போவீர் என சாபமிட்டார். இதையறிந்த சிவன் பார்வதி தேவிக்கு தன் உடலின் இட பாகத்தை கொடுத்து சரி பாதியாக தேவியை தன்னுடன் இணைத்து சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று அவருக்கு கூறினார். இதன் மூலமாக சிவனும் சக்தியும் ஒன்று தான் என்று உலகிற்கும் உணர்த்தினார். இவ்வாறு சிவனும் சக்தியும் இணைந்து உருவான வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கபட்டது.
மலை அமைப்பு :
திருச்செங்கோட்டில் அமைந்துள்ள மலை சிவலிங்க தோற்றத்துடனும், வடமேற்கில் இருந்து பார்க்கும்போது பசுவின் தோற்றத்துடனும், மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும் போது ஆண் உருவம் படுத்து இருப்பதுபோலவும், தென்மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும்போது பெண் படுத்திருக்கும் தோற்றமும் அமைந்துள்ளது. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் இந்த மலையின் மீது ஆலயமாக அமைந்துள்ளது. தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது.
கோவில் அமைப்பு :
1200 திருபடிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தையும், அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம், திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம். தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது. இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேடன் ஐந்து தலைகளுடன் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது.
மலையின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து 20 படிகள் கீழிறங்கி வெளிப் பிரகாரத்தை அடையலாம்.
அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி உள்ளது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது.
No comments:
Post a Comment