திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் (பகுதி 2)
நாகர் சிலை :
மலை அடிவாரத்திலிருந்து மலைக்கு மேலே படி வழியாக செல்லும் போது நாம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாய் ஐந்து தலைகளுடன் அமைந்துள்ள ஆதிசேஷன் உருவத்தை காணலாம். பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள இந்த நாகர் உருவமே நாகர்மலையின் முதலிடம் ஆகும். இந்த நாகருக்கு மக்கள் குங்குமம் தூவி, தீப ஆராதணை செய்து வழிபடுகின்றனர். ராகுதோஷம், நாகதோ~ம், காலசர்பதோஷம், களத்திரதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். முன்னர் மக்கள் படி வழியாக சென்று நாகதெய்வத்தை வழிபட்டனர்.
செங்கோட்டுவேலவர் சன்னதி :
முருகன் திருக்கைலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் கோபம் கொண்டு பழனிக்கு வந்தார். அதன்பின் அங்கிருந்து இத்தலத்திற்கு வந்து செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். முருகன் இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாதவண்ணம் வலது கரத்தில் சக்தி வேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அனைத்த வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறார். இங்கு செங்கோட்டுவேலவருக்கு தனி சன்னதியும் உள்ளது. இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது.
அர்த்தநாரீஸ்வரர் சன்னதி :
மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது.
கோவில் சிற்ப கலைகள் :
அர்த்தனாரீஸ்வரர் திருக்கோயில் சிறந்த சிற்ப்பகலைக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. இங்குள்ள கற்சிலைகளும், சிற்ப்பங்களும், பெரும்பாலும் சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள மண்டபங்களிலும், தூண்களிலும் வடிக்கப்பட்டுள்ள அழகிய சிற்ப்ப வேலைபாடுகளும் மற்றும் கோயிலை சுற்றி அமைந்துள்ள அற்ப்புதமான கற்சிலைகளும் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும்வண்ணம் அமைந்துள்ளன.
விமானத்தில் (மேற்கூறையில்) எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லினால் கண்கொள்ளா காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும், மிகுந்த அறிவுதிறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும். குறவர் நடனகலையும், சிலந்தியை தேள் கவ்வுவது போல் அமைந்துள்ள சிலை வடிவத்தையும் கலைக்கண்ணோட்டத்தோடு நோக்கின் அதன் பெருமையை அறியலாம். அர்த்தநாரீஸ்வரர் நேரெதிர் உள்ள நிறுத்த மண்டபத்தில் அமைந்த தூண்களில் காளி, ரதிமன்மதன், போன்ற சிற்ப்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்றூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை.
No comments:
Post a Comment