சரணாகத வத்ஸலனின் பெருமைகள் தொடர்கின்றன
(மாவலி
படையெடுத்து வர, இந்திரன், சுவர்க்கத்தை விட்டு Vivek Style-ல் Escape! இந்திரன் தாய்
அதிதி, பயோ விரதத்தைக் கடைப்பிடிக்க, நாராயணன் தோன்றுகிறார்)
நாராயணன்:
நான் பாட்டுக்கு படுத்திருந்தேன்! ஏன் என்னை எழுப்பினாய்!
அதிதி:
பிரபோ! மாவலியினால் என் மகன் நாடோடியாகி விட்டான்! நீங்கள் மாவலியை அழிக்க வேண்டும்!
நாராயணன்:
முடியாது! பிரகலாதன் வம்சத்தவரை நான் அழிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்துள்ளேன்!
அதிதி: அவனை சுவர்க்கத்தில் இருந்து விரட்டவாவது முடியுமா
நாராயணன்: அதுவும் முடியாது!
அதிதி: ஏன்
நாராயணன்:
மாவலி, யாகம் செய்து, முனிவர்கள் ஆசியுடன் இந்தப் பலத்தைப் பெற்றுள்ளான்! தேவர்களின்
பலம், அவனிடம் பலிக்காது!
அதிதி:
உங்களால் முடியாது என்று உண்டோ? ஏதாவது செய்யுங்கள்!
நாராயணன் ('சூடேத்திக்கிட்டே இருக்காங்களே' என்ற முனகலுடன்): இழந்த சுவர்க்கத்தை வேறு விதமாகத்
தான் பெற வேண்டும். இதற்கு நானே வழி செய்கிறேன்!'
(மறைந்து விடுகிறார் நாராயணன்)
இடம்: அதிதியின் மாளிகை
நேரம்:
புரட்டாசி மாதம், சுக்கில பக்ஷம், துவாதசி, சிரவண நட்சத்திரம்
(காசியப முனிவருக்கும், அதிதிக்கும், மகனாகப் பிறக்கிறான் நாராயணன்)
காசியபர்:
பிரபோ! உமக்குக் கோடி நமஸ்காரங்கள்! நீர் மாவலியிடம் இப்படியே சென்றால், அவனுக்கு உங்களை
அடையாளம் தெரிந்துவிடும்!
நாராயணன்:
தெரியாதா எனக்கு! நான் வேறு Uniform-ல் தான் செல்லப் போகிறேன்!
(உடனே
வாமனனாக மாறிய நாராயணனுக்கு, காசியபர் பிரம்மோபதேசம் செய்து, முஞ்சியைக் கொடுக்கிறார்;
பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தைக் கொடுக்க, சூரியன் காயத்ரி மந்திரத்தை உபதேசிக்க, சந்திரன்
தண்டம் கொடுக்க, தாய் கோவணத்தைக் கொடுக்க, பிரம்மன் கமண்டலம் கொடுக்க, குபேரன் பிச்சைப்
பாத்திரத்தைக் கொடுக்கிறான்!)
பிரமன்:
பிரபோ! கொடுத்தே பழக்கப் பட்டவர் நீர்! யாசிப்பது உமக்குப் புதிது! எதற்கும் ஒரு
'Trial' பார்த்துக் கொள்ளுங்கள்!
(யார்
முதல் பிச்சை அளிப்பது என்பதில் அங்கு பெரும் போட்டி! எம்பெருமானுக்கே கொடுப்பது பாக்கியமல்லவா
அடிக்கிறது Lottery, வருங்காலத் தங்கை பார்வதிக்கு!)
(வாமனன்
புறப்பட எத்தனிக்க, ஸ்ரீதேவி ஜம்மென்று அவன் மார்பில் ஏறி அமர்ந்து கொள்கிறாள்!)
சூரியன் (ஸ்ரீதேவியைப் பார்த்து): ஐயோ! நீங்கள் செல்லாதீர்கள்! காரியம் கெட்டு விடும்!
ஸ்ரீதேவி:
அதெல்லாம் முடியாது! அவரை விட்டு நான் விலக மாட்டேன்.!நான் கட்டாயம் உடன் செல்வேன்!
குபேரன் (ஸ்ரீதேவியிடம்): தாயே! நீங்கள் சென்றால், உங்கள் கருணைப் பார்வை மாவலி மேல் பட்டு விடும்!
பின்னர் அவனிடம் இருக்கும் சொர்க்கத்தை பிடுங்க நாராயணனாலும் முடியாது!
(அங்கு
வாக்குவாதம் முற்ற, திடீரென்று, 'Idea' என்று யாரோ கத்த, எல்லோரும் திரும்பிப் பார்க்கின்றனர்)
பூமாதேவி:
பிரபோ! உங்கள் மேல், ஸ்ரீதேவியை மறைக்கும்படி, மான் தோலை அணிந்து செல்லுங்கள்!
(அனைவருக்கும்
இந்த எண்ணம் பிடித்துப் போக, பூமாதேவியே க்ருஷ்ணாஜனம் அணிவிக்க, அவர் புறப்படுகிறார்!)
***
பலியிடம்
வாமனன் மூன்றடி நிலம் யாசித்து, உலகளக்கிறான்! வளர்ந்த போது கடுஞ்சொற்களைப் பலர் அள்ளி
வீச, அதையும் பொறுத்துக் கொள்கிறான்!
மறைந்திருந்த
ஸ்ரீதேவி, திருவடி வளரும் விதத்தை சற்று எட்டிப் பார்க்க, அவள் பார்வை, திருவடியில்
நீர் வார்க்கும் பலியின் மீதும் படுகிறது! இதனாலேயே, அவனுக்கு இந்திர பதவி - சாவர்ணி
மனுவில்!
(ஸ்வாமி
தேசிகன் திருக்கோவலூர் உத்தமன் ஸ்ரீ தேஹளீஸன் மேல் 28 அற்புதமான ஸ்லோகங்கள் இயற்றியுள்ளார்!
முடிந்தால் படியுங்கள்!)
தான்
பிச்சை எடுத்தாவது, திட்டு வாங்கியாவது, பிறருக்கு உதவி செய்யும் அவனல்லவோ உத்தமர்களில்
உத்தமன் - ஸர்வோத்தமன் - ஓங்கி உலகளந்த உத்தமன்?
தன்னைத்
தேடி வருபவர்களின் பிரச்சனைகளை, தன்னுடையதாகவே நினைத்துக் கொள்கிறானாம்! அவற்றைத் தீர்த்து
வைப்பதை (தான் அவமானப் பட்டானாலும் கவலைப் படாது) தன் பேறாக நினைக்கிறானாம் அவன்!
இவன்
உத்தம குணத்தை (ஸர்வ ஸ்வாமித்வத்தை), 'உலகேழும் அளந்தாய்' என்ற வார்த்தை (கதை)
மூலம் சொல்கின்றார் பெரியாழ்வார்!
மார்க்கண்டேய
முனிவர், நாராயணனைத் தரிசிக்கத் தவம் செய்கிறார். விஷ்ணு தோன்றி, 'என்ன வரம் வேண்டும்'
என்று கேட்க, 'உன்னைக் கண்ட பின் எதுவும் வேண்டாம்' என்கிறார் முனிவர். வற்புறுத்தலின்
பேரில் 'உலகத்தின் அறிவுக்கும், இயற்கைக்கும், பேதத்திற்கும் காரணமான உன் மாயையைக்
காண வேண்டும்' என்று கேட்க, விஷ்ணு, OK சொல்கிறார்.
(மார்க்கண்டேயர்,
விஷ்ணு மாயையைக் காணவே தவம் செய்ததாகவும் சொல்லப்படுவது உண்டு)
சில
நாள் கழித்து, திடீரென இடி, மின்னலுடன் பயங்கர மழை! தொடர்ந்து பெய்த மழையால், சமுத்திரங்கள்
பொங்கி, எங்கும் வெள்ளக் காடு! இவர் ஆசிரமமும் முழுகியது! முனிவர், நீரில் இழுத்துச்
செல்லப் பட்டு, பல நாட்கள் நீரில் அலைக்கழிக்கப் படுகிறார்.
ஓரிடத்தில்,
ஒரு பெரிய ஆல மரம். அதன் ஈசான்ய திசையில் ஒரு கிளையின் இலை மீது, ஒரு சின்னஞ்சிறு குழந்தை!
தாமரை
மலர் முகம், சங்கு போன்ற கழுத்து, விசால மார்பு, அழகிய மூக்கு, கருணை ததும்புப் கண்கள்,
பவள வாய்! முத்தாய்ப்பாக, வலது கால் கட்டை விரலை, வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கிறது!
குழந்தையின்
அழகில் தன்னை மறந்த முனிவர், திடீரென்று ஒரு குகைக்குள்ளே இழுக்கப் படுகிறார்! முடிவில்,
அண்ட சராரங்களும், தேவர்களும், பூமியும் தென்படுகின்றன! பூமியில், ஒரே வெள்ளம்! அதில்
முனிவரின் ஆசிரமமும்! காட்சியை ரசிப்பதற்குள், மீண்டும் குகைக்குள் இழுத்துச் செல்லப்
படுகிறார்! மீண்டும் ஒரே வெள்ளக் காடு!
சற்று
நேரம் கழித்து, தான் கண்ட காட்சி மெதுவாகப் புரிகிறது முனிவருக்கு - குழந்தை, நாராயணனே
என்றும், அவன் மூச்சுக் காற்றில் அவன் வயிற்றினுள்ளே சென்றதும், பின்னர் வெளியே வந்ததும்!
பிரளயத்தின்
போது உலகங்களைத் தன் வயிற்றில் வைத்துக் காத்த காட்சி, எளிதில் கிடைக்காதது! மெய் சிலிர்க்கிறார்!
குழந்தையைக் கட்டி அணைக்கத் தன் கையை நீட்ட, காட்சி மறைகின்றது! மீண்டும் தம் ஆசிரமத்தில்
இவர் அமர்ந்திருக்கிறார்!
எம்பெருமான்
வயிற்றில் 7 முறை உள்ளே சென்றதன் பலன் - 7 கல்பங்கள் உயிர் வாழும் பேறு மார்க்கண்டேயருக்கு!
(மீண்டும்
நாராயணன் தோன்றி, முனிவர் இதுவரை அனுபவித்தது விஷ்ணு மாயையே என்று சொல்லி மறைந்ததாகக்
கதை)
இப்படி,
எல்லாம் தெரிந்தவனை, நம் அறிவையும், புலன்களையும், மறைக்கக் கூடிய மாயனை, எல்லாக் காலத்திலும்,
எந்தச் சூழ்நிலையிலும் - உலகமே முழுகினாலும் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஸர்வக்ஞனை
- அவன் சிறு குழந்தையாய் இருந்தாலும் சரி - சரணடைகின்றார் பெரியாழ்வார்!
அவனை, 'ஊழியாயினாய்' என்றழைக்கின்றார்!
துர்வாசர்
கொடுத்த பூமாலையை இந்திரன் ஐராவதத்தினிடம் கொடுக்க, அது மாலையைக் காலால் நசுக்குகிறது!
வழக்கம்
போல் துர்வாசருக்குக் கோபம்! இன்னொன்று கொடுக்கிறார்! மாலை அல்ல - சாபம்!
வழக்கம்
போல் இந்திரன் Care of Platform!
வழக்கம்
போல் அவனும் மற்ற தேவர்களும் பிரமனிடம் செல்கின்றனர்!
வழக்கம் போல் பிரமன் எல்லாருடனும் சிவனிடம்
செல்கின்றனர்!
வழக்கம் போல் சிவனும், Redirect to நாராயணன்!வழக்கம் போல் அவரும், 'நான் பார்த்துக் கொள்கிறேன்! நீங்கள் பாற்கடலைக் கடையுங்கள்!' என்கிறார்!
வழக்கம் போல் சிவனும், Redirect to நாராயணன்!வழக்கம் போல் அவரும், 'நான் பார்த்துக் கொள்கிறேன்! நீங்கள் பாற்கடலைக் கடையுங்கள்!' என்கிறார்!
தேவர்களுக்குத்
தேவை, நாடும், வீடும்! அசுரர்களுக்குத் தேவை அமிர்தம்! பாற்கடலைக் கடைய, எலிக்கும்,
பூனைக்கும் சமாதானம்!
அனைவரும்
மந்தர மலையைத் தூக்கிச் செல்கின்றனர்! கனத்தைத் தாங்காமல் மலையை அவர்கள் கீழே போட,
அடியில் இருந்த பலர் (இட்டிலிக்குத் தொட்டுக் கொள்ள முடியாத) சட்டினி ஆயினர்!
நாராயணன்,
தானே களம் இறங்குகிறார்! அவர் பல அவதாரச் செயல்களைச் செய்திருந்தாலும், அமுதம் கடந்த
பொழுது அவர் செய்தவை கணக்கிலடங்காது!
நசுங்கியவர்களுக்கு, முதலில் உயிர் கொடுக்கிறார்!
தானே மலையைக் கையில் தாங்கி, பாற்கடலில் இறக்குகிறார்!
மலையைக்
கடையக் கயிறானான் வாசுகி! (மலை போல், பல மூலிகைகளும், வாசனைத் திரவியங்களும் போடப்
பட்டாதாக விஷ்ணு புராணம் கூறும்)
அசுரர்கள்,
பாம்பின் வாலைப் பிடிப்பது அவமானம் என நினைக்க, ஆரம்பிக்கிறது சண்டை! கடைசியில், தேவர்கள்
வாலையும், அசுரர்கள் தலையையும் பிடிக்கின்றனர். கடைகின்றனர்!
மலை
நிற்காது அங்குமிங்கும் ஆட, வாசுகியும் தவிக்கிறான். அவன் விடும் மூச்சுக் காற்றினால்,
தலைப் பக்கம் நின்ற அசுரர்கள் தவிக்கின்றனர். இதை முன்னமேயே அறிந்து தான் நாராயணன்
ஒரு பெரும் உருவம் கொண்டு தேவர்கள் பக்கம் நின்றாரோ
பகவான்,
ஆமை உருவெடுத்து, மலையைக் கீழே தாங்க, மலை மேல்புறம் ஆடுகின்றது!
(பகவான்
யாரும் காண முடியாத இன்னொரு உருவம் எடுத்து, மலையின் உச்சியையும் பிடித்துக் கொள்வதாக,
விஷ்ணு புராணம் கூறும்)
வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி,
கடல் வண்ணன் பண்டொரு நாள்
கடல் வயிறு கலக்க,
கடலில்
இருந்து, முதலில் ஆலகால விஷம் தோன்ற, கருணையுடன் அதனை 'நீல கண்டன்' உட்கொள்கிறார்!
பின்னர்
காமதேனு தோன்ற, முனிவர்கள் அதை எடுத்துக் கொள்கின்றனர். உச்சைசிரவஸ் எனும் வெள்ளைக்
குதிரை வெளியே வர, பலி எடுத்துக் கொள்கின்றான்.
(ஸ்ரீமத்
பாகவதம், அடுத்து ஐராவதம் எனும் யானை வெளி வந்தாகவும், இந்திரன் அதை எடுத்துக் கொண்டதாகவும்
கூறுகிறது!
இந்த
ஐராவதம் மாலையை மிதித்ததால் தானே கடல் கடைய வேண்டிய நிர்பந்தம்! மீண்டும் எப்படி இந்த
யானை வெளியே வரும் ஒரு வேளை இது வேறு யானையோ?
விஷ்ணு
புராணத்தில், இந்த யானை வெளி வந்ததாகச் சொல்லப் படவில்லை)
பின்னர்
கற்பக மரம் தோன்ற, அதையும் இந்திரன் எடுத்துக் கொள்கிறான்.
அடுத்து
மிகவும் அழகான, மதி மயக்கம் செய்யக் கூடிய வாருணீ தேவி வெளிவர, அசுரர்கள் அவளை எடுத்துக்
கொள்கின்றனர்!
(அடுத்து
சந்திரன் தோன்றியதாகவும், சிவன் அவனை ஏற்றுக் கொண்டு, 'சந்திரசேகரன்' எனும் பெயர் பெற்றதாகவும்
விஷ்ணு புராணம் கூறுகிறது)
அடுத்து,
ஊர்வசி தோன்றுகிறாள். அவள் தேவர்களுடன் சென்று விடுகிறாள்!
பல
அழகான தேவதைகளின் நடுவில் மஹாலக்ஷ்மி வெளி வர, அனைவரும் வாசுகியை விட்டு, அவளை அடைய
ஆசைப்படுகின்றனர்! அவளோ, நாராயணனுக்கு மாலையிட்டு, அவன் மார்பில் சேர்கின்றாள்!
(சந்திரனைத்
தொடர்ந்து அவதரித்ததாலேயே, மஹாலக்ஷ்மிக்கு, ‘சந்த்ர சகோதரி’ என்ற பெயர் உண்டு - லக்ஷ்மி
அஷ்டோத்தர நாமம் 59)
அனைவரும்
கடலைத் தொடர்ந்து கடைய, விஷ்ணு தன்வந்திரி அவதாரம் எடுத்து, அமிர்தத்துடன் வெளி வருகின்றார்!
இமைப்
பொழுதில் அசுரர்கள் அமிர்தத்தைத் தட்டிச் செல்கின்றனர்! அதை மீட்க, விஷ்ணு, மீண்டும்
ஒரு அவதாரம்! இம்முறை, மோகினியாக!
மோகினியின்
மாயையில் சிவனே மயங்கும்போது, அசுரர்கள் எம்மாத்திரம்! அவர்கள் மயங்க, மோகினி, தேவர்களுக்கு
மட்டும் அமிர்தம் கொடுக்கிறார்!
ராகு,
கேது, தேவர்கள் வேடமிட்டு அமிர்தம் பெற்றதால், சக்ராயுதத்தால் அவர்கள் தலையை அறுக்கிறார்
எம்பெருமான்!
அமிர்தம்
உட்கொண்டதால் அவர்கள் சாகவில்லை! பிரம்மன் அவர்களை கிரகங்களாகச் செய்கிறார்!
(ராகு,
கேது கதை, சற்றே வித்தியாசமாகவும் சொல்லப் படுவதுண்டு)
தேவேந்திரன்,
மஹாலக்ஷ்மியைத் துதிக்க அவள் அருளால் மீண்டும் ஐஸ்வர்யமும், ராஜ்ஜியமும் கிடைக்கின்றது.
(இந்த
மஹாலக்ஷ்மி துதி, மிகவும் சக்தி வாய்ந்தது! நீங்களும் முடிந்தால் சொல்லுங்கள்!)
சரணடைந்தவர்களுக்குத்
துன்பம் எனும்போது, தானே, கௌரவம் பார்க்காமல், பெரியவன், சிறியவன் என்ற வித்தியாசம்
பார்க்காமல்,
கூர்மமாக
(ஆமை), தன்வந்திரியாக, மோகினியாக, வேறு இரு ஸ்வரூபங்களாக (ஆணாக, பெண்ணாக, மிருகமாக,
மற்றும் இருவராக),
எத்தனை
அவதாரங்கள் தேவை என்றாலும் எடுத்து, தானே நேரில் வந்து, செய்ய வேண்டியதைச் செய்து முடிக்கிறான்!
என்னே அவன் ஸெளசீல்யம்! இவனிடம் சரணடைந்து விட்டால் நமக்குக் கவலை இல்லையே!
பெரியாழ்வார்,
எம்பெருமானின் ஸெளசீல்ய குணத்தை, கடலைக் கடைந்த (கடலைக் கடைந்தானே) வைபவத்தின்
மூலம் சொல்கின்றார்!
ஒருவரிடம் சரணடையச் செல்கிறோம்!
அவர்
நம்மைப் பார்த்து, 'நீ ஏழை. உனக்கு உதவ மாட்டேன்!' என்றோ, 'உனக்குத் தகுதி இல்லை! எனவே
உனக்கு உதவ மாட்டேன்!' என்றோ, ‘நீ கீழ்ச் சாதி. எனவே உனக்கு உதவ மாட்டேன்!’ என்றோ சொன்னால்,
எப்படி இருக்கும்
நம்மில்
ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கும்! குறையும், தேவையும் இருப்பதால் தானே, நாம் இன்னொருவரிடம்
உதவிக்குச் செல்கிறோம்? இந்தக் குறையைக் காரணமாகக் கூறி, அவர் நம்மை நிராகரித்தால்?
மற்ற
மனிதர்களும், மற்ற தேவதைகளும், நம்மை நிராகரிக்கலாம்! ஆனால், எம்பெருமான்
கன்று
தரையில் அமர்ந்து, புரண்டு, பின் தாயிடம் வருகின்றது! தாய்ப் பசு, 'நீ அழுக்கு' என்று
அதனை ஒதுக்குவதில்லை. தன் நாவினால், தடவிக் கொடுக்கின்றது! அழுக்கையும் சேர்த்து! கன்றின்
அழுக்கு, தாய்க்கு உதவி செய்யக் கிடைத்த பாக்கியம்!
அதே
போல், நம்மிடம் எதுவும் இல்லாவிட்டாலும், 'எதுவும் இல்லை' என்ற தகுதியையே தகுதியாகக்
கொண்டு, சரணடைந்தவர்களைக் காப்பவன் நாராயணன்! நம் குறையே நம் அதிருஷ்டம்! அவன் அதிருஷ்டம்!
இந்த
வாத்ஸல்ய குணம், அவனுக்கு இருப்பதால், அவனை, ’பிரான்’ (பிறருக்கு உதவுபவன்)
என்றழைக்கின்றார் பெரியாழ்வார்!
சாலையில் ஒரு விபத்து! ரத்த வெள்ளத்தில் ஒருவன்!
அந்த
வழியில் செல்லும் பெரும்பாலோர், 'ஐயோ! பாவம்' என்று இரக்கப் படுவர்! சற்றே தள்ளி நின்று
வேடிக்கை பார்ப்பர்!
99%
பேர், இரக்கப்படுவதோடு நின்று விடுவர்! வெள்ளத்தில் கிடப்பவனுடைய பிரச்சனையை, தன்னுடையதாக
எடுத்துக் கொள்வதில்லை! 'நமக்கேன் வம்பு?' என்று!
மேலும்
சிலருக்கு, இரக்கம் இருக்கும்! ஆனால், ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவனுக்கு உதவுவதால்,
‘பின்னால் வரும்’ பிரச்சனைகளைச் சமாளிக்கச் சக்தி இருக்காது!
பிரம்மன்
வரம் கொடுத்தாலும், வதைக்க நரசிம்மன் ஒருவனால் தானே முடிந்தது!
சரணடைபவன்
மோட்சத்தைக் கேட்டு விட்டால்? நாராயணன் ஒருவனாலேயே மோட்சத்தைக் கொடுக்க முடியும்!
ஆகவே,
சொல்லப் பட்ட 9 குணங்களில் ஒன்று குறைந்தாலும், ஒருவன் 'சரணாகத வத்ஸலன்' எனும் தகுதியை
இழந்து விடுகிறான்!
நம்பனே! நவின்றேத்த வல்லார்கள்* நாதனே நரசிங்கமதானாய்!*
உம்பர்கோன்! உலகேழுமளந்தாய்!* ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி*
கம்ப மா கரி கோள் விடுத்தானே!* காரணா! கடலைக் கடைந்தானே!*
எம்பிரான்! என்னை ஆளுடைத் தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே!
'நானோ
ஏழை (ஏழையேன்)! உன்னிடம் அனைத்து குணங்களும் இருப்பதால், நீயே சரணாகத வத்ஸலன்!
என்னைப் போன்றோருடைய குறைகளையே நீ உன் அதிருஷ்டமாகக் கொள்வாய்! நீ தான் என் தலைவன்
(என்னை ஆளுடைத் தேனே)! என் துன்பத்தை நீக்கு (என் இடரைக் களையாயே)!
என்று பெரியாழ்வார் நரசிம்மனிடம் சரணடைகிறார்!
No comments:
Post a Comment