திவ்விய
தேசங்கள் எத்தனை
எம்பெருமான்
இருக்கும் இடத்தில் நோய்களுக்கு இடமில்லை என்று, 'நெய்க்குடத்தை (5-2)'
என்று தொடங்கும் திருமொழி மூலம் அருளிச் செய்கின்றார்.
இதில்
4-ம் பாசுரத்தில், நரசிம்மன் இருக்கும் இடத்தை வர்ணிக்கின்றார்!
***
மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்!*
இங்குப் புகேன்மின்! புகேன்மின்!* எளிதன்று கண்டீர்! புகேன்மின்!*
சிங்கப் பிரானவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்!*
பங்கப் படாதுய்யப் போமின்!* பண்டன்று; பட்டினங் காப்பே.
நெய்க்குடத்தை 5-2-4
மங்கிய
வலிமையான வினையான நோய்களே! உங்களுக்கும் ஒரு தீய வினை வந்து விட்டது! இங்கே கட்டாயம்
நுழையாதீர்கள்! நுழைவது நிச்சயம் எளிது அல்ல! எனவே நுழையாதீர்கள்! சிங்க அவதாரம் எடுத்த
என் தலைவன் வந்து சேர்ந்த திருக்கோயிலாகும் இது! நீங்கள் அவமானப் படாமல் இருக்க, உயிர்
வாழ, ஓடி விடுங்கள்! என் உடல் பழைய நிலமையில் இல்லை. இது நரசிம்மன் வாழும் பட்டினம்!
நன்கு காக்கப் பட்டுள்ளது!
(மங்கிய
- மழுங்கிய; புகேன்மின் - நுழைய வேண்டாம்; பங்கம் - அவமானம்; பண்டன்று
= பண்டு + அன்று; பழையது அன்று; பட்டினம் - பட்டணம், உடல்; காப்பு -
காக்கப் படும், பட்டது; கண்டீர் - நிச்சயம்)
'மங்கிய
வல்வினை நோய்காள்' என்கின்றார் ஆழ்வார்! எது மங்கியது தீவினையா? நோய்களா? இல்லை வேறு
ஏதாவதா
***
ஒரு மடம்! அதில், ஒரு குருவும், சில சீடர்களும்!
ஒரு
சமயம், குருவுக்குக் பயங்கரக் காய்ச்சல்! கண் திறக்க முடியாமல், நாள் முழுவதும் படுத்திருக்கிறார்!
எல்லாச்
சீடர்களின் முகத்திலும் ஒரு கேள்விக் குறி! மறுநாள் குருவே வழக்கம் போல ஆராதனை செய்வாரா,
அல்லது வேறு யாருக்காவது இந்தப் பாக்கியம் கிடைக்குமா? தனக்குக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு
கலந்த கேள்விக்குறி, அவர்கள் முகங்களில்!
மறு
நாள் அதிகாலை! குரு, கஷ்டப்பட்டு எழுந்து நேரே சந்நிதியின் முன்பு வருகிறார்! கீழே
உட்கார்ந்து ஏதோ மந்திரம் சொல்லி, கையிலிருந்து நீர் வார்த்து, ஒரு பாத்திரத்தில் விடுகிறார்.
குரு திடீரென்று, பழையபடி 'Normal'.
காலைக்
கடன்களை முடித்துவிட்டு, வழக்கம் போல், பூஜை செய்கிறார் குரு! சீடர்களின் முகம், 'காற்றடித்த
பலூன்கள்' போல்! சீடர்கள், அரக்கப் பரக்க ஓடி வருகின்றனர், பூஜைக்காக!
பூஜை
முடிந்தவுடன், பாத்திரத்தில் வைத்திருந்த நீரை, மறுபடியும் குடித்து விடுகிறார் குரு!
மீண்டும் பயங்கரக் காய்ச்சல்! உட்காருவதற்கே கஷ்டப் படுகின்றார்!
பார்த்துக்
கொண்டிருந்தனர் சீடர்கள் - அறிந்தும், அறியாமலும்!
ஒரு சீடன்: குருவே! சந்தேகம் ஒன்று!
குரு: கேள்!
அதே சீடன்: நீங்கள் நீர் வார்த்து இறக்க்கியது எதை
குரு:
நான் செய்த பாபத்தை! நான் முன் பிறப்பில் செய்த வினைகள், இந்தப் பிறவியில் என் உடம்பையும்
ஆத்மாவையும் வருத்தும் நோயாக வந்தன. பூஜை செய்வதற்காக, என் யோக சக்தியினால் அதை என்
உடம்பில் இருந்து இறக்கி வைத்தேன்!
இன்னொரு சீடன்:
ஆஹா! என்ன அற்புதம்! அப்படியானால் அந்த நீரைத் தூக்கி எறிந்து விட்டால், காய்ச்சலே
வராதே! இந்த வித்தையை ஏன் நீங்கள் எங்களுக்குச் சொல்லித் தரவில்லை
குரு (முனகலுடன்):
ஐயோ! உன்னைச் சீடனாக அடைய நான் ஏதோ பெரும் பாவம் செய்திருக்க வேண்டும்!
குரு (எல்லோரையும் பார்த்து): இப்பொழுதும் என்னால் அந்த நீரை எறிந்து விட முடியும்! ஆனால், அதனுள்
கரைந்திருந்த பாவத்தை என்னால் எறிந்து விட முடியாது! அந்த முன்வினைப் பாவத்தைக் கழிக்க,
என் ஆன்மா ஏதாவது உடலுடன் மீண்டும் ஒரு பிறவி எடுத்தே ஆக வேண்டும்! தெரிந்ததா!
(புரிந்து
விட்டது போல், சீடர்கள் எல்லோரும் தலையாட்டுகின்றனர்)
***
நான்
முன்பு செய்த பாவங்களே, இப்போது என் நோய்கள் (வல்வினை நோய்காள்) என்கின்றார்
பெரியாழ்வார்!
உங்களால்
இதுவரை மங்கியது (மங்கிய), என் உடல் அல்ல, என் ஆன்மா!' என்கின்றார்!
என்
உடல் மங்கியதைப் பற்றி எனக்குத் துளிக்கூடக் கவலை இல்லை. ஆனால் என் ஆன்மாவை மங்கச்
செய்த நீங்கள் இனிமேல் மங்கப் போகிறீர்கள்! ஏனென்றால், உங்களையே மங்கச் செய்கின்ற ஒரு
தீவினை வந்து விட்டது (உமக்கோர் வல்வினை கண்டீர்)!
நாராயணனை
'வல்வினை' என்கின்றாரே ஆழ்வார்! இது நியாயமா
அவன்
தீவினை தான் - நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்குக் கெட்டவன்! தீவினைக்குத் தீவினை!
பெரியாழ்வாரின்
தெய்வமான நரசிம்மன், திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்து விட்டானாம் (சேரும் திருக்கோயில்
கண்டீர்)!
அவன்
வந்தது எந்தத் திருக்கோயில்? எந்த ஆழ்வார்கள் அந்தக் கோயிலுக்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்?
எந்தத் திவ்விய தேசம்?
***
(மங்கையார்,
தன் Laptop-ஐ மடியில் வைத்துக் கொண்டு, Excel-ல் ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றார்.
அவர் ரொம்ப நேரமாக ஏதோ யோசிப்பதைக் கண்ட தொண்டரடிப்பொடியாழ்வார், அருகே செல்கின்றார்)
அடிப்பொடிகள்:
மங்கையாரே! என்ன ரொம்ப யோசனை? கணக்கு ஏதாவது உதைக்கிறதா
மங்கையார்:
இரண்டு பூலோக வாரங்களுக்கு முன், திருநாங்கூரில் உள்ள 11 கோயில்களிலும் உள்ள எம்பெருமான்
திருமணி மாடக் கோயிலுக்கு வந்து, 11 கருடன்கள் மேல் இருந்து சுமார் 2 லட்சம் மக்களுக்கு
தரிசனம் தந்தான்! என் காலத்தில் இந்த உத்ஸவம் இல்லை! எனவே அவனைத் தரிசிக்க அங்கு சென்றிருந்தேன்.
மிகவும் அருமை!
அடிப்பொடிகள்:
ஆஹா! நமக்கெல்லாம் எப்போதாவது ஒரு முறை தான் கருட சேவை! அதுவும் அவசரமாக! சரி! அதற்கும்
நீர் போடும் கணக்கிற்கும் என்ன சம்பந்தம்?
மங்கையார் (கடுப்புடன்): அங்கு அடியவர்கள் போன்று தோற்றமளித்த சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒரு சிறுவன், கையில் '108 திவ்ய தேசங்கள்' என்ற புத்தகம் வைத்துக் கொண்டு,
அதில் பல கோயில்களுக்கு எதிரே 'Tick Mark' செய்திருந்தான்.
மெதுவாக
விசாரித்ததில், அவன் பெயர் ரங்கன் என்றும், அவன் குறியிட்டது, அவன் 'பார்த்த' திவ்ய
தேசங்கள் என்றும் தெரிய வந்தது! ’86 பார்த்து விட்டதாகவும்’ அவன் எல்லோரிடமும் பெருமை
அடித்துக் கொண்டிருந்தான்.
நான்
எழுதிய பாசுரங்களை மீண்டும் Count பண்ணினேன் - எவ்வளவு திவ்ய தேசங்கள் நான் பார்த்திருக்கிறேன்
என்று! எப்படிக் கணக்குப் போட்டாலும் 85 தான் வருகிறது! Excel-ல் எதோ Bug உள்ளது என்று
நினைக்கிறேன்.
பூதத்தாழ்வார் (அங்கே வந்து): அதெல்லாம் ஒன்றுமில்லை! நீங்கள் 85 தான் பார்த்தீர்கள்!
(இதற்குள் மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் வந்து சேர்கின்றனர்)
மதுரகவியார்:
இதெல்லாம் எனக்குக் கவலையே இல்லை! ஒரு தேசத்தின் மேலும் பாடாமலேயே எனக்கும் உங்களைப்
போல் ஆழ்வார் பட்டம்!
பேயாழ்வார்:
நம் எல்லோரையும் விட அந்தப் பொடியன் அதிகமாகப் பார்த்திருக்கிறானா? நாமும் 106-ஐயும்
பார்த்து விடவேண்டும்!
(மற்ற
எல்லா ஆழ்வார்களும், பூமிப் பிராட்டியும் இதை ஆமோதிக்க, அங்கு திவ்ய தேச Tour
Planning நடக்கிறது ... மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு மனதாக, மங்கையாரை
Tour Coordinator ஆக Volunteer செய்கின்றனர்)
***
(பன்னிரு
ஆழ்வார்களும் கிளம்பத் தயாராக, எதிரே குழப்பம் வர, எல்லோரும் குழம்புகிறார்கள்)
பூமாதேவி:
வாருங்கள் நாரதரே! வேறு இடம் கிடைக்க வில்லையா
நாரதர்:
நாராயணா! தாயே! விளையாட்டு வேண்டாம்! சரி எல்லோரும் எங்கே கிளம்புகிறீர்கள்?
மங்கையார்: திவ்ய தேசங்களைப் பார்க்கப் போகிறோம்!
நாரதர்:
Loan Application போட்டது அலுவலகத்திலா அல்லது வங்கியிலா?
(மங்கையார், பேந்தப் பேந்த விழிக்கிறார்)
நாரதர்:
என்ன ஸ்வாமி! முழிக்கிறீர்! நீங்கள் செல்வது, கலியுலகத்திற்கு! 12 பேர் செல்வதானால்,
இதற்கெல்லாம் நிறைய Vitamin-M(oney) தேவைப்படுமே? அது இல்லாமல் எதுவும் நடக்காது! தரிசனத்திற்குக்
கூட காசு கொடுத்து டிக்கட் வாங்கித் தான் உள்ளே செல்ல வேண்டும்!
Office Loan - ஸ்ரீதேவியிடம் கை மாத்து; Bank Loan - குபேரனிடம் கடன்!
குலசேகரர்: ராமா! நீ ஆண்ட ராஜ்ஜியத்திலா இப்படி
நாரதர்:
போகும்போது, இங்கேயிருந்து தண்ணீர் எடுத்துண்டு போங்கோ! அங்கேயெல்லாம், காசு குடுத்துத்
தான் தண்ணீர் வாங்கணும்! அதுவும் நல்ல தண்ணின்னா காசு நிறைய!
மதுரகவி:
நதிகள் எல்லாம் பூமியில் இப்போது இல்லையா முன்பெல்லாம், நதி அருகே தானே கோயிலும் இருக்கும்
நாரதர் ('உண்மையிலேயே உங்களுக்கு ஒன்றும் தெரியாதா' என்று நினைத்து):
Dam கட்டி, எல்லா நதிகளும்
காலி! நதியில் இருக்கும் மண்ணைக் கூட விடுவதில்லை! மேலும், நாம் வெளியேற்றும் தண்ணீருக்குக்
கூட காசு குடுக்கணும்! ஏதோ Pay-and-Use ஆம்!
பூதத்தார்:
என்ன இது அநியாயம்! அதுக்குக் கூட Freedom கிடையாதா
நாரதர்:
அதிருக்கட்டும்! நீங்கள் எல்லோரும் எந்தக் கலை? வடகலையா தென்கலையா
பேயாழ்வார்: ஆடல், பாடல் போல் அதுவும் ஒரு புதுக் கலையா
நாரதர் (தன் தலையில் அடித்துக் கொண்டு): நாராயணா! அவன் உங்களுக்கு ஒண்ணும்
சொல்லிக் குடுக்கலையா அது தான் ஸ்வாமி! நீங்கள் நெற்றியில் போடும் திருநாமம், Y-யா
அல்லது, U-வா?
உதாரணத்திற்கு,
நீங்கள் பெருமாள் நெற்றியில் Y போட்ட கோயிலுக்குச் சென்றால், நீங்களே பாடிய பாசுரமாக
இருந்தாலும், உங்கள் நெற்றியில் U போட்டிருந்தால், உங்களைப் பாசுரம் சொல்ல விடமாட்டார்கள்!
எனவே,
கோயிலுக்குத் தகுந்தால் போல் மாற்றிப் போட்டு, உள்ளே போங்கள்! Best, ஒத்தை நாமம் மட்டும்
போட்டுச் செல்லுங்கள்!
மேலும்
உங்கள் பாசுரத்திற்கு, நீங்களே நினைக்காத அர்த்தத்தையும் சிலர் உங்களுக்குச் சொல்ல
முயற்சிக்கலாம்! அவர்களையெல்லாம் மன்னித்து விடுங்கள்!
பாணனார்: கோவிந்தா!
நாரதர்: Ticket வாங்கியாச்சா
(பாணாழ்வார் புரியாமல் முழிக்க, நாரதர் சிரிக்கிறார்)
நாரதர்:
நீங்களே போய்த் தெரிந்து கொள்ளுங்கள்! அங்கே போய், VIP தரிசனம் கிடைக்க முயற்சி செய்யுங்கள்!
கொஞ்சம் கிட்டே இருந்து தரிசிக்கலாம். அது கிடைக்க, Vitamin-M போதும்!
நாரதர் (மீண்டும்): எப்படிச் செல்லப் போகிறீர்கள்
மங்கையார்:
நான் ஆடல்மானை குறையலூர் லாயத்தில் இருந்து வாங்கி, அந்தக் காலத்தில் பயணம் செய்தேன்!
அங்கு சென்று, ஆளுக்கு ஒரு குதிரை கேட்டு வாங்கலாம் என நினைக்கிறேன்!
நாரதர் (பலத்த சிரிப்புடன்): ஆழ்வாரே! காமெடி பண்ணாதீர்கள்! இப்போது நீங்கள் செல்ல, Car அல்லது
மினி-Bus வேண்டும்!
பெரியாழ்வார்: கால் நடையாகச் செல்ல முடியுமா?
நாரதர்:
சரியாகச் சொன்னீர்கள்! ரோடு போடுகிறேன் பேர்வழி என்று, சாலைகளில் உள்ள மரமெல்லாம் காலி!
நடந்து செல்ல, நடக்க, Platform-மும் கிடையாது! நீங்கள் நடந்து சென்றால், பின்னால் இருந்து
வேகமாக வரும் வண்டிகள், உங்களை திரும்பவும் வைகுந்தத்திற்கே செலவில்லாமல் அனுப்பிவிடும்!
ஒழுங்காக, Bus ஏற்பாடு பண்ணும்! தங்க ஏற்பாடு பண்ணியாச்சா
பொய்கையார்:
திருக்கோவலூர் மாதிரி, ஏதாவது விட்டுத் திண்ணை, அல்லது மடத்தில் தங்கிக்க வேண்டியது
தான்!
நாரதர் ('நீங்கள் கோயில் பார்த்த மாதிரி தான்!' என்றெண்ணி): ஸ்வாமி! எல்லா இடத்திலும் மடங்கள்
இல்லை! கோயிலும் முன்பு போல் எப்போதும் திறந்து இருப்பதில்லை!
சில
மடங்களில், உணவு இலவசம் என்று சொன்னாலும், அங்குள்ளவர்களுக்குக் காசு கொடுக்க வேண்டும்!
நீங்கள் மறப்பது போல் நடித்தாலும் அவர்கள் விடமாட்டார்கள்!
ஹோட்டல்
தான் வசதி! ஆனால் ஒன்று, ஹோட்டலில் சாப்பிட்டால், ஆச்சாரம் பார்க்காமல், கண்ணை மூடிக்
கொண்டு சாப்பிடுதல் நலம்! சில ஹோட்டல்களில், காப்பியில் கூட வெங்காயமோ அல்லது
Non-Veg-ஜோ இருக்கலாம்! Quality என்ற பேச்சே கூடாது!
நம்மாழ்வார்: ஒண்ணுமே புரியலே உலகத்திலே!
நாரதர்:
ஒரே நாள் போய்ட்டு வாங்கோ! எல்லாம் புரியும்! அப்புறம், எல்லோரும் ஆளுக்கு Mobile ஒன்றும்,
Roaming Connection-உம் வாங்கிக் கொள்ளுங்கள்!
மங்கையார்: கோயிலுக்குச் செல்ல Mobile எதற்கு
நாரதர்:
பல கோயில்களில் அர்ச்சகர், கூப்பிட்டால் தான் வருவார்! ஒரு நாள் முன்னாடியே சொல்ல வேண்டும்!
பின் அவர் வீட்டுக்குச் சென்று, அவரையும் அள்ளிக் கொண்டு, கோயிலுக்குச் சென்று, தரிசனம்
செய்து, அர்ச்சகரை அவரை வீட்டில் விட்டுச் செல்ல வேண்டும்! இல்லாவிடில் அவர் வரமாட்டார்!
நாரதர் (மீண்டும்): இன்னும் ஒண்ணு! சில கோயில்களில், யாராவது வந்து, 'உங்கள் பேரில்
12 வாரங்கள் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்து, பிரசாதம் வீட்டிற்கு அனுப்புகிறேன்' என்று
சொல்லி, பணம் பறிப்பர்! உங்கள் வீட்டிற்கு பிரசாதம் வருமோ தெரியாது! ஆனால் உங்கள் நெற்றியில்
கண்டிப்பாக பட்டை நாமம் விழும்!
பொய்கையார்:
க்ருஷ்ணா! இங்கேயே இருந்து உன்னைப் பார்ப்பது எவ்வளவோ மேல்!
(சொல்லி வைத்தால் போல் அவன், கருடனுடன் Entry ஆகிறான்)
நாராயணன்:
ஆழ்வார்களே! எங்கே புறப்பாடு? தேவலோகத்தில் ஏதாவது வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா?
(மங்கையார்,
நிதானமாக எம்பெருமானுக்கு எடுத்துச் சொல்ல, அவர் கேலிச் சிரிப்புச் சிரிக்கிறார்)
நாராயணன்:
என்னாயிற்று உங்களுக்கு கார் கொண்டு சுற்றினாலும், கடைசி இரண்டையும் பார்க்க, அவர்கள்
இங்கே தானே வரவேண்டும்? நீங்கள் தான் அதையும் பார்த்து விட்டீர்களே
மழிசைப்பிரான்: ஸ்வாமி! இருந்தாலும், கீழே உள்ள அனைத்தையும் நாங்கள் பார்க்கவில்லையே!
மங்கையார்:
நாராயணா! அடுத்த பூலோக School Vacation-ல் அந்தப் பையன் இன்னொரு Tour செல்வானாம்! அப்போது,
106-ஐயும் பார்த்து முடித்து விடுவானாம்!
நாராயணன் (அனைவரையும் பார்த்து): ஆழ்வார்களே! கலி நிஜமாகவே உங்களையும் பிடித்து விட்டது! நீங்கள் எல்லோரும்
பாடியதால் தானே அந்தக் கோயில்களை எல்லாம் அவர்கள் பார்க்கிறார்கள் அவர்கள், எவ்வளவு
புத்தகங்களை வாங்கி Tick செய்தாலும், அவர்களால் கீழே உள்ள அனைத்தையும் பார்க்க இயலாது!
ஏனென்றால், பெரும்பாலோர் நீங்கள் பாடிய ஒன்றை - மிக முக்கியமானது - அவர்கள் மறந்து
விடுகின்றனர்!
(எல்லா ஆழ்வார்களும் முழிக்கின்றனர்)
நாராயணன்:
உண்மையான பக்தன், என்னைத் தேடி வரவேண்டியதில்லை! நானே அவனைத் தேடிச் செல்கிறேன்! அவனுக்கு
என்னிடமும், என் அடியார்களிடமும் உள்ள பக்தி உன்னதமாக இருக்குமாயின், அவனுக்கு நானே
தரிசனம் கொடுத்து, அவன் மனத்தின் உள்ளே நிறைந்து விடுகிறேன்!
நானே
வலியச் சென்று நம் சடகோபனுக்குத் தரிசனம் தரவில்லையா அவர் எந்தக் கோயிலுக்குச் சென்றார்
உண்மையான
பக்தன் மனமே நான் இருக்கும் கோயில்! அது தான் 109-வது திருப்பதி! நெஞ்ச நாட்டுத் திருப்பதி!
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்!* மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் -- மாயனுக்கு என்பர் நல்லோர்* அவை தன்னொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து* இன்று அவன் வந்து
இருப்பிடம்* என்றன் இதயத்துளே தனக்கு இன்புறவே.
இராமாநுஜ நூற்றந்தாதி-106
உங்கள்
நெஞ்சங்களில், நான் எப்போதோ புகுந்தாகி விட்டது! ஆழ்வார்களாகிய உங்களைத் தன் மனத்துள்
வைத்த இராமாநுஜன் என் பக்தன்! அவன் மனத்தினுள்ளே நானும், நீங்களும் இருக்கின்றோம்!
அந்த
இராமாநுஜனை எவன் மனத்துள் வைக்கின்றானோ அவன் மனத்துள், நானும், நீங்களும், இராமாநுஜனும்!
அப்படிப்
பட்ட பக்தன் இருக்கும் இடம், வைகுந்தமே! அவன் திவ்ய தேசங்களைத் தேடிச் சென்று,
Tick Mark போட வேண்டியதில்லை!
சும்மா
ஏதோ 85, 90, 106 என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு, பூலோக மக்கள் போல்
நேரத்தை வீணடிக்காதீர்கள்!
(நாராயணன்,
பாம்பின் மேல் ஏறிப் படுத்துக் கொள்ள, வந்த ’காரியம்’ வெற்றியுடன் முடிந்த திருப்தியுடன்,
‘நாராயண’ என்று சொல்லிக் கொண்டே மறைகிறார் நாரதர்)
***
இடம்: பூலோகம், இன்றைய தென் தமிழ் நாடு
நேரம்: விரட்டப் படும் நேரம்
நோய்கள்:
நாங்கள் யமனின் தூதர்களால் அனுப்பட்டுள்ளோம்! 'உங்கள் உடலை நசித்து, உயிர் இழக்கச்
செய்ய வேண்டும்' என்பது எங்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளை!
பெரியாழ்வார்:
இங்கே நீங்கள் கட்டாயம் நுழையக் கூடாது (புகேன்மின்! புகேன்மின்!)
('கண்டிப்பாக
நுழைய வேண்டாம்' என்று சொல்ல, 'புகேன்மின்' என்று இருமுறை சொல்வது தமிழுக்கே உரிய அழகு!
இன்றும், கர்நாடக மாநிலத்தில் உள்ள மேலக்கோட்டையில் தமிழ் பேசுபவர்கள், 'கட்டாயம் வரவேண்டும்'
என்று சொல்ல, 'வரவே வரவேணும்' என்பர்!
இப்போதைய
செந்தமிழ்: 'வரலேன்னா உன்னைக் கைம்மா பண்ணிருவேன்')
நோய்கள்: ஏன்
ஆழ்வார்:
என் உடலும், நெஞ்சமும், பழைய மாதிரி அல்ல! (பண்டு அன்று)
நோய்கள்: ஏன்
ஆழ்வார்:
அவை, இப்போது ஒரு புதிய ஊர் (பட்டினம்). பழையதை அழிக்கவே உங்களுக்கு அதிகாரம் தரப்பட்டது!
புதியதை அல்ல! எனவே, ஓடி விடுங்கள் (புகேன்மின்)!
நோய்கள்:
புதிதாக எங்களுக்குத் தெரியாமல் யார் நிர்மாணித்தது
ஆழ்வார்:
சிங்கப்பிரான்! அவன் என்னுள் புகுந்து விட்டான்! இனிமேல் இது அவனுடைய கோயில் (சேரும்
திருக்கோயில் கண்டீர்)! இங்கு நுழைவது கஷ்டம் (எளிதன்று கண்டீர்)! எனவே
நுழையாதீர்கள் (புகேன்மின்)!
நோய்கள்:
நாங்கள் புகாமல் திரும்பிச் சென்றால், நமன் தமர் எங்களைக் கொன்று விடுவர்!
ஆழ்வார்:
அவமானப் படாமல் (பங்கப் படாது), உயிர் வாழ (உய்ய) வேண்டுமென்றால் ஓடி
விடுங்கள் (போமின்)! இங்கு காவல் (காப்பு) அதிகம்!
(அவை,
'புகுந்தால், இவன் அடிப்பான், புகாவிட்டால் யமன் அடிப்பான்' என்று புலம்புகின்றன)
***
நாராயணன்
ஆழ்வார்களுக்குச் சொன்னது போல், பெரியாழ்வாரின் நெஞ்சமே இந்தப் பாசுரத்தில் சொன்ன திருக்கோயில்!
பெரியாழ்வாரைப்
போல், பல ஆழ்வார்கள், தங்கள் நெஞ்சத்தையே, எம்பெருமான் புகும் கோயிலாக நினைத்து, பல
பாசுரங்கள் இயற்றி உள்ளனர்.
நம்மாழ்வார்,
எம்பெருமான் தன் நெஞ்சில் புகுந்த விதத்தை, ஒரு அழகிய பாசுரம் மூலம் வருணிக்கின்றார்:
மாயப் பிரான்* என வல்வினை மாய்ந்து அற*
நேயத்தினால்* நெஞ்சம் நாடு குடி கொண்டான்*
தேசத்து அமரர்* திருக்கடித்தானத்தை*
வாசப் பொழில்* மன்னு கோயில் கொண்டானே.
திருவாய்மொழி-8-6-4
எம்பெருமான்,
தான் மட்டும் அல்லாது, தான் ஏற்கனவே கோயில் கொண்ட திருக்கடித்தானம் எனும் திவ்ய தேசக்
கோயிலோடும், பரமபதத்தோடும், நம்மாழ்வாரின் 'நெஞ்சம் நாடு' குடி கொண்டானாம்!
பதினொரு
ஆழ்வார்கள், அரங்கனைப் பற்றிப் பாடினாலும், மதுரகவியார் பாடிய திவ்விய தேசம், மனம்
எனும் 109 திவ்விய தேசம் மட்டுமே! ஆக, 12 ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்விய தேசம், நெஞ்ச
நாட்டுத் திருப்பதியே!
(இந்தப்
பாசுரத்துடன், பெரியாழ்வார் அனுபவித்த நரசிம்மர் பாசுரங்கள் முடிகின்றது. அடுத்த பாசுரத்தில்,
ஸ்ரீ ஆண்டாளை அழைக்கலாம்)
பெரியாழ்வார்
திருவடிகளே சரணம்!
No comments:
Post a Comment