ஸ்ரீலக்ஷ்மீ குபேர பூஜை
இந்த வருஷம் தீபாவளி மறுநாள் 03-10-2013 ஞாயிறு வருகிறது.
கேதார கௌரி விரதம்.
தீபாவளிப் பண்டிகையை,
பல்வேறு கலாசாரப் பின்னணியுள்ள நாம், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு
காரணத்தை முன்னிட்டுக் கொண்டாடுகின்றோம்.
தென்னிந்தியாவில்
நரகாசுரவதத்தைக் கொண்டாடும் நாளே தீபாவளி. உத்திரப்பிரதேசத்தில், ஸ்ரீராமர்,
வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நன்னாளே தீபாவளி. ஜைனர்களும் பகவான் மஹாவீரர்,
முக்தி அடைந்த நன்னாளே தீபாவளி. பௌத்தர்களும் தீமைகள் அகல ஒளிவிளக்கேற்றும்
நன்னாளாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
வட இந்தியர்கள் ஐந்து
நாள் பண்டிகையாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
தீபாவளிக்கு முதல்
நாள் தன திரயோதசியாகக் கொண்டாடுகின்றனர். அன்று தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த
பொருட்கள் வாங்கினால், அவை பெருகும் என்பது நம்பிக்கை. அன்றைய நாள் தன்வந்த்ரி
ஜெயந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.
அன்று மாலை
வீடெங்கும் தீபமேற்றுவர். இதை ஒட்டி ஒரு புராணக் கதை கூறப்படுகின்றது. ஹிமா என்ற
அரசனின் 16 வயது மகன், திருமணமான நான்காம் நாள் இரவு பாம்பு கடித்து இறப்பான்
என்று அவன் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் சொல்ல, அவன் இளம் மனைவி, அந்த நாளில்,
வீடெங்கும் தீபமேற்றி, நடுவில் ஒரு குவியலாக, தன் ஆபரணங்களை வைத்து, தன் கணவனைத்
தூங்க விடாது, பாடல்களைப் பாடியும், புராணக் கதைகளைச் சொல்லியும் பார்த்துக்
கொண்டாள். பாம்பு உருவில் வந்த யமதர்மராஜா, தீபங்கள் மற்றும் ஆபரணங்களின் பிரகாசம்
கண்களை கூசச் செய்யவே, விடியும் வரை காத்திருந்து பின் திரும்பி விட்டாராம்.
இவ்வாறு அந்தப் பெண், தன் கணவனைக் காத்தாளாம். ஆகவே, யம பயம் நீங்க, யமதீபம்
ஏற்றப்படுகின்றது. வீடு, மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு, பூஜை
நடத்தப்படுகின்றது. சதுர்த்தசி தினத்தன்று, நம்மைப்போலவே, நரக சதுர்த்தசி கொண்டாடுகின்றனர்.
அடுத்த நாள், அமாவாசையன்று இரவு லக்ஷ்மி பூஜையை வெகு விமரிசையாக நடத்துகின்றனர்.
தீபாவளி அமாவாசை மறு நாள் பலி பிரதிமா(மஹாபலி வருடத்திற்கொரு முறை தன் மக்களைக்
காண வரும் நன்னாள், இதை கேரள மாநிலத்தவர் 'ஓணம்' பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்).
அதற்கடுத்த நாள் பாய் தூஜ். யமனுடைய சகோதரி யமுனாதேவி, அன்றைய தினம் தன்
வீட்டுக்கு வந்த தன் சகோதரனுக்குத் திலகமிட, யமதர்மராஜாவும், தீர்க்க சுமங்கலியாக
இருப்பாய் என வாழ்த்தினாராம். மேலும், அன்றைய தினம், யாரொருவர், தம் சகோதரி கையால்
திலகம் அணிகிறாரோ அவருக்கு நரக வாசம் என்பது கிடையாது என்று வரமளித்தாராம். ஆகவே,
அன்றைய தினம், சகோதரிகள், தம் சகோதரரை திலகமிட்டு வாழ்த்தி, இனிப்பு அளிப்பது
வழக்கம். இந்தக் கட்டுரையில், தீபாவளியன்று ஸ்ரீலக்ஷ்மீ பூஜை செய்வதன்
முக்கியத்துவம் குறித்துப் பார்க்கலாம். தீபாவளி அமாவாசை முழுக்க முழுக்க இறைவழிபாட்டுக்குரியதாகவே
இருப்பது கண்கூடு. தென்னிந்தியர்கள் கேதார கௌரி விரதம் நடத்தும் நாளில், வட
இந்தியர்கள் லக்ஷ்மீ பூஜை செய்கிறார்கள். இது குறித்த கதையொன்று உங்கள் மேலான
பார்வைக்காக. இது புராண கதை என்று கூறப்பட்டாலும் கர்ணபரம்பரைக் கதை போலவே பல
இடங்களில் தோன்றுகிறது.
ஒரு சமயம் சனகாதி
முனிவர்கள், சனத் குமாரரிடம்,' ஏன் தீபாவளி தினத்தன்று பிற தேவதைகளை விடவும்
ஸ்ரீலக்ஷ்மீ தேவிக்கே முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்கின்றோம்' என்று கேட்க,
சனத் குமாரரும், பின்வருமாறு கூறலானார்.
'ரிஷிகளே!! அசுர
வேந்தன் மஹாபலி, அனைத்து தேவதைகளையும் தன் பலத்தால் வென்று சிறையில்
வைத்திருந்தான். பகவான் ஸ்ரீவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மஹாபலியை வென்று அனைத்து
தேவதைகளையும் விடுவித்தார். அவர்கள் அனைவரும் மனநிறைவுடன் பாற்கடலுக்குச்
சென்றனர். அங்கு ஸ்ரீலக்ஷ்மீ தேவியைக் கண்டு பணிந்து வணங்கித் துதித்தனர். அவர்கள்
அனைவரையும் ஸ்ரீலக்ஷ்மீ தேவி, புதிய ஆடைகள், அணிமணிகள் தந்து வரவேற்றார். அன்றைய
தினம் தீபாவளி அமாவாசை. ஆகவே, அன்று ஸ்ரீலக்ஷ்மியைப் பணிந்து வணங்கினால், அவரோடு
இருக்கும் அனைத்துத் தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். மேலும், லக்ஷ்மீ
கடாக்ஷம் பெற வேண்டுவோர் அன்று புது ஆடைகள் அணிந்து, ஸ்ரீலக்ஷ்மிக்கு பூஜை செய்ய
வேண்டும்' என்றுரைத்தார்.
அப்போது சனகாதி
முனிவர்கள், 'ரிஷியே, ஒரு சமயம், மஹாபலி, ஸ்ரீலக்ஷ்மீ தேவியை, ஒரு வரத்தின் மூலம்
வேறெங்கும் செல்லவொட்டாது தன் இருப்பிடத்திலேயே இருக்குமாறு செய்திருந்தானல்லவா..
எப்போது தேவியை அவன் விடுவித்தான்?' என்று கேட்க, சனத் குமாரர் பின்வருமாறு
கூறலாயினார். 'முனிவர்களே!!, மஹாபலி, முதலில் தேவர்களிடம் போர் செய்து தோல்வியே
அடைந்தான். அதன் காரணமாக, ஒரு கழுதையாக மாறி மறைந்து திரிந்தான். அவனை தேவராஜனான இந்திரன்
தேடி அலைந்து வரும் பொழுதில், மஹாபலியைக் கண்டுணர்ந்து அவனைக் கொல்ல முனையும்
போது, பிரம்ம தேவர் குறுக்கிட்டு, தடுத்தார். அவர் சொற்படி, தேவேந்திரன்
மஹாபலியைக் கொல்லாது விடுத்தார். அச்சமயம், பலியின் உடலில் இருந்து ஒரு தேவி
வெளிவந்தாள். அவள் தேவேந்திரன் சமீபம் வர, அவளைப் பார்த்து, பிரமித்த இந்திரன்,
பலியிடம், 'இந்தப் பெண் யார், இவள் அசுரப் பெண்ணா, தேவலோக மங்கையா' என்று
வினவினார்.
மஹாபலி, 'இந்திரா,
சாக்ஷாத் ஸ்ரீலக்ஷ்மீ தேவியே இந்தப் பெண்' என்று பதிலிறுக்க, தேவேந்திரன், மிகப்
பணிவுடன், ஸ்ரீலக்ஷ்மீ தேவியை அணுகி, 'அம்மா, தாங்கள் அசுர வேந்தனை விட்டு நீங்கி,
தேவர்களுக்கு அருள்புரிய திருவுளம் கொண்டதன் காரணம் நான் அறியலாமா' என்று
கேட்டார்.
அதற்கு ஸ்ரீலக்ஷ்மீ
தேவி, ' நான், உண்மை, தர்மம், தானம், தவம், பராக்ரமம் முதலியவை
நிறைந்தவர்களிடத்தும் நன்னடத்தை உடையவர்கள், விடிகாலையில் எழுபவர்கள், பகலில்
உறங்காதவர்கள், தேவையுள்ளவர்களுக்கு உதவுபவர்கள், தனித்து உண்ணாதவர்கள்,
குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் முதலில் உணவளிப்பவர்கள், மூத்தோர்களுக்கு
மரியாதை கொடுப்பவர்கள், அதிகம் கோபப்படாதவர்கள், எளியோரைத் துன்புறுத்தாதவர்கள் ஆகியோரிடத்திலேயே
நிலையாக இருப்பேன். அசுரர்கள் எளியோரைத் துன்புறுத்தியும், தர்மத்திலிருந்து
வழுவியும் நடந்தார்கள். அசுரவேந்தனான மஹாபலி, அவர்களைத் தட்டிக் கேட்கவில்லை.
ஆகவே, அவர்களை விட்டு விலகி, தேவர்களுக்கு அருள்புரியலானேன்’ என்று அருளினாள்.
இந்திரன் மிக மகிழ்ந்து,
தேவியைப் பலவாறு துதித்து, ஸ்வர்க்க லோகத்திற்கு எழுந்தருளுமாறு பிரார்த்தித்தான்’
இவ்வாறு கூறி முடித்தார் சனத்குமாரர்.
தீபாவளியன்று ஸ்ரீலக்ஷ்மியை வழிபடுவதன் உட்பொருள்: சுத்தம் நிரம்பிய இடத்தில் லக்ஷ்மி தேவி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. தீபாவளி தினத்திற்கு முன்னரே, வீட்டைச் சுத்தம் செய்து, அலங்காரம் செய்வது வழக்கம். மேலும் பூஜையின் போது, துடைப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். துடைப்பத்திற்கும் மஞ்சள் குங்குமம் இட்டு வழிபாடு செய்வது வழக்கம். தீபாவளி தினத்தன்று வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றோம். அஞ்ஞான இருளகலும் இடத்தில், மெய்ஞானப் பேரொளியாகிய லக்ஷ்மீ தேவி தோன்றுகின்றாள். நீரை அன்புக்குக் குறியீடாகச் சொல்வது வழக்கம். அன்பு வெள்ளம் என்றே குறிப்பிடுகின்றோம். லக்ஷ்மீ தேவி நீர் மேல் தாமரை மலரில் அமர்ந்தருளுவதாகவே புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆக, அன்பு என்ற நீர் நிரம்பியிருக்கும் உள்ளத்தில் லக்ஷ்மீ தேவியாகிய தெய்வீக சக்தி அருளும். தாமரை மலர் பற்றற்ற தன்மையைக் குறிப்பது. உலகக் கடமைகளை பற்றில்லாது செய்து வர, அன்னையின் அருள் கிடைக்கும். அன்னையின் இரு கரங்களிலும் தாங்கியிருக்கும் தாமரை மலர்களும், அன்னை அணிந்திருக்கு அளவில்லாத ஆபரணங்களும், வாழ்வின் ஒளி பொருந்திய தன்மையையும், வாழ்வை மிக சந்தோஷமாக அணுக வேண்டிய முறையையும் உணர்த்தும் அதே நேரத்தில், வாழ்வை நிலையாக எண்ணாத பற்றற்ற தன்மையையும் உணர்த்துகின்றன. வீடெங்கும் நல்லொளி பரவும் நேரத்தில், நம் மனதிலும் தெய்வீகப் பேரொளி பரவ வேண்டியே ஸ்ரீலக்ஷ்மீயைப் பூஜிக்கின்றோம்.
பூஜிக்கும் முறை
வட இந்தியாவில், மாலை
வேளையிலேயே லக்ஷ்மீ தேவியைப் பூஜிக்கின்றார்கள். ஸ்ரீலக்ஷ்மீ பூஜையை, லக்ஷ்மீ
குபேர பூஜையாகச் செய்வதும் வழக்கில் இருக்கின்றது. ஸ்ரீலக்ஷ்மியை வரவேற்கும்
முகமாக, வாசலில் இருந்து பூஜை செய்யும் இடம் வரை, அரிசி மாவினால் தேவியின்
திருப்பாதங்களைக் கோலமாக இடுகின்றனர். பூஜை செய்யும் இடத்தில், பூர்ண கலசத்தில்
அம்பிகையை ஆவாஹனம் செய்து, அகல் விளக்கு ஏற்றி, நறுமண மிக்க மலர்கள், தூப
தீபங்கள், பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அன்னையை வணங்குகின்றனர். பூஜையில் தாமரை
மலர்கள் பிரதான இடம் பெறுகின்றன. பூஜைப் பிரசாதமான இனிப்புகளை விநியோகிப்பது
கட்டாயம். பூஜையில் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு உட்பொருள் உண்டு.
எடுத்துக்காட்டாக, பஞ்சாமிர்தம். தேவிக்கு, பால், தயிர், நெய், வெல்லம், தேன்
கலந்த பஞ்சாம்ருதத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஒரு மாபெரும் தத்துவம் அடங்கி
உள்ளது. இறைவனை அடைய, பக்தி மார்க்கமே சிறந்தது. தூய்மையான இறை பக்தி நிலையை அடைய,
அமைதியான மனமே முதல் தேவை. பால் மன அமைதியைத் தரும். தயிர். இது பாலை, உறை உற்றி,
அசையாமல் சில மணி நேரங்களுக்கு வைத்துப் பின் கிடைப்பது. பால் பொறுமையாக, பல மணி
நேரங்கள், தனக்கு நிகழும் வேதிவினைகளைச் சகிப்பதாலேயே தயிர் கிடைக்கிறது. தயிர்
நமக்கு உணர்த்துவது, பொறுமை, சகிப்புத்தன்மை என்னும் மிக அரிய பெருங்குணங்கள்.
நெய் தயிரிலிருந்து, வெண்ணை எடுத்துப் பின் அதை உருக்குவதால் கிடைப்பது. தன்னை
வெப்பத்தால் உருக்கினாலும், அதற்காக கோபிக்காமல், வாசனையுள்ள திரவமாக உருமாற்றம்
அடைகிறது. அதனாலேயே, தீபங்களுக்கும், ஹோமத்திற்கும் பயன்படுத்துகிறோம். நெய்
நமக்கு உணர்த்துவது, மன்னிக்கும் தன்மை என்னும் அரிய குணம். வெல்லம்: இது கரும்பு
பல வித உருமாற்றம் அடைவதால் கிடைப்பது. தன்னையே தியாகம் செய்து, மிக இனிமையான
பொருளாக உருமாறி நமக்குக் கிடைக்கிறது. தியாகம் என்னும் மிக உயரிய குணம், வெல்லம்
நமக்கு உணர்த்துவது.
தேன்: தேனீ, மலர்கள்
தோறும் பறந்து சென்று, துளித்துளியாகத் தேனைச் சேகரித்து வைக்கிறது. அந்தத் தேனை
நாம் தான் உபயோகிக்கிறோம். தனக்கென வாழாது பிறர் நலம் நாடும், சுயநலமின்மையே, தேன்
நமக்கு உணர்த்துவது.
அமைதி,
பொறுமை,சகிப்புத்தன்மை, மன்னிக்கும் தன்மை, தியாக மனப்பான்மை, சுயநலமின்மை இவை
யாவும் நிறைந்தவனே, முழுமையான மனிதன். இந்நிலை அடைந்தவருக்கே பக்தியும் இறையருளும்
எளிதில் வசப்படும் இதுவே மானிடப்பிறவியின் நோக்கம்.
மறைமுகமாக, இவ்வைந்து
குணங்களும் நமக்கு அருள வேண்டி, பஞ்சாமிர்தத்தைச் சமர்ப்பிக்கிறோம்.
நம்முள் பொங்கும்
நேர்மறை சக்திகளைத் தூண்டும் முகமாகவே பூஜை முறைகள், விரதங்கள், விரதக் கதைகள்
யாவும் இருப்பது கண்கூடு. இப்போது தென்னிந்தியாவிலும் ஸ்ரீலக்ஷ்மீ பூஜை செய்யும்
வழக்கம் பெருகி வருகிறது.
நம்பிக்கையுடன்
செய்யும் இறைவழிபாடு, கட்டாயம் நல்லனவற்றை நம்மோடு சேர்க்கும்!!..
அன்பர்கள்
அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment