*பெருமாள் கோவிலில் சடாரியை தலையில் வைப்பது ஏன்?*
பெருமாள் கோவிலில் தரிசித்த உடன் நாம் எதிர்பார்ப்பது சடாரியை நம் சிரசில் வைத்து ஆசி பெறுவதைதான் முக்கியமாக எதிர்பார்க்கிறோம். அந்த சடாரி நம் தலையில் வைக்கப்பட்டாலே இறைவனுடைய ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்ட உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அதன் காரணம் சடாரியில் இறைவனுடைய பாதம் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.
அகலிகை தன் கணவரின் சாபத்தால் கல்லாக மாறி ஸ்ரீராமரின் பாதம்பட்ட பிறகு சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாக மாறியதை போல, சடாரியை நம் தலையில் வைக்கும் போது சாபங்களும், தோஷங்களும் விலகுகிறது. காரணம், சடாரியின் மேல் ஸ்ரீமந் நாராயணனின் திருவடி பொறிக்கப்பட்டிருக்கும் என்கிறது சாஸ்திரம். ஒருசமயம், வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் வழக்கமாக தன் பாதுகையை விடும் இடத்தில் விடாமல் தன்னுடைய அறையில் கழற்றி வைத்தார்.
இதை கண்ட சங்கு, சக்கரம் மற்றும் கிரீடத்திற்கும் கோபம் ஏற்பட்டது. தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினால் சுவாமி கோபித்துக்கொள்வார் என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தனர். அச்சமயம், ஸ்ரீமந் நாராயணனை தரிசிக்க முனிவர்கள் வந்திருப்பதாக தகவல் வந்ததால் முனிவர்களை காக்க வைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆதிசேஷன் மடியில் உறங்கிக் கொண்டு இருந்தவர் அவசர அவசரமாக எழுந்து. தன் பாதுகையை அணியாமல் சென்றார். ஸ்ரீமந் நாராயணன் வெளியே சென்றதால் மகிழ்சியடைந்த சங்கு, சக்கரம், கிரீடமும் ஸ்ரீமந் நாராயணணின் பாதுகைகளை பார்த்து, “கேவலம் பாதத்தின் கீழ் இருக்கும் நீ, ஸ்ரீமகாவிஷ்ணுவை அலங்கரிக்கும் நாங்கள் இருக்கும் இடத்தில் எப்படி எங்களுக்கு சரிசமமாக இருக்கலாம். நீ இருக்க வேண்டிய இடம் இங்கல்ல வெளியேதான் என்பதை மறந்துவிட்டாயா? என்னதான் கால்களுக்கு பாத பூஜை செய்தாலும் அது நன்றி இல்லாதது. கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கமால் தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட அந்த கால்களுக்கு அடியில் இருக்கும் உனக்கு எப்படி மரியாதை தர முடியும்.?” என்று ஏக வசனத்தில் பேசியது சங்கும், சக்கரமும். கீரிடமும்.
அதற்கு அந்த பாதுகை, “அப்படி பேசாதீர்கள். யாருக்கு ஆபத்தென்றாலும் உதவிக்கு ஓட உதவுவது கால்கள்தான். அந்த கால்களுக்கு மரியாதை செய்யவே பாதபூஜை செய்கிறார்கள். அப்படிபட்ட புண்ணியவான்களின் கால்களுக்கு பாதுகையாக இருப்பதில் எங்களுக்கு பெருமைதான்.” என்று கூறிய பாதுகை, “பெருமாளே என் பிறவி கேவலமானதா?” என்று அழுதது. அப்போது முனிவர்களை சந்தித்து விட்டு திரும்பி வந்த ஸ்ரீமந் நாராயணன், தன் அறையில் நடந்த சம்பவத்தை உணர்ந்துக் கொண்டார் சங்கு, சக்கரம் மற்றும் கிரீடத்தை அழைத்த ஸ்ரீமகாவிஷ்ணு, “ஒருவரை பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது அவர்களுடைய தவறை நீங்கள் விமர்சிக்கவில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அவர்களிடமே அதை பற்றி பொறுமையாகவும் தெளிவாகவும் பேசி தவறை திருத்த பார்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களின் மனம் நோகும்படியாக விமர்சிப்பது அவர்கள் மேல் இருக்கும் பொறமையால்தானே தவிர அவர்கள் மேல் இருக்கும் தவறால் அல்ல என்பதை முதலில் நீங்கள்புரிந்துக்கொள்ளுங்கள்.
பாதுகை இத்தனை நாள் வெளியே இருந்ததால் உங்களுக்கு அதன் மீது பொறாமை வரவில்லை. ஆனால் இன்றோ என்னுடைய அறையில் உங்களுக்கு சரிசமமாக வந்து விட்டதே என்ற எண்ணத்தில் பாதுகையின் மேல் பொறாமை கொண்டு கீழ் தரமாக பேசி இருக்கிறீர்கள். இதற்கு தண்டனையாக எனது இராம அவதாரத்தில் சங்கும், சக்கரமாகிய நீங்கள்தான் பரதன், சத்ருகனாக பிறப்பீர்கள். உங்களுக்கு அரசபதவி கிடைத்தாலும் அதனை ஏற்க முடியாமல் போகும். நீங்கள் எந்த பாதுகையை அவமானம் செய்தீர்களோ அதே என்னுடைய பாதுகையைதான் 14 வருடம் சிம்மாசனத்தில் வைத்து பூஜிப்பீர்கள். கிரீடமே… என் சிரசின் மேல் இருப்பதால்தானே உனக்கும் ஆணவம். அதனால் உன் மீதுதான் என் பாதுகையே இருக்கும்.” என்றார் ஸ்ரீமந் நாராயணன். கிரீடத்தின் மீது இறைவனின் திருவடி, அதாவது பாதுகை இருக்கும் சடாரியை நம் தலையில் வைத்து ஆசி பெற்றால் நமக்கும் நம்மை அறியாமல் உள்ளூணர்வில் இருக்கும் ஆணவம், அகங்காரம் அத்துடன் எல்லா தோஷங்களும் நீங்கும். இறைவனின் ஆசியை முழுமையாக பெற அருள் செய்யும் சடாரி.!
***சர்வம் கிருஷ்ணார்ப்பணம்***
No comments:
Post a Comment