மஹா பெரியவாவின் 100 முத்தான பொன்மொழிகள்:
1. நம் தாயாகிய பூமி, நமது விருப்பங்கள் அனைத்தையும் நமக்கு அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாத்து போற்றுங்கள்…
2. நம் தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே, அவரை வணங்குங்கள்…
3. பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.
4. எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.
5. எடுத்துச் சொல்வதைவிட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.
6. வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.
8. அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.
9. தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
10. நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.
12. பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.
13. இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராய்ச்சி செய்யுங்கள்.
14. காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை பக்தியுடன் வழிபடுங்கள்.
15. அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.
16. அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.
17. எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.
18. பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.
19. அன்பினால் பிறரை திருத்துவதுதான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.
20. நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக் குறைவானதே.
21. தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் 'தியாகம் செய்தேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.
22. ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
23. கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.
24. கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.
25. அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது… யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.
26. உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள்... செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.
27. பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.
28. பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
29. நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
30. நல்ல உணவுகளால் உடல் பலம் பெறுவது போல நல்லவர்களின் நட்பால் மன நலம் காக்கப்படும்.
31. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தால் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.
32. தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனைத் திருப்திப்படுத்த முடியும்.
33. உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.
34. கடவுள் நல்ல புத்தி கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் ஈடுபடுங்கள்.
35. எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.
36. பாவத்தை கணப்பொழுதில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.
37. நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.
38. எல்லார் இதயங்களையும் நட்பால் வெல்லுங்கள். பிறரையும் தன்னைப் போல் நோக்குங்கள்.
39. பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.
40. சேவையில் ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும் மிகவும் அவசியமானவை.
41. புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் 'நான்' என்னும் ஆணவம் கூடாது.
42. மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.
43. பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.
44. வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.
45. வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
46. பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.
47. சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.
48. எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.
49. சமூக சேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.
50. ராமனுக்கு உதவிய அணில் போல தொண்டு சிறிதாக இருந்தாலும் போற்றுவதற்கு உரியதே.
51. நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.
52. தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.
53. கடவுள் புத்தியைக் கொடுத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.
54.எல்லாம் ஒன்று என்ற விழிப்பு வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், பிறவி ஆகிய துன்பங்கள் நீங்கி விடும்.
55.ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.
56. ஆசை வயப்பட்ட மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். கோபம் பாவம் செய்யத் தூண்டுகிறது. அதனால், உயிர்களுக்கு பிறவிச் சங்கிலி தொடர்கிறது.
57. பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்துவது அவசியம்.
58. போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது. பணத்தாசையால்தான், மனிதர்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதுகின்றனர்.
59. வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.
60. வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.
61. உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.
62. பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.
63. எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.
64. யாரையும் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை கூடாது. அனைவரிடமும் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.
65. மனதில் எழும் ஆசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.
66. குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.
67. மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
68. கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.
69. கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.
70. கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.
71. கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.
72. கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் கொடுக்காவிட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம்.
73. பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகத் திரும்பி விடும்.
74. ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.
75. சிந்தித்துப் பார்த்தால் யார் மீதும் கோபம் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர முடியும்.
76. பூமியை விட்டுச் செல்லும் முன் 'என்னிடம் பாவமே இல்லை' என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.
77. அறியாமையால் மனிதன் மனதாலும், செயலாலும் பாவம் செய்யும் தீய சூழலுக்கு ஆளாகிறான்.
78. வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.
79. உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீய குணங்கள் யாவும் மறையும்.
80. துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.
81. பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.
82. மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.
83. எதிலும் அதன் அளவு அறிந்து நடந்தால் மன அமைதியுடன் வாழலாம்.
84. நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.
85. எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழியாகும்.
86. ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும், பொது நியாயத்தைச் செய்வது நல்லது.
87. கடவுளைப் பூஜிப்பதால் மனம் சுத்தம் அடைவதோடு, புண்ணியமும் உண்டாகிறது.
88. பூஜை மட்டுமில்லாமல், சாப்பிடும் போது மனதிற்குள், 'கருணையால் எனக்கு அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என்று சிந்திப்பது இன்னும் நல்லது.
89. உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
90. பக்தியோடு உண்பதால் மனதில் நல்லெண்ணம் உண்டாகும். இந்த பழக்கம் நாம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.
91. உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே ஏற்படும்.
92. மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை 'கர்ம கோட்பாடு' என கூறுகிறது.
93. அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.
94. 'மவுனம் கலக நாஸ்தி' என்பர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது என்பது இதன் பொருள்.
95. பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.
96. அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.
97. மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.
98. இறைவனின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தினமும் தியானம் செய்யுங்கள்.
99. எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம். சுயநலத்துடன் ஆசையால் செய்யும் அனைத்தும் பாவம்.
100. நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.
No comments:
Post a Comment