ராம் ராம்.....
#திருமுருக_கிருபானந்தவாரியார்!!
சுடுகாடு எங்கே இருக்கிறது?
ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .
அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , ” நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? ” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள் , ” ஊர் கோடியில் இருக்குது! “... என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள்.
உடனே , ” ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்.
அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , ” இதோ இங்கே இருக்குது…! மாமிசம் சாப்பிடும் அனைவருக்கும் அவர், அவர் வயிரே சுடுகாடு “ என்று கூறி வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது.
மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது வாரியார் அவர்கள் சொன்ன உதாரணம்
உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே!அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது சொன்னது:
"சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9-10.30 முகூர்த்தம். பிரமன் 6 மணி முதலே அக்னி வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்
. மணி 8.55 ஆகிவிட்டது. பெண்ணைப் பெற்ற காஞ்சனமாலை பதறுகிறார் மாப்பிள்ளை வரவில்லையே என்று.
மணி 9. கைலாயத்தில் இறைவன் நந்திதேவரிடம்,"நந்தி! புறப்படலாமா" என்று கேட்கிறார். இங்கே மதுரை அரண்மனைக்கு ஒரு சேவகன் ஓடியே வந்து மாப்பிள்ளை மாசி வீதியில் வந்துகொண்டிருக்கிறார் என்றான்.
திரும்பிப்பார்த்தால் மணவறையில் பிரம்மதேவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். 9 மணிக்குக் கயிலையில் புறப்பட்டார். அதே 9 மணிக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தார்.
எப்படி முடியும் என்று கேட்கலாம். உலகத்தில் சூரியன் 6 மணிக்கு உதிக்கும் என்றால் மெட்ராஸ்லயும், கோயமுத்தூர்லயும், மதுரையிலயும் 6 மணிக்குத் தான் உதிக்கும். மெட்ராஸ்ல காலை 6 மணிக்கு உதிக்க ஆரம்பித்து அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை என்றா போகும்?
சூரியனே இப்படி என்றால் முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் தலைவனான எம்பெருமான் சிவபெருமான் 9 மணிக்குக் கிளம்பி அதே 9 மணிக்கு வருவது சாத்தியமான விஷயம்தான் என்றார்.
கொடுத்தால் தான் கிடைக்கும்
கிருபானந்த வாரியார் சுவாமிகள், சொற்பொழிவின் போது, தோளில் மாலை அணிந்தபடியே பேசுவது வழக்கம்.
ஒருமுறை திருவாரூரில் சொற்பொழிவு! அப்போது மேடையில் இருந்த வாரியார் சுவாமிகளுக்கு, மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்தார்.
ஏற்கெனவே சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார்.
இதைப் புரிந்து கொண்ட சுவாமிகள், தோளில் கிடந்த மாலையைக் கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார்.
உடனே இதற்காகவே காத்திருந்தவர் போல், விறுவிறுவென வந்து சுவாமிகளுக்கு மாலை அணிவித்தார் அந்த அன்பர்.
அப்போது கூட்டத்தினரைப் பார்த்து சுவாமிகள், ”எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது கொடுத்தால்தான், அடுத்தவர்கள் நமக்குக் கொடுப்பார்கள்” என்றாராம்
திருமுருக கிருபானந்த வாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்..
No comments:
Post a Comment