பச்சை வர்ண பெருமாள் ஆலயம் மற்றும் பவள வர்ணப் பெருமாள் ஆலயம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் இரண்டு வைஷ்ணவ ஆலயங்கள் எதிரும் புதிருமாக உள்ளன.
பச்சை வர்ண பெருமாள் ஆலயம் மற்றும் பவள வர்ணப் பெருமாள் ஆலயம் எனும் அவை இரண்டையும் சேர்த்தே 108 திவ்ய தேசங்களில் ஒரே திவ்ய தேசம் ஆகும்.
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றது பவளவண்ணர் திருத்தலம்.
இரண்டு ஆலயத்திலுமே ஸ்ரீ விஷ்ணு பகவானே மூல தெய்வமாக உள்ளார். இந்த இரண்டு ஆலயங்களையும் ஒரே நாளில் சென்று தரிசிக்க வேண்டும்
இவ்விரண்டு பெருமாள்களையும் கூர்ந்து நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம்.
மகாவிஷ்ணு கிருதயுகத்தில் பால் நிறமாகவும், திரேதாயுகத்தில் பவள நிறமாகவும், துவாபரயுகத்தில் பசுமை நிறமாகவும், கலியுகத்தில் நீல நிறமாகவும் காட்சி தந்தாராம் அப்படிப் பார்த்தால் இங்குள்ள பவள வண்ணப்நபெருமாள் திரேதாயுகத்தில் அருள் செய்தவராக இருக்கிறார்.
அருள்மிகு பச்சை வண்ணன் திருக்கோவில்
மூலவர் : பச்சைவண்ணன்
(மரகத வண்ணம்).
தாயார் : மரகதவல்லி
உற்சவர் : ஸ்ரீநிவாசர்
கோலம் : வீற்றிருந்த திருக்கோலம்
திசை : கிழக்கு
விமானம் : ப்ரவாள விமானம்
தீர்த்தம் : சக்ர தீர்த்தம்
ஒருமுறை பிருகு முனிவர் தனக்கு மகளாக ஸ்ரீ லஷ்மி தேவி பிறக்க வேண்டும் என்ற ஆசைக் கொண்டதினால் காஞ்சீபுரத்தில் உள்ள இந்த ஆலயப் பகுதியில் வந்து அங்கு தனது வேண்டுகோள் நிறைவேற யாகம் ஒன்றை செய்தார்.
அவருடைய யாகத்தை மெச்சிய லஷ்மி தேவியும் அவருக்கு மரகதவல்லி எனும் பெயர் கொண்ட மகளாக அந்த ஊரிலேயே பிறந்தாள்.
அதன் பின் பல காலம் பொறுத்து பிருகு முனிவர் மீண்டும் விஷ்ணுவை தனது மகளாகப் பிறந்துள்ள லஷ்மி தேவியை இந்த ஆலயம் உள்ள இடத்திலேயே வந்து மணக்க வேண்டும் என வேண்டி துதிக்க விஷ்ணுவும் இங்கு வந்து லஷ்மி தேவியை மீண்டும் மணந்து கொண்டதாக ஐதீகம் உள்ளது.
மரகதம் என்றால் நல்ல பச்சை என்பதினால் மரகதவல்லியை மணந்து கொண்ட விஷ்ணு பகவான் இங்கு பச்சை வர்ண நிறத்தில் பச்சைவண்ண நாதர் என்றப பெயரில் காட்சி தருகிறார்.
ஆலயத்தில் உள்ள தாயாரின் பெயரும் மரகதவல்லி ஆகும்.
நான்கு கைகளுடன் காட்சி தரும் விஷ்ணு பகவான் ஒரு கையில் சங்கு, இன்னொரு கையில் சக்கரம் போன்ற இரண்டையும் ஏந்தி மற்ற இரண்டு கைகளில் ஒரு கையால் அனைத்து உயிர்களையும் காக்கும் முத்திரையையும், நான்காவது கை மூலம் பக்தர்களுக்கு அருள் புரிவதை காட்டும் முத்திரையும் கொண்டு நின்று கொண்டு உள்ளார்.
தல வரலாறு : தொண்மைக் காலத்தில் திருவட்டாறு என்கிற பகுதி யாதவக்குப்பம் என்று ஆகி, பிறகு அப்பெயர் மருவி தற்போது கோனேரிகுப்பம் என்று வழங்கப்படும் பகுதியானது. பசுக்கள் நிறைந்த யாதவர்கள் நிறைந்த பகுதியாக விளங்கியது. அச்சமயம் மரீச்சி என்னும் மகரிஷி இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், அவர் மகாவிஷ்ணுவின் பரமபக்தர் என்றும், அதனால் சதா மகாவிஷ்ணுவை நினைத்துக் கயண்டும், அவரின் புகழைப் பாடிக்கொண்டு இருந்தவர் என்றும், இதனால் இவரின் பக்திக்கு மகிழ்ந்து மகாவிஷ்ணு, இராம அவதாரத்தில் விஷ்ணுரூபத்தில் பச்சைநிற மேனி கொண்டு இந்த மரீச்சி மகரிஷிக்குக் காட்சித் தந்த இடமாகக் இத்திருத்தலம் கருதப்படுகிறது.
தலச்சிறப்பு : இத்திருப்பதியின் நுழைவு வாயில் கிழக்கு நோக்கியும், மூலவர் பச்சை வண்ணர் என்கிற மரகத வண்ணர் அமைந்துள்ள மண்டபவாயில் தெற்கு நோக்கியும், மூலவர் பச்சை வண்ணர் பெருமாள் கிழக்கு நோக்கியும் சேவார்த்திகளுக்குத் தரிசனம் வழங்கிக் கொண்டுள்ளார்.
தாயார் சந்நிதி தனிச் சந்நிதியாக உள்ளது. தாயார் சந்நிதிக்கு முன்பு பீடத்தில் யந்திரபிரவாசனி (ஸ்ரீசுத்தமந்திரம்) சிலா ரூபத்தில் பிரதிட்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாசப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இங்கு மகாலெட்சுமி தாயார் உற்சவ ரூபத்தில் கஜலட்சுமியாகக் காட்சித் தருகிறார். ஆதிசேசன் காவலாக உள்ளார்.
பச்சைவண்ண பெருமாள் ஆலயத்தில் உள்ள பெருமாள் அங்கு வந்து ஸ்ரீ லெட்சுமியை
திருமணம் செய்து கொண்டுள்ளதால், திருமணத் தடை உள்ளவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து திருமணத் தடை விலக முழு தேங்காயை வாங்கி வந்து இந்த ஆலயத்தில் அதை உரிக்காமலேயே பூஜைகளை செய்துவிட்டு அதையே வீட்டிற்குக் கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து பூஜித்து வணங்கி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்
அருள்மிகு பவளவண்ணன் திருக்கோவில்
திருப்பவள வண்ணம் (காஞ்சி).
மூலவர் : பவளவண்ணன்
தாயார் : பவளவல்லி
உற்சவர் : பவளவண்ணன்
கோலம் : வீற்றிருந்த திருக்கோலம்
திசை : மேற்கு
விமானம் : பிரவாள விமானம்
தீர்த்தம் : சக்ர தீர்த்தம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்
இத்தலத்தின் இறைவன் பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி பவள வல்லி என்ற பெயரில் தனிக்கோவில் கொண்டுள்ளார்.
பவள வண்ணப் பெருமாளின் கருவறையில் பவள வண்ணரை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார் பிருகு மகரிஷி.
ஒருமுறை தேவலோகத்தில் பிரும்மாவை தொந்தரவு செய்து கொண்டு இருந்த அசுரர்களை அழித்து அந்த யுத்தத்தில் தன்மீது தெறித்து விழுந்த ரத்தங்களுடன் இங்கு வந்து அமர்ந்தார் என்றும் அதனால்தான் பகவான் இங்கு அதே சிவப்பு நிறத்தில் காட்சி தருகிறார்.
பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள்.
நொடிப்பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை அழித்து பெருமாள் ரத்தம் தோய நின்றார்.
இவ்வாறு ரத்தம் தோய பிரவாளேச வண்ணராக நின்றதால் பிரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார்.
இந்த ஆலய சன்னதியின் விசேஷம் என்ன என்றால் ஆலய மேல்கூரையில் எட்டு திசை அதிபர்களும் நிற்பதாகவும் அதனால் எண் திசை அதிபர்களும் வணங்கும் லஷ்மி தேவியை இங்கு வந்து வணங்கினால் செல்வம் பெருகும்.
சத்யஷேத்ரம்
ஒருமுறை மகாவிஷ்ணு, மகாலட்சுமியுடன் இருக்கும் போது பிருகு மகிரிஷி விஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்குச் சென்றார். பிருகு வந்ததும் மகாவிஷ்ணு பிருகுவைக் கவனித்தும், கவனிக்காதது போல மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
தன்னை விஷ்ணு அவமதிப்பதாகக் கூறி மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். விஷ்ணுவோ தன்னை மிதித்த பாதம் புண்பட்டதோ என அவரது காலை வருடிக் கொடுத்தார்.
தவறை உணர்ந்த பிருகு, பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று விமோசனம் தேடிச் சென்றார். இதனிடையே காஞ்சியில் உள்ள சத்யசேத்ரத்திற்குச் சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றார் நாரதர்.
அதன்படி பிருகு மகிரிஷி இத்தலத்திற்கு வந்து சக்ர தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து விஷ்ணுவை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு விமோசனம் அளித்தார்.
எனவே, பிருகு முனிவர் கருவறையில் விஷ்ணுவை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
எண்திசை அதிபர்கள் :-
இங்குள்ள பிரவாளவல்லித் தாயார் சன்னிதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டு திசை அதிபர்களின் சிற்பங்கள் உள்ளன.
இவர்களை வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
எட்டு திசை அதிபர்களும் குடி கொண்டு உள்ள சன்னதியின் கீழ் நின்று வணங்கித் துதித்தால் கிரக தோஷங்கள் நமது வீடுகளில் இருந்தால் அவை விலகும் என்றும், செல்வம் பெருகும்.
வீடு, மனையில் உள்ள தோசங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
வீடு கட்டுவதில் தடை, தாமதம் உள்ளவர்கள் இந்த சன்னிதியின் கீழ் நின்று வணங்கினாலே தங்கள் குறை தீரும் என்று நம்புகின்றனர்.
கோவிலுக்கு முன்பகுதியில் சக்கரதீர்த்தம் உள்ளது.
வட்ட வடிவில் சக்கரம் போலவே உள்ள இந்த தீர்த்தத்தின் மத்தியில் தான் சுவாமி சக்கராயுதம் கொண்டு அசுரர்களை வதம் செய்தார் என்கிறார்கள்.
இந்த இரண்டு ஆலயங்களும் காஞ்சீபுரம் ரயில் மற்றும் பஸ் நிலையத்தின் அருகிலேயே உள்ளன.
நடந்து சென்றே திருக்கோவிலை அடையலாம்.
காஞ்சியில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ள இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. . இங்கு வரும் பக்தர்கள் பவள வண்ணரை வழிபாடு செய்துவிட்டு பச்சை வண்ணரையும் வழிபட்டுச் செல்ல வேண்டும்.
காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 வரை.
No comments:
Post a Comment