Wednesday 4 May 2016

5-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

5-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

காரல் மார்க்ஸ்

பொதுவுடைமைக் கொள்கையாளர்களில் முக்கியமானவருள் ஒருவரான காரல் மார்க்ஸ் 1818 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி புருசியாவில் பிறந்தார். இவர் ஜெர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். மேலும், அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர் ஆவார்.

மெய்யியலாளராக மட்டுமல்லாது, அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராகவும், எழுத்தாளராகவும், சிந்தனையாளராகவும், புரட்சியாளராகவும் கார்ல் மார்க் அறியப்படுகிறார். இவர் சிறு வயதிலேயே கட்டுரை எழுத ஆரம்பித்தார். தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளையும், குறிக்கோள்களையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதிலுள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், 1864 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி லண்டனில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு சிறப்பாக நடக்க, வழி காட்டினார் மார்க்ஸ். இந்த மாநாட்டில் தான் 'சர்வதேசத் தொழிலாளர் சங்கம்" நிறுவப்பட்டது. இதுதான் உலக அளவில் உருவான முதல் தொழிலாளர் சங்கமாகும். இதன் தலைவராக மார்க்ஸ் செயல்பட்டார். இவர் 1883 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி இறந்தார்.

நடிகர் பி.யு.சின்னப்பா

தமிழ்த் திரையுலகில் நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு களங்களில் தனி முத்திரை பதித்த பி.யு.சின்னப்பா அவர்கள் 1916 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். இவரது தந்தை உலகநாதன் நாடக நடிகர் என்பதால் 5 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். 4 ஆம் வகுப்போடு கல்வி முடிவடைந்தது. குடும்ப வறுமை காரணமாக, கயிறு திரிக்கும் கடையில் மாதம் 5 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தார். அதன்பிறகு சதாரம் நாடகத்தில் குட்டித் திருடனாக நடித்து பல பரிசுகளை வென்றார்.

நாடக கம்பெனியில் இருந்து 19 வயதில் விலகி இசைப் பயிற்சி மேற்கொண்டு கச்சேரிகள் செய்தார். சிலம்பம், குஸ்தி, குத்துச் சண்டை, பளு தூக்குதல், கத்திச் சண்டை ஆகியவற்றைக் கற்று, அவற்றிலும் பரிசுகளை வென்றார். ஜூபிடர் பிலிம்ஸின் 'சவுக்கடி சந்திரகாந்தா" திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1938 இல் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி ஆகிய படங்களில் நடித்தார்.

வசனம் பேசும் முறையாலும், சிறந்த நடிப்பாலும் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு சமமாக ரசிகர்களைக் கவர்ந்தவர். தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1940 இல் இரட்டை வேடத்தில் இவர் நடித்த 'உத்தமபுத்திரன்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. நடிக மன்னன் என்று போற்றப்படும் பி.யு.சின்னப்பா உடல்நலக் குறைவால் தனது 35 வயதில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி மறைந்தார்.

1961 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி அலன் ஷாப்பார்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் மற்றும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.

நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியும், மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தன் 1948 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி இறந்தார்.

No comments:

Post a Comment