Sunday 1 May 2016

கொல்லிமலையின் சிறப்புகள் பகுதி 2

கொல்லிமலையின் சிறப்புகள்
பகுதி 2

கல்லாத்துக் கோம்பு :

கல்லாத்துக் கோம்பு கொல்லி மலையின் அடிவாரப் பகுதியாகும். வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்கு சென்றார். காமாட்சியின் தெய்வத் தன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற, பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.

வல்வில் ஓரி :

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி முற்காலத்தில் கொல்லிமலையை ஆட்சி செய்தார். வல்வில் ஓரி மன்னனுக்கு அரசு சார்பில் செம்மேடு பஸ்நிலையம் அருகே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குதிரையில் கையில் வாளை ஏந்தியவாறு மன்னன் காட்சி அளிக்கிறார். இவரது நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாசிலா அருவி :

கொல்லிமலை செம்மேட்டில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது மாசிலா அருவி. மாசு இல்லாத தண்ணீரை கொண்டு வந்து சேர்ப்பதால் இதற்கு மாசிலா அருவி என பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியிலேயே சந்தனப்பாறை அருவியும் உள்ளது. இந்த அருவிகள் அனைத்திலும் குளிக்கலாம்.

சித்தர்கள் வாழ்வு :

கொல்லிமலை சித்தர்களின் சொர்க்க பூமி என்றழைக்கப்படுகிறது. கொல்லிமலையை வனத்தில் வாழ்ந்த அகத்திய சித்தர், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளி சித்தர் போன்ற பல்வேறு சித்தர்கள் இங்கு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு மூலிகைகளைக் கொண்டு, தங்களது சக்திகளின் மூலம், பல்வேறு நோய்களை இவர்களால் குணப்படுத்த முடிந்திருக்கிறது. இந்த மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்த சித்தர்கள் அங்கு கிடைத்த மூலிகை மருந்துகளைக் கொண்டே தங்களது ஆயுளையும் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தாவரவியல் பூங்கா :

செம்மேட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது தாவரவியல் பூங்கா. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் யானை, சிங்கம், புலி, கரடி, மான், மயில் என அழகிய சிலைகள், கண்ணைக் கவரும் வகையில் புல்வெளி, பாதம் ஆற நடமாட நடைபாதை, நீரூற்றுகள், சீன களிமண்ணால் செய்யப்பட்ட சிலையுடன் நீரூற்று, சத்தம் எழுப்பும் கரடி, புலிக் குகை ஆகியவை உள்ளது. மூங்கில் படகு இல்லம், குடில்கள், மலர்கள் நிறைந்த காட்டேஜ் என எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த தாவரவியல் பூங்காவில் இடம் பெற்றுள்ளன. வாசலூர்பட்டியில் அமைந்துள்ளது படகு இல்லம். இந்த இல்லத்தில் பரந்து விரிந்த நீர்பரப்பில் பயணம் செல்வதற்காக படகுகள் உள்ளன. படகு இல்லத்துக்கு அருகாமையிலும் பூங்கா, சிறுவர் விளையாட்டுகள், நீரூற்று, பொழுதுபோக்கு அம்சங்கள், புல்வெளி நடைபாதை என ஏராளம் உள்ளது.

வழித்தடங்கள் :

நாமக்கல்லில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொல்லிமலைக்கு நாமக்கல், சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் இருந்து பஸ்கள் விடப்படுகின்றன. 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் வளைந்து, நெளிந்து, மேகம் வந்து மலை முகடுகளை தொட்டு, தொட்டு செல்லும் இயற்கை காட்சியை பார்த்தபடி சென்றால் சுமார் 2 மணி நேர பயணத்திற்குள் கொல்லிமலையை அடையலாம்.

No comments:

Post a Comment