Friday 8 April 2016

தில்லையாடி வள்ளியம்மை

தில்லையாடி வள்ளியம்மை

”ஓடி ஆடி விளையாடும்
வயதுனுக்கு..!
பள்ளி சென்று இன்பமாய்
வாழும் வயதுனுக்கு..!!
இருந்தும் போராடி - நீயோ
தில்லையாடி
சென்றாயே இறைவனை நாடி..!!!”
  தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் தஞ்சை மாவட்டம், மாயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி, மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி, பிரிட்டனின் ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகன்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவை பிரிட்டன் அடிமைப்படுத்தியிருந்தது.

  எதிர்கால இன்பக் கனவுகளோடு தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியத் தொழிலாளர்கள் அங்கே வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். 3 பவுன் வரி செலுத்தினால்தான் அங்கே வாழ முடியும். வாக்குரிமை கிடையாது. வெள்ளையர் படிக்கும் பள்ளியில் இந்தியர் படிக்க அனுமதி இல்லை. கிறிஸ்தவ மதப்படி நடந்த திருமணங்கள்தான் செல்லும். இப்படி ஏகப்பட்ட கொடுமைகள் நடந்து கொண்டிருந்தன. இவற்றை எதிர்த்தும் இந்தியர்களை ஒன்றிணைத்தும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் காந்தி.

  தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்து வந்த பதினாறு வயதுப் பெண் வள்ளியம்மை கொதித்தெழுந்தாள். காந்தியடிகள் போராட்டத்தை அறிவித்து, இப்போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். வள்ளியம்மையுடன் அவர் தாயார் ஜானகி அம்மையாரும் போராட்டத்தில் இறங்கினார்.

  29-10-1913 இல் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு மகளிர் சத்தியாகிரகப் போர்ப்படை புறப்பட்டது. கஸ்தூரிபாய் அம்மையாருடன் 16 பெண்கள் இப்படையில் இருந்தனர். இதில் 10 பெண்கள் தமிழர்களாவார். நியூகாசில் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிய இந்தியத் தொழிலாளர்கள் மகளிர் படையின் வேண்டுகோளுக்கிணங்க வேலை நிறுத்தம் செய்தனர்.

  போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் எல்லையைக் கடக்கும்போது வால்க்ஸ்ரஸ்ட் என்ற இடத்தில் 1913 டிசம்பர் 22 ஆம் நாள் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார். 3 மாதக் கடுங்காவல் தண்டனை. சிறையில் மிகுந்த துன்பத்துக்கு உள்ளானார் வள்ளியம்மை. 16 வயதே ஆன வள்ளியம்மையின் மெலிந்த உடல் விரைவில் நோய்க்கு உள்ளானது. அவரது உடல் நிலையைக் கண்ட ஆங்கில அதிகாரிகள், அபராதம் செலுத்திவிட்டு வெளியே போகச் சொன்னார்கள்.

  அபராதம் செலுத்துவது போராட்டக்காரர்களின் குணமல்ல. போராட்டம் வெற்றி பெறாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் வள்ளியம்மை. நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

  ஒருவழியாக தண்டனை காலம் முடியும் முன்பே விடுவிக்கப்பட்டார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த வள்ளியம்மையை, ஒரு போர்வையில் சுற்றி வீட்டுக்கு எடுத்து வந்தார்கள். அதன்பின் நோயிலிருந்து மீளாமலேயே 23-2-1914 அன்று பதினாறு வயது வீரமங்கை வீரமரணம் அடைந்தார்.

No comments:

Post a Comment