Sunday 1 May 2016

பரத நாட்டியம்

பரத நாட்டியம்

♣ பரத நாட்டியம் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பாரத தேசத்தில் முதன்முதலாக தோன்றியதால் பரதநாட்டியம் என்றும் அழைக்கப்படுகிறது. புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.

அதேவேளை பரதம் என்ற சொல்,

♣ ப - பாவம்
♣ ர - ராகம்
♣ த - தாளம்
என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

♣ இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சதீர் என்றும் சதீர்கச்சேரி என்றும் அழைக்கப்பட்ட நடனம் மறுமலர்ச்சி அடைந்து பரதநாட்டியமாக விளங்கி வருகிறது.

♣ பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

♣ பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில் சில, "பந்தநல்லூர் பாணி", "வழுவூர் பாணி", "தஞ்சாவூர் பாணி", "மைசூர் பாணி", "காஞ்சிபுரம் பாணி" ஆகியவை ஆகும்.

♣ நேர்த்தியான ஆடை அலங்காரமும், அணிகலன்களும் பரத நாட்டியத்திற்கு தனித்துவம் தருபவை. உடலை வளைத்து, கை விரல்களை அசைத்து, கண்கலில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, பாதங்களை பம்பரமாக சுழலவிட்டு நாட்டிய மங்கைகள் காட்டும் அபிநயம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். பரதத்தை சிறுவயதில் இருந்தே முறைப்படி ஏராளமானவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

♣ முதலில் அடவு எனும் கால்களை தரையில் தட்டி ஆடுவது, கைகளில் முத்திரைகள் காண்பித்தல், கால்கலில் மண்டலம் என்பவற்றுடன் உடலை அசைத்து ஆடுவது போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகிறது. பின்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் அபிநயம் கற்றுக்கொடுக்கப்படும். பரத நாட்டியத்தில் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. முறைப்படி கற்றுக் கொண்டவர்கள் அரங்கேற்றம் செய்வார்கள்.

“பரத நாட்டியத்தை பேணி காப்போம்! நாட்டின் கலையை வளர்ப்போம்!!”

No comments:

Post a Comment