Thursday 5 May 2016

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்.

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்றார் அப்பர் பெருமான். ஒவ்வொரு ஒலியும், அலைகளாகவும் அவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தியாகவும் நம் தலைவர் திகழ்கிறார். ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அது பிறர் மீது ஏற்படுத்தும் விளைவுகளும் உண்டு. கிரீரீச்ச்ச் என்று கட்டிலை இழுக்கும் போது எழும் சத்தம் நமக்கு எரிச்சலைத் தருகிறது. சிவன் கோவிலில் ஓதுவார்கள் பண் இசைத்து பாடும் போது நம்மையே மறந்தும் போகிறோம்.  இதை முற்றிலுமாக ஆராய்ந்து தான் நம் முன்னோர்கள் வேத மந்திரங்களை உருவாக்கினர். ஒலிகளுக்கு சக்தி இருக்கிறது என்று இன்றைய நவீன மேலை நாட்டு விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டு ஆராய்ந்து வருகிறது. அல்ட்ரா சவுண்டு (ultrasound) எனப்படும் ஒலியால் இயங்கக்கூடிய பல்வேறு கருவிகளை இதிலிருந்து தான் உருவாக்கியுள்ளனர். உடலுக்குள் இருக்கும் உறுப்புகளின் வடிவங்களை, உடலை அறுக்காமலேயே, ஒலி அலைகளை அனுப்பி அவை திரும்பி வரும் நேரத்தை பதிவு செய்து உள் உறுப்புகளின் வடிவங்களைப் பதிவு செய்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வடிவத்தை பார்ப்பது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகிப் போய்விட்டதை நீங்கள் அறிவீர்கள்.  கடலுக்குள் அடியில் இருக்கும் பொருட்களை அறியவும் (Sonogram) ஒலி அலைகள் உதவுகின்றன என்பதை படித்திருப்பீர்கள். 

நாம் ஓதும் வேத மந்திரங்களுக்கு அதீத சக்தி உண்டு. இதனாலேயே ஒவ்வொரு வழிபாட்டின் போதும் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய மந்திரங்களே ஓதினர். இந்த ஒலி அலைகள் சுற்றியிருக்கும் மனிதர்களின் உடலிலும் மனதிலும் நல்ல அதிர்வுகளை உருவாக்கும். இந்த ஒலி எழுப்புவதற்கு சிறப்பு பயிற்சி தேவைப்பட்டது. எல்லோராலும் எழுப்ப முடியும் என்றாலும் சிறப்பான பயிற்சியின்றி இதைச் செய்ய முடியாது. இதனாலேயே நம் முன்னோர்கள் ஒரு சிலருக்கு வேத பயிற்சி கொடுத்து அதை ஓதுவதையே அவர்கள் தொழிலாக மேற்கொள்ளச் செய்தனர். இவர்களே அந்தணர்கள் என்று அழைக்கப்பட்டனர். நம் வேதங்களை முறைப்படி கற்று ஓதி என்றென்றும் காக்க நம்மால் உருவாக்கப்பட்டவர்களே அந்தணர்கள். ஆகவே தான் அந்தணர்கள் நம் வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

உலக நன்மையின் பொருட்டும் உயிர்களின் துன்பங்கள் நீங்கும் பொருட்டும் என்றென்றும் வழிபாடு வேள்வி செய்யும் அந்தணர்கள் என்றும் நீடூழி வாழ வேண்டும். அந்த வேள்வியை சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்களும் என்றென்றும் வாழ வேண்டும். அந்த வேள்விகளினால் மழை என்றும் தவறாது பெய்ய வேண்டும். சிவ ஆலயங்களையும் பூசைகளையும் தவறாது செய்து வரும் அரசனும் என்றென்றும் ஓங்கியிருக்க வேண்டும். வேள்விகளால் வரும் நன்மைகளை அடையவிடாமல் தடுக்கும் தீய சக்திகள் எல்லாம் ஆழ்ந்து போக வேண்டும். உலகமெங்கும் சிவபெருமானின் நாமமே ஒலிக்க வேண்டும். இவ்வுலகில் இருக்கும் அனைத்து துயரங்களும் தீர்ந்து போக வேண்டும். 

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

-- 3 ஆம் திருமுறை, திருஞானசம்பந்தர்.

பொழிப்புரை :

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக.

No comments:

Post a Comment