Wednesday 6 April 2016

சித்தர்களின் வாழ்க்கை வரலாறு.!

சித்தர்களின் வாழ்க்கை வரலாறு

  சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.

எட்டு வகையான யோகாங்கம்:
  இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.

  நியமம் - நியாயமான நல்லறனைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.

  ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.

  பிராணாயாமம் -பிரணாயாமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.

  பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே பிரத்தியாகாரமாம்.

  தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.

  தியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.

  சமாதி - சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.

சொல்லிலக்கணம்:
  சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார். சித்தர்கள் தாங்கள் பின்பற்றிய கொள்கைகளைப் பொறுத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெறுகின்றனர். அவை,   சன்மார்க்கச் சித்தர்கள் - திருமூலர், போகர்.

  ஞானச் சித்தர்கள் - பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகண்ணர், இடைக்காட்டுச் சித்தர்.

  காயச் சித்தர்கள் - கோரக்கர், கருவூர்ச் சித்தர், மச்சமுனி, சட்டமுனி, சுந்தரானந்தர், உரோமரிஷி.

சித்தர்களின் நவீன அறிவியல் ஆராய்ச்சி:
  சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளின் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசின் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

  காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்து சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இல்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணலாம்.

சித்தர்களின் ஞானம்:
  மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை. கற்பக மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர் நோயின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment