Thursday 21 April 2016

தண்ணீரும் தமிழரும்

தண்ணீரும் தமிழரும்

  நீரின் பயனைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மனிதன் உயிர் வாழத் நீரின் பங்கு மிக முக்கியமாகும் மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.

நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.

தமிழர்களும் தண்ணீரும் :
♤ மழை காலத்தில் பூமியில் கொட்டும் மழைநீரில் 40 சதவீதம் கடலில் கலக்கிறது. 35 சதவீதம் பூமி வெப்பத்தில் ஆவியாகிறது. பதினைந்து சதவீதம் பூமியை ஈரப்படுத்தப் பயன்படுகிறது. மீதமுள்ள 10 சதவீதம்தான் நிலத்தடி நீராக மாறுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

♤ பூமியில் உள்ள நீரில் மூன்று சதவீதம் மட்டுமே நன்னீராகும். மீதமுள்ள நீரெல்லாம் கடலில் உள்ள உப்பு நீராகும். உலகில் உள்ள தூய்மையான நீரில் 11 சதவீதம் நிலத்தடி நீராக இருக்கிறது. இந்த நிலத்தடி நீர் 800 அடி ஆழம் வரை கிடைக்கிறது.

♤ எனவே நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதுடன் நிற்காமல் அவற்றின் வளத்தைப் பெருக்குவதும் நமது கடமையாகும். நீரின்றி அமையாது உலகு என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவன் சொன்னதை நம் முன்னோர்கள் ஏற்று தண்ணீரை பாதுகாத்தார்கள்.

♤ ஆனால் இன்றைய தமிழன் தன் நிலத்தையும் இழந்துவிட்டான், இருக்கும் நிலத்தில் தண்ணீரைக் காக்கவும் தவறி வருகிறான்.

♤ இன்றைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டு அண்டை மாநிலங்களோடு சொற்போர் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதே வரலாற்று உண்மை.

♤ நீர் என்பது வானத்தில் இருந்து வருவதால் அதனை “அமிழ்தம்” என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நீர்நிலைகளுக்கு தமிழர்கள் பல பெயர்களை வைத்து பேணி பாதுகாத்து வந்துள்ளனர்.

♤ தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளுக்கு கயம், சுனை, பொய்கை, ஊற்று என்று பெயரிட்டுள்ளனர். குட்டை என்பது மழை நீரின் சிறிய தேக்கம் ஆகும். குளிப்பதற்கு பயன்படும் நீர்நிலை குளம். உண்பதற்கு பயன்படும் நீர்நிலை ஊருணி. ஏர்த்தொழிலுக்கு பயன்படும் நீர்நிலை ஏரி என்று அழைக்கப்பட்டது.

♤ வேறு வகையிலான பயன்பாடு இன்றி மழைநீரை மட்டும் ஏந்தி நிற்கும் நீர்நிலைக்கு ஏந்தல் என்று தமிழர்கள் பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.

♤ எனவே தண்ணீரை வீணக்காமல் சேமித்து வைத்து கொள்ளும் அக்கால தமிழர்களை போல நாமும் கடைபிடிப்போம்.

No comments:

Post a Comment