Sunday 27 March 2016

இஞ்சியின் மகத்துவங்கள்.!

இஞ்சியின் மகத்துவங்கள் !

இஞ்சி பெயர்க்காரணம் :

இஞ்சி  தாவரத்தின் தாவரவியல் பெயர் ஜிஞ்சிபர். இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றியது.

இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

இஞ்சியின் பொதுப்பண்பு :

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல்.

✔ இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கும்.

✔ இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும். இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.

✔ இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பண்டைய வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சி வளரும் இடம் :

  இஞ்சி, மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிக காற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ. மழைபொழியும் மலைப் பிரதேசங்களில் இஞ்சி வளர்கிறது.

சுக்கு (காய்ந்த இஞ்சி) :

உலர்ந்த இஞ்சியே சுக்கு என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.

இஞ்சி முறபா

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிக்கப்படுகிறது. இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும்.

மருத்துவ குணங்கள் :

✔ பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் ஆகியவற்றிற்கு தீர்வாக அமைகிறது.

✔ வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.

✔ இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

✔ இஞ்சியால் வாய் நாற்றம் தீரும். உடல் சுறு சுறுப்பு ஏற்படும்.

✔ இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை கரைந்து விடும்.

✔ இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

✔ இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி சாப்பிட்டால் நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

No comments:

Post a Comment