Tuesday 29 March 2016

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் (பகுதி 3)

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
(பகுதி 3)

முக்கிய திருவிழாக்கள் :

திருச்செங்கோட்டு மலையில் சிவன், பார்வதி, முருகன், திருமால், போன்ற பல தெய்வங்கள் உள்ளதால் வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் இங்கு திருவிழாக்கள் நடைபெறும். முக்கியமாக சித்ராபௌர்ணமி, வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன திருவிழா, ஆடிமாதம் ஆடிப்பூரவிழா, ஆவணிமாதம் ஆவணிஅவிட்டம், விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாதம் கேதார கௌரி விரதம், ஐப்பசியில் நாகேஸ்வரர் அன்ன அபிஷேகம், சூரசம்ஹாரம், கார்த்திகை மாதம் கார்த்திகை தீப கூம்பு, மார்கழியில் படித்திருவிழா, தைமாதம் தைப்பூசத் திருவிழா, மாசி மாதம் மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

வைகாசி தேர்த் திருவிழா :

முக்கியமான திருவிழா வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும் வைகாசி விசாகம் ஆகும். இத்திருவிழா மொத்தம் 14 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதை பிரமோற்சவம், மஹாத்~வம் என்றும் கூறுவர். இத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெறும். எல்லா கோவில்களிலும் கொடிமரம் ஒன்று மட்டுமே அமைந்திருக்கும். ஆனால் இங்கு மூன்று கொடி மரம் அமைந்துள்ளது ஆலயத்தின் தனிச்சிறப்பு. இத்திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் ஆகியவை மலைமேல் இருந்து கீழே கொண்டுவரப்பட்டு திருத்தேர் மீது வைத்து திருக்கொடிமாட செங்குன்றூரின் நான்குமாட வீதிகள் வழியாக தேர் இழுத்து செல்லப்படும். பிறகு சுவாமிக்கு திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறும். 14 ஆம் நாள் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக, சுவாமிகள் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் மீண்டும் மலைக்கு எடுத்து செல்லப்படும்.

கிரிவலம் :

அர்த்தநாரீஸ்வரர் மலையாகிய திருச்செங்கோடு எனும் கிரியை வலம் வருவது திருச்செங்கோட்டு கிரிவலம் என்பர். திருச்செங்கோட்டு கிரி, ஓங்காரம் சிவ வடிவமானது. பௌர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும் சிவராத்திரியிலும் பிறந்த (ஜன்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோட்டை வலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும்.

திருச்செங்கோட்டில் மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம் கிரிவலம் தொடங்கும் இடம் ஆகும். முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கிமீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வர வேண்டும். கிரிவலம் வரும் போது மனத்தூய்மையுடன் இறைவனை மனதில் நினைத்து நமச்சிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தவண்ணம் வரவேண்டும் என்றும், காலணிகளை தவிர்த்தல் வேண்டும் என்றும், வாகனங்களில் கிரிவலம் செல்லக்கூடாது என்றும், எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும் என்றும், கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது, தூங்க கூடாது என்று கிரிவலம் வரும் முறையை கூறுவர்.

கோவிலுக்கு செல்லும் வழிகள் :

திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 650 அடி உயரத்தில் இத்தலம் உள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 1206 படிகள் கொண்ட நடை பாதையும், வாகனங்கள் மேலே செல்ல மலை பாதையும் தனியாக உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதை 2.5 கி.மீ தொலைவு உள்ளது.

No comments:

Post a Comment