Wednesday 2 January 2019

கோபியர்களின் ஆடைகளைக் கண்ணன் கவர்ந்த நிகழ்ச்சி.!

கோபியர்களின் ஆடைகளைக் கண்ணன் கவர்ந்த நிகழ்ச்சியை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இதிலிருக்கும் உண்மை
சிறுமிகளான கோபிய பெண்கள் தங்கள் ஆடைகளை கரையில் வைத்துவிட்டு யமுனையில் இறங்கிக் குளிக்கிறார்கள். அப்போது அங்குவந்த கண்ணன் அந்த ஆடைகளை எடுத்துக்கொண்டு மரத்தின்மேல் ஏறிக்கொள்கிறான். அந்தப் பெண்கள், ""கண்ணா, நாங்கள் குளித்துவிட்டோம். எங்கள் ஆடைகளைத் தா. நாங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்'' என்கிறார்கள்.
""கரையேறி வந்து வாங்கிக்கொள்ளுங்கள்'' என்கிறான் கண்ணன். அவர்கள் வெட்கப் பட்டார்கள். ஆனால் வேறு வழியில்லை.
அந்தப் பெண்கள் காத்யாயினி விரதம் மேற்கொண்டு குளிக்க வந்தவர்கள். (ஆண்டாள் அரங்கனை மணக்க மார்கழி நோன்பு இருந்ததைப்போல).
"காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய தீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி
பதிமே குரு தே நம'.
"யோகிகள் வழிபடும் உலக மாயையின் நாயகியான காத்யாயினி தேவியே! நந்தகோபனின் புதல்வனாகிய கோபாலனையே எனக்கு கணவனாக அளிப்பாய்' என்று வேண்டி நோன்பிருப்பவர்கள்.
கண்ணன் கூறினான்:
""நீங்கள் விரதம் மேற்கொள் கிறீர்கள்; சரி. அதேசமயம் தர்மத்துக்கு கட்டுப்படவேண்டாமா? பெண்கள் ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது. அதுவும் யமுனை போன்ற புண்ணிய நதிகளில் இவ்வாறு செய்வது மகாபாவம். இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். இதை உணர்த்தவே இந்த லீலை.''
கோபியர்களோ சிறு பெண்கள்; கண்ணனோ ஏழு வயதுகூட நிரம்பாதவன். எனவே இந்த நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தக்கூடாது.
இனி ராஸலீலைக்கு வருவோம். இதை காமம் சார்ந்த விஷயமாக பலர் விமர்சிக்கின்றனர்.
அதன் உண்மை
கண்ணன் பிருந்தாவனத்தில் வில்வ மரத்தின்மேல் அமர்ந்துகொண்டு குழலூதினான். அது இரவு நேரம். அந்தக் குழலோசை எங்கும் பரவியது. அதைக் கேட்ட கோபியர்கள் (மணமானவர்களும் மணமாகாதவர்களும்) தாங்கள் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு குழலோசை வந்த திசைநோக்கி நடந்தனர். சமைத்துக்கொண்டிருந்தவர்கள், சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள், பால் கொடுத்துக்கொண்டிருந்தவர்கள், கணவனுக்கு- பெரியோருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தவர்கள் என அத்தனை பேரும் அப்படியே விட்டுவிட்டு கண்ணனிடம் வந்துசேர்ந்தனர்.
காலன் வந்துவிட்டால் செயல்கள் யாவும் அற்றுப்போகின்றன. அந்த வினோத உன்னத நிலையே இந்த லீலை.
கண்ணன் சொன்னான்: ""இதென்ன பைத்தியக்காரத்தனம்! வீடு வாசல், கணவன், குழந்தைகள், பெரியவர்கள், செய்துகொண்டிருந்த காரியங்கள் அனைத்தையும் துறந்துவந்து நிற்கிறீர்களே! அதுவும் இந்த இரவு நேரத்தில்? இது தர்மத்துக்குப் புறம்பானதல்லவா? உடனே திரும்பிப் போங்கள்.''
அவர்கள் என்ன பதில் சொன்னார்களென்று நாராயண தீர்த்தர் தனது "கிருஷ்ணலீலா தரங்க'த்தில் பாடுகிறார்.
"மண்யேத்வாம் இஹ மாதவ தைவ
மாயாஸ்வீக்ருத மானுஷ பாவம் 
தன்யை ராத்ருத தத்வ ஸ்வ பாவம் 
தாதாரம் ஜகதாம் அதிவிபவம்.'
""கண்ணா, நாங்களறிவோம்- நீ சர்வலோக சரண்யனான பரமதெய்வம் என்பதை. அவதார காரணமாக இங்கு அவதரித்துள்ளாய். நாங்களோ ஜீவர்கள்; நீயோ பரமன். ஜீவன் பரமனுடன் இணைவதுதானே வாழ்வின் லட்சியம். எனவே எங்களை அலட்சியம் செய்யக்கூடாது'' என்றனர்.
பாகவத சுலோகம்:
"நகலு கோபிகா நந்தனோ பவான்
அகில தேஹினாம் அந்தராத்ம த்ருக்
விகன ஸர்த்விதோ விஸ்வகுப்த யே
ஸக உதேயிவான் ஸாத்வதாம் குலே.'
"நீ கோபாலனா? அல்லவே! அனைத்துயிர் களும் உன்னுள் அடக்கமல்லவா! எங்களைப் போன்ற சாதுக்களை கரையேற்றவே உதித்தவனாயிற்றே நீ!'
எதுவும் படிக்காத- வேத உபநிடதம் அறியாப் பேதைகளான கோபியர் எவ்வாறு உன்னதமான தத்துவத்தைப் பேசுகின்றனர். யார் இந்த கோபியர்?
"கோபிகைகள் கண்ணனிடமிருந்து உதித்தவர்கள்; அவர்கள் மூன்று வகையினர்' என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.
சாதனசித்த கோபிகைகள்: தண்டகாரண்யம் போன்ற வனங்களிலிருந்த ரிஷிகள், முனிவர்கள், ஞானிகளாகிய ஞானவித்துகள் ஸ்ரீராமபிரானை அணைத்திட விரும்பினர். ராமர் கூறினார்- "அடுத்த அவதாரத்தில்' என்று!
நித்யசித்த கோபிகைகள்: அயோத்தி, மிதிலை போன்ற இடங்களில் ராமரின் அழகில் மனதைப் பறிகொடுத்து அவரை அணைக்க விரும்பிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் ராமர் சொன்னார்- "அடுத்த அவதாரத்தில்' என்று.
கோபிகா தேவிகள்: பரம சிரேஷ்டமான கோபிகைகள் ராதா, சக்த்ராவளி என்னும் இருவர். இதில் ராதையை கண்ணனின் ஹ்லாதினி சக்தி என்பர். அதாவது ஆட்கொண்ட சக்தி.
இவர்களே கண்ணனை சூழ்ந்து நிற்கின்றனர்.
அதன்பிறகு கண்ணன் கோபிகைகளுடன் "ராஸலீலை' எனும் நடனமாடினான். ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணனாகத் தோன்றினான். அனைவரும் வட்டமாக ஆடிப்பாடினர். நடுவில் கண்ணன் ராதையுடன் பிரகாசித்து ஆடினான்.
இந்த ராஸலீலை, ராமர் கொடுத்த வாக்கை நிறைவேற்றவே நடந்தது. கோபிகைகளின் கவனம் பூத உடலில் இல்லை. அவர்கள் ஆத்ம சொரூபத்தில் இருந்தனர். கண்ணனின் பரமாத்ம சொரூபத்தில் இருந்தனர்.
எனவே இது ஜீவ- பரம லய, ரஸானுபூதி ஆனந்தலீலா நிலை! கோகுலத்திலிருந்து மதுரா சென்றபோது கண்ணனுக்கு ஏழுவயதுகூட ஆகவில்லை. மதுரா சென்ற கண்ணன் அதன்பின் கோகுல பிருந்தாவனம் வரவே இல்லை. எனவே மேற்சொன்ன ராஸலீலையில் காமத்திற்கு இடமே இல்லை!
ஸ்ரீமத் பாகவதத்தில், இந்த ராஸலீலை "ராஸ பஞ்சாத்யாயி' என்ற அத்யாயங்களில் கூறப்பட்டுள்ளது.
இதற்கான பலஸ்ருதி யாது?
"பக்திம் பராம் பகவதி ப்ரதிலப்ய காமம் 
ஹ்ருத் ரோகம் ஆஸ்வ பஹினோதி அச்ரேணதீர.'
"இதைப் படிப்பதால் வெகுவிரைவாக பகவான்மீது மாதுர்ய பராபக்தி மிளிரும். காமப்பசியானது அறவே அழியும்' என்கிறது.
கண்ணன் கோபிகைகள் பற்றி உத்தவரிடம் கூறுகிறான்:
"தாமன் மனஸ்கா மத் ப்ராணா மத்
அர்த்தே த்யக்த தைஹி கா.'
""அவர்களுக்குத் தன் மனமில்லை; என் மனம்தான். சுதந்திரர்கள் அல்ல; அவர்கள் செயல்கள் யாவும் எனக்கே உரியதாகும்.''
என்னே கோபியர் மகிமை!
"கஹாம் ஸ்யாம் ஹை- வஹாம் காம் நஹி' என்றொரு இந்திப் பாடலுண்டு. "எங்கு ஸ்யாம் (கண்ணன்) உள்ளானோ அங்கு காமம் தலையெடுக்காது' என்று பொருள்.
இறுதியாக ஒரு செய்தி. இந்த ஸ்ரீமத் பாகவதத்தை, வியாசரின் புதல்வரான சுகப்பிரம்மரிஷி பரீட்சித்து மன்னனுக்குக் கூறினார். சுக முனிவர் பிரம்மத்திலேயே லயித்திருப்பவர். பரீட்சித்து மன்னனோ இன்னும் ஏழு நாட்களில் மரணம் என்றறிந்து அதை எதிர்நோக்கியிருப்பவன். ராஸலீலை காமம் சார்ந்ததென்றால் அதை சுகமுனி கூறியிருப்பாரா? சாகப்போகும் மன்னன்தான் கேட்டிருப்பானா?
எனவே ராஸலீலையானது காமலீலை அல்ல; ஜீவ- பரம ஐக்கிய அனுபூதி நிலையென்று உணர்வோம்.

No comments:

Post a Comment