Sunday 23 July 2017

இராமர் எள் தர்ப்பணம் செய்த திலதர்ப்பணபுரி!

 இராமர் எள் தர்ப்பணம் செய்த திலதர்ப்பணபுரி!

முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி,(சிதலைப்பதி) கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள் சிறப்பாக சொல்லப்படுகின்றது. இதில் ஐந்தாவது இடமாகிய இந்த தலம் திலதர்ப்பணபுரி இன்று மருவி சிதலைப்பதி, செதலைப்பதி என்று வழங்கப்படுகிறது. திலம் என்றால் எள். இராமர் எள் கொண்டு தர்ப்பணம் செய்தமையால் திலதர்ப்பணபுரி என்று வழங்கப்பட்டது.

இன்று திலதைப்பதி என்றழைக்கப்படும் இத்தலம் மயிலாடுதுறை-திருவாரூர் மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது. பெயராலேயே தர்ப்பணம் என்பதைக் கொண்டிருக்கும். இத்தலத்தில் எள் தர்ப்பணம் செய்தால் நமது முன்னோரின் ஆன்மா சாந்தியடையும். திலம் எள், தர்ப்பணம் செய்வதற்கு இறையருள் கொண்ட சிறந்த ஸ்தலம் மேலும் காசி, இராமேஸ்வரத்திற்கு இணையான முக்தி கேத்திரமுமாகும்.

ஸ்ரீ ஆதி வினாயகர்

ஆதிவினாயகரின் மூலமந்த்ரம்

ஓம் நாரமுகாய வித்மஹே ஹரபுத்ராய தீமஹி

தந்நோ ஆதி ப்ரசோயாத்

இத்தல இறைவன் அருள்மிகு முக்தீஸ்வரரை திருஞான சம்பந்தரும், அருணகிரியாரும் பாடியுள்ளார்கள்.

இக்கோயிலை மனிதமுகத்தோடு, வலது கை அபயமளிக்க இடது கை தொடையில் இருக்க, வலது கால் கீழே தொங்க, இடது கால் மடித்திருக்க 4 கைகளுடன் காட்சி தருகிறார். இவரது வரலாறு உலகம்மையான பார்வதி தேவி ஒருமுறை தன் தோழிகளான ஜெயா, விஜயவுடன் நீராடுவதற்காக சென்றார்.

அப்போது ஜெயா, பார்வதியிடன் அம்மையே, நமக்கு காவலாக இருப்பவர்கள் சிவ, பூத கணங்களும் நந்தி தேவரும் தானே. நமக்கென தனியாக ஒருவரைக் காவலாக நீங்கள் ஏன் உண்டாக்ககூடாது? எனக் கேட்க பார்வதி தேவியும், தன் திருமேனியில் உள்ள அழுக்கை தேய்த்து உருட்டி ஒரு உருவம் உண்டாக்கினார். பின் அதற்கு உயிர் தொடுத்தார். அவர் தான் இன்று நாம் தரிசிக்கும் ஆதிவினாயகர்.

உயிர் கொடுத்த பின் மூவரும் அவரைக் காவலாக வைத்து விட்டு குளிக்கச் சென்றனர். அந்த நேரத்தில் பார்வதியைக் காண சிவபெருமான் அவ்விடம் வந்தார். அங்கே புதுக் காவலன். சிவபெருமானை மேலும் செல்லாமல் காவலன் தடுத்து நிறுத்த போர் தொடங்கியது. இறுதியில் புதிய காவலனின் தலையைக் கொய்தார் சிவபெருமான்.

குளித்து ஓடோடி வந்த பார்வதி தான் உண்டாக்கிய உயிரை திருப்பி தர வேண்டுமென சிவபெருமானிடம் வேண்ட, அவரும் வேறு தலை இறுக்கிறதா எனப் பார்த்தார். அப்போது ஒரு யானை தலைவேறு, உடல் வேறாகக் கிடக்க, அந்த யானையின் தலையை மனித உடலோடு பொருத்த வினாயகர் உருவானார். அவரைதான் சிவ,பூத கணங்களுக்கும் முதல்வராகியதால் ‘கணபதி’ என்ற பெயரையும் கொடுத்தார்.

பார்வதி தேவி உண்டாக்கிய முதல் பிள்ளையாரே ஆதி வினாயகர் ஆவார். அவர் திலதைப்பதியில் தான் சன்னிதி கொண்டுள்ளார்.

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய எண்ணி இந்தத் தலத்துக்கு வந்த ராமபிரான், இங்கே பித்ரு தர்ப்பணம் செய்தார். ராமபிரான் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால், இந்தத் தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்று பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. அந்த நான்கு லிங்கங்களையும் கருவறையின் பின்புறத்தில் தரிசிக்கலாம். இந்த லிங்கங்களுக்கு அருகில் வலக் காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் ராமபிரானை தரிசிக்கலாம். இந்த வடிவத்தில் ராமபிரானை எங்கும் தரிசிக்க முடியாது. நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத் தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால், நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு.

காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதுபோல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுகிறது.

No comments:

Post a Comment