Monday 2 May 2016

மருது பாண்டியர்

மருது பாண்டியர்

விருதுநகரில் பிறப்பு :
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் உள்ள நரிக்குடி யில் 1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15 ஆம் தேதி உடையார்சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்றும், பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

சிவகங்கை சீமைப் போர்ப்படை :
  மருதுபாண்டியர்கள் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்து வந்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார். 1772 ல் அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதுசகோதரர்கள் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் சென்றனர். 1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தனர்.

சிவகங்கை மீட்பு :
  மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780 ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

சகோதரர்களின் ஒற்றுமை :
  மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தார்கள். இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டினர். குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கு திருப்பணி செய்தனர்.

ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் :
  ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். மருது பாண்டியர்கள் இருவரும் சேர்ந்து தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர். 1801 ஜுன் 16 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ஜம்பு தீவ பிரகடனம் என அழைக்கப்படுகிறது.

மருது சகோதரர்கள் இறப்பு :
  ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய மருது சகோதரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சோழபுரத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, 1801 ஆம் ஆண்டில் அக்டோபர் 24 ஆம் தேதி வெள்ளை அரசால் தூக்கிலிடப்பட்டனர். மேலும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவாலயம் :
  மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இவர்களது நினைவுத் தபால் தலையை இந்திய அஞ்சல் துறை 2004 அக்டோபர் மாதம் 23 ம் தேதி அன்று மதுரையில் மற்றும் சென்னையில் வெளியிட்டது. மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment