Monday 2 May 2016

3-5-2016 இன்றைய வரலாற்றுச் சுவடுகள்

3-5-2016 இன்றைய வரலாற்றுச் சுவடுகள்

உலக பத்திரிகை சுதந்திர தினம்

உலக பத்திரிகை சுதந்திர தினம் (World press Freedom Day ) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும், ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் தேதி பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.

சுஜாதா (எழுத்தாளர்)

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா அவர்கள் மே 3, 1935 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கராஜன் ஆகும். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

இவரது முதல் கதை 1953 இல் சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. ஜூனியர் விகடனில் ‘ஏன் எதற்கு எப்படி?’ என்ற பெயரில் வெளிவந்த இவரது கேள்வி-பதில் பகுதி மிகவும் பிரபலமானது. அறிவியலை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடம் கொண்டுசென்றதற்காக தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 1993 இல் இவருக்கு விருது வழங்கி கவுரவித்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். எழுத்துப் பணிக்காக “கலைமாமணி” விருது பெற்றுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 250 சிறுகதைகள், 10 அறிவியல் நூல்கள், 10 நாடகங்கள், கவிதை நூல் ஆகியவற்றைப் படைத்துள்ளார். எழுத்துலக ஜாம்பவான் என்று புகழப்பட்ட சுஜாதா ரங்கராஜன் பிப்ரவரி 27, 2008இல் மறைந்தார்.

1913 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி இந்தியாவின் முதல் திரைப்படம் ‘ராஜா அரிச்சந்திரா’ மும்பையில் திரையிடப்பட்டது.

1939 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment