Thursday 14 April 2016

மோதேரா சூரியன் கோவில்

மோதேரா சூரியன் கோவில்

சூரியன் கோவில் என அழைக்கப்படும் மோதேரா சூரியன் கோவில், மோதேரா சௌராஷ்ர தேசத்தை ஆண்ட சோலாங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனின் மனைவியால், கி.பி.1026-இல் கட்டப்பட்டு சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்டது.

அமைவிடம் :
மோதேரா சூரியன் கோவில், குஜராத் மாநிலத்தில் மகிசனா மாவட்டத்தில், புஷ்பாவதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு :
சௌராஷ்டிர தேசத்தை ஆண்ட சோலங்கி குல மன்னர் முதலாம் பீமதேவனின் மனைவி மோதேராவில் சூரியன் கோவிலைகட்டி முடித்தார். அப்போது ஆப்கானிய மன்னர் கஜினி முகமது சௌராஷ்டிர தேசத்தில் உள்ள சோமநாதபுரம் சிவன் கோவிலை இடித்து அங்குள்ள செல்வங்களை கவர்ந்து செல்லும் நோக்கத்தில் படையெடுத்து வரும் வழியில் மோதேராவில் உள்ள சூரியன் கோவிலின் சில பகுதிகளை இடித்து விட்டுச் சென்றார்.

பின்னர் கி.பி.1299-இல் அலாவுதீன் கில்சியின் படைகள் மோதேராவில் உள்ள சூரியன் கோவிலின் சில பகுதிகளை சேதப்படுத்திவிட்டு, சோமநாதபுரம் சிவன் கோவிலையும் இடித்து தரைமட்டமாக்கி விட்டுச் சென்றனர்.

பின்னர் வந்த சௌராஷ்டிர தேச இந்து மன்னர்களும் வணிகர்களும் சேர்ந்து சூரியன் கோவிலை மீண்டும் கலைநயத்துடன் புதுப்பித்தனர்.

கோவிலின் அமைப்பு :
மோதேரா சூரியன் கோவில் சூரிய குண்டம், சபா மண்டபம் மற்றும் குடா மண்டபம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துக் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் சூரிய குண்டம் எனும் இராமகுண்ட குளம், பெரிய செவ்வக வடிவில் அமைந்த ஆழமான குளம்.

சூரிய குண்ட குளத்தில் நான்கு முகப்பு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு மேடைகளில் சிறு பிரமிடு வடிவத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு மேடைகளில் விஷ்ணு, கணபதி மற்றும் நடராசர் மற்றும் பார்வதி ஆகிய தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

வியக்கத்தக்க அளவில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய 52 தூண்களை கொண்டது சபா மண்டபம். இந்த 52 தூண்கள், ஒரு ஆண்டின் 52 வாரங்களை குறிப்பதாகும்.

மண்டபத்தில் சூரிய தேவனின் கருவறை அமைந்துள்ளது. கருவறையில் சூரிய தேவன் தனது தேர்த் தட்டில் அமர்ந்து, அருணன் தேரில் கட்டப்பட்டுள்ள குதிரைகளை ஓட்டும் நிலையில் தங்கத்தால் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

செங்கதிரோனின் கண்வீச்சு :
இந்தக் கோவிலுக்குச் சம இரவு நாட்களில் செல்வது மிகச் சிறப்பு. மார்ச் 20-ம் தேதி முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரையான நாட்களில்தான், செங்கதிரோனின் கண் வீச்சு நேராக கர்ப்பக்கிரகத்தின் மேல் விழுந்து கோவில் முழுவதும் ஜொலிக்கும். எல்லா மூலை முடுக்குகளிலும் வெளிச்சம் பாய்ந்து ஆலயமே பொன்னொளியால் மிளிரும்.

கோவிலின் சிறப்புகள் :
பண்டைய இந்தியாவின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் மற்றும் வரலாற்றையும் விளக்கும் விதமாக மோதேரா சூரியன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டின் சனவரி மாதம் மூன்றாம் வாரத்தில், புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர்களால் நாட்டியாஞ்சலி திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

சூரிய குண்ட குளம் நிலக் கணக்கியல் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மோதேரா சூரியன் கோவில் சாளுக்கிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக தனிச்சிறப்புகளுடன் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோவிலாகும்.

No comments:

Post a Comment